For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி விவகாரத்தில் கர்நாடகா அநாகரீக அணுகுமுறை.. மத்திய அரசே, பாடம் புகட்டுக: ராமதாஸ் ஆவேசம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி விவகாரத்தில் முரண்டுபிடிக்கும் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு பாடம் புகட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக நேற்று முதல் ஒரு வாரத்திற்கு காவிரியில் வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதை அவமதிக்கும் வகையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை ஒத்திவைப்பதென கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுப்பதற்காக கர்நாடக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நாளை நடத்தவும் கர்நாடக அமைச்சரவை தீர்மானித்திருக்கிறது.

Union Government should teach a lesson to Karnataka government says PMK founder Ramadoss

கர்நாடக அரசின் முடிவை மேலோட்டமாக பார்க்கும்போது, தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை தட்டிக் கழிப்பதற்கான முடிவாக தோன்றும். ஆனால், இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதன் மூலம் ஜனநாயகத்தின் இரு தூண்களான உச்சநீதிமன்றத்திற்கு அதிக அதிகாரமா? சட்டப்பேரவைக்கு அதிக அதிகாரமா? என்ற அரசியலமைப்பு சட்ட மோதலை உருவாக்க கர்நாடக அரசு சதி செய்கிறது. கர்நாடக அரசின் இந்த அநியாயமான அணுகுமுறை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது; கடுமையாக கண்டிக்கத்தக்கது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை ஒத்திவைத்துள்ள கர்நாடக அரசு, நாளை கர்நாடக சட்டமன்றத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்போகிறது. பின்னர் இந்த வழக்கு வரும் 27 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது ''தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கக் கூடாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அதை செயல்படுத்துவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை. அதனால் தான் தமிழகத்திற்கு நீர் திறக்க முடியவில்லை'' என கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்.

அதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தால் அது கர்நாடக சட்டமன்றத்துடனான மோதலாக உருவெடுக்கும். அதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படும்... அதைப்பயன்படுத்தி இச்சிக்கலில் தப்பித்துக் கொள்ளலாம் என்பதே கர்நாடக அரசின் திட்டமாகும். இது அநாகரீகமான அணுகுமுறையாகும்.

கர்நாடக அரசு நினைத்தால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வினாடிக்கு 6000 கன அடி வீதம் 7 நாட்களுக்கு தண்ணீர் வழங்க முடியும். கர்நாடக அணைகளில் போதிய அளவு நீர் இல்லை என்பது பொய்யாகும்.

நேற்றிரவு நிலவரப்படி, கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 10,460 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, அந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 5846 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

இதனால் அந்த அணைகளின் நீர் இருப்பு நேற்று முன்நாள் இருப்பான 26.16 டி.எம்.சியை விட ஒரு டி.எம்.சி அதிகரித்திருக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட வில்லை என்று ஒருபுறம் கூறும் கர்நாடக அரசு எதற்காக இவ்வளவு நீர் திறக்கப்படுகிறது என்பதை விளக்க வேண்டும். அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வரும்போது அதில் தமிழகத்திற்கு 6000 கன அடி தண்ணீர் தர கர்நாடக அரசு மறுப்பதற்கு காரணம் கன்னட மக்களிடம் நிலவும் தமிழர் எதிர்ப்பு உணர்வை வாக்கு வங்கியாக மாற்றி விடுவதற்கு துடிப்பது தான்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் லாபம் தேடுவதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பதும், உச்சநீதிமன்றத்துடன் மோதி அரசியலமைப்பு சட்ட சிக்கலை ஏற்படுத்த முயல்வதும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவியேற்றுக் கொண்ட அரசுக்கு அழகல்ல.

அதுமட்டுமின்றி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் தேவேகவுடா,'' தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது. ஆட்சிப் பொறுப்பிலிருந்தும் சித்தராமய்யா விலகக் கூடாது. எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பிரதமராக பதவி வகித்த தேவேகவுடா, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசுவதும், சவால் விடுப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை ஆகும்.

கர்நாடக அரசின் செயல்களும், அங்குள்ள அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளும் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளன. காவிரிப் பிரச்சினையில், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வெளியான போது, அதை கர்நாடகம் ஏற்க மறுத்து அவசர சட்டம் பிறப்பித்தது. அது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதன்பிறகும் இந்தியாவில் அரசியலமைப்பு சட்ட மோதலை ஏற்படுத்த கர்நாடக அரசு முயல்வதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக செயல்படுவது எத்தகைய குற்றம் என்பதை உணர்த்தும் வகையில் கர்நாடக அரசுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். அத்துடன் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Union Government should teach a lesson to Karnataka government for defies Supreme court order in the Cauvery issue, says PMK founder Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X