For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசி பெருமாள் மரணத்திற்கு அரசுதான் பொறுப்பு... மதுக்கடைகளை இழுத்து மூடுங்கள்... வைகோ ஆவேசம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காந்தியவாதி சசிபெருமாள் மரணத்திற்கு தமிழக அரசுதான் காரணம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் உடனடியாக மதுக்கடைகளை மூடுவதுதான் சசிபெருமாளுக்கு செய்யும் மரியாதை என்றும் வைகோ கூறியுள்ளார்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி கன்னியாகுமாரி மாவட்டம் உண்ணாமலைக் கடை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது காந்தியவாதி சசிபெருமாள் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

வைகோ தனது அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்துக்கு அருகில் உள்ள உண்ணாமலைக்கடை எனும் ஊரில் தேவாலயங்களுக்கும், பாடசாலைகளுக்கும் அருகில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொதுமக்கள் போராடி வந்தார்கள்.

இந்தப் பின்னணியில் காந்தியவாதி சசிபெருமாள் அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்பொழுது தமிழக அரசு அதிகாரிகள் ஒரு வார காலத்துக்குள் டாஸ்மாக் கடையை அந்த இடத்திலிருந்து அகற்றி விடுவோம் என்று உறுதி அளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை.

நேற்றைய தினம் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் நல்லடக்க நிகழ்ச்சிக்கு சசிபெருமாள் வந்திருந்தார். அங்கிருந்து நேற்று இரவே குமரி மாவட்டத்துக்கு வந்த சசிபெருமாள் அவர்கள் இன்று அதிகாலையிலேயே உண்ணாமலைக்கடை ஊருக்கு அருகில் 150 அடி உயரத்துக்கும் அதிகமாக உள்ள அலைபேசி கோபுரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

டாஸ்மாக் கடையை அகற்றாவிடில், என் கையில் உள்ள தீப்பந்தத்தால் என்னை தீ வைத்துக் கொளுத்தி உயிர் விடுவேன் என்று கூறினார். 5 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் வெறும் பேச்சுவார்த்தை நடத்தினார்களே தவிர, அந்த டாஸ்மாக் கடையை அகற்றவில்லை. வயது முதிர்ந்த சசிபெருமாள் அவர்களின் மனதில் எவ்வளவு உறுதியும் வைராக்கியமும் இருந்திருந்தால் கோபுரத்தின் உயரத்துக்குச் சென்றிருக்க முடியும் என்பதை நாமே ஊகித்துக்கொள்ளலாம். இதன் பிறகு காவல்துறையினர் அவரை கோபுரத்தின் உச்சியில் இருந்து அவரை கயிற்றால் கட்டி வலுக்கட்டாயமாக கீழே கொண்டுவந்துள்ளனர். கீழே வந்தவுடன் அவர் இறந்துவிட்டார் என்று காவல்துறை அறிவித்தது.

ரத்தம் வந்தது எப்படி?

ரத்தம் வந்தது எப்படி?

செய்தியைக் கேள்விப்பட்ட நான், நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு விரைந்தேன். குழித்துறை மருத்துவமனைக்கு சசிபெருமாள் கொண்டுசெல்லப்பட்டார் என்று அறிந்து மருத்துவமனைக்கு எதிரே திரண்ட பொதுமக்களை காவல்துறையினர் அடித்து விரட்டினர். சசிபெருமாளின் சடலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று அறிந்து அங்கு சென்றேன். சசிபெருமாள் உடலைப் பார்த்தபோது கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானேன். அவர் கழுத்து, மார்பு, வயிறு முழுவதும் இரத்தத்தால் நிறைந்து உடைகள் நனைந்திருந்தன. மூக்கு வழியாகவும் இரத்தம் வந்துள்ளது. அப்படியானால் சசிபெருமாள் எப்படி உயிர் நீத்தார்?

அடிபட்டு இறந்தாரா?

அடிபட்டு இறந்தாரா?

மனிதாபிமானம் இன்றி அவரை கயிற்றால் கட்டி வலுக்கட்டாயமாக அலைபேசி கோபுரத்திலிருந்து அகற்ற முற்பட்டதில் பலத்த இரத்தக் காயம் ஏற்பட்டு, இருதயம், நுரையீரல், கல்லீரல் பகுதிகளில் அடிபட்டு அவர் இறந்திருக்க வேண்டும். அப்படியானால் சசிபெருமாள் மரணம் இயற்கை மரணம் அல்ல, கொலையால் ஏற்பட்ட மரணமாகத்தான் இருக்க முடியும்.

நீதி விசாரணை தேவை

நீதி விசாரணை தேவை

உண்மையைக் கண்டறிய இந்தச் சம்பவம் குறித்து பதவியில் தற்போதுள்ள உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த நேர்மை தவறாத மருத்துவர்களைக் கொண்டு ஒரு நீதிபதி முன்னிலையில் வீடியோ காணொளி கண்காணிப்பில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

அதிமுக அரசே பொறுப்பு

அதிமுக அரசே பொறுப்பு

சசிபெருமாளின் துயர மரணம் நம் நெஞ்சைப் பிளக்கிறது. இந்தத் தியாகியின் மரணத்துக்கு அண்ணா தி.மு.க. அரசே பொறுப்பாளியாகும் என குற்றம் சாட்டுகிறேன். தமிழகத்தில் முழுமையாக மதுக்கடைகளை ஒழித்து, மதுவிலக்கை நிலைநாட்டுவது ஒன்றுதான் சசிபெருமாள் அவர்களின் உயிர் தியாகத்துக்கு நாம் செய்கின்ற உண்மையான அஞ்சலியாகும்.

முழுஅடைப்பு போராட்டம்

முழுஅடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் சேர்ந்து சசிபெருமாள் மரணத்துக்குக் காரணமான தமிழக அரசைக் கண்டித்து நாளைய தினம் சனிக்கிழமை குமரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

சபதம் எடுப்போம்

சபதம் எடுப்போம்

வீரத் தியாகியின் குறிக்கோளை நிறைவேற்ற தமிழ்நாட்டில் தாய்மார்களும், மதுப்பழக்கத்துக்கு ஆளாகாத இளைஞர்களும், குடிப்பழக்கம் எனும் நரகத்தில் விழாத 95 சதவிகித மாணவர்களும் மதுக்கடைகளை ஒழிக்க சபதம் ஏற்க வேண்டும். நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

முழு மதுவிலக்கு

முழு மதுவிலக்கு

தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக தமிழக அரசு மூட வேண்டும்; முழு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற ஆணவத்தோடு அண்ணா தி.மு.க. அரசு இனியும் செயல்படுமானால், தமிழக மக்கள் குறிப்பாக தாய்மார்கள் கொதித்து எழுந்து டாஸ்மாக் கடைகளை, ஒயின் ஷாப்புகளை அகற்றி அப்புறப்படுத்தும் நிலைமை உருவாகியே தீரும். அந்த நிலைமையை ஏற்படுத்த தமிழக நலனில் அக்கறையுள்ள அனைவரும் உறுதி எடுப்போம்!

இரங்கலை தெரிவிக்கிறேன்

இரங்கலை தெரிவிக்கிறேன்

இந்த உத்தமத் தியாகி சசிபெருமாளை இழந்து துயரத்தில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK General secretary Vaiko has blamed the TN Govt for the death of Gandhian leader Sasiperumal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X