For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலை புலி ஆதரவாளர்களால் முல்லை பெரியாறுக்கு ஆபத்து என்பதா?: தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: முல்லை பெரியாறு அணைக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக விடுதலை புலிகள் மீது தமிழக அரசு பழி சுமத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாகத் திகழும் பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டும்; 1979 க்கு முன்னர் இருந்ததுபோல, 152 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கப்பட வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகளாக அர்ப்பணிப்போடு போராடி வரும் இயக்கம் எங்களின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும்.

பென்னி குயிக் கட்டிய அணையை எப்படியும் உடைத்துத் தகர்க்க, கேரள அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்தது, நீதிக்குப் புறம்பானது, தென்தமிழ்நாட்டுக்குத் தீங்கானது என்று, பேரணி, உண்ணாவிரத அறப்போர்கள், பொதுக்கூட்டங்கள், நடைபயணங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திப் போராடி வருகிறோம்.

Vaiko condemns Tamilnadu government in the Mullai Periyar dam issue

கேரள அரசியல் கட்சிகளால் அணைக்கு ஆபத்து இருக்கிறது என்பதால், கேரளக் காவல்துறையின் பாதுகாப்பை அணையில் இருந்து அகற்றி விட்டு, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என, அன்றைய தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் அவர்களிடம் நேரடியாக வாதிட்டவன் நான்.

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய அரசின் பாதுகாப்புப் படையைக் கொண்டு போய் நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தது.

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு, வழக்கம்போல தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டது.

இந்நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலம் பேரிடியாகத் தமிழர்கள் தலையில் விழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்கள் பொது நிறுவனங்களுக்கு, தீவிர மதவாத அமைப்புகளாலும், விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் முல்லைப்பெரியாறு போன்ற நீர்த்தேக்கங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று மத்திய அரசின் உள்துறை தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஈழத்தமிழர்களுக்குக் கேடு செய்யவும், நீதியைக் குழிதோண்டிப் புதைக்கவும், மத்திய அரசின் வெளிவிவகாரத் துறையும், உளவுத்துறையும் விடுதலைப்புலிகளின் மீது பொய்யான அபாண்டமான புகார்களைக் கூறி புலிகள் அமைப்புக்குத் தடையை நீட்டித்துக் கொண்டு வருகின்றது.

இந்தப் பின்னணியில் தற்போது தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், முல்லைப்பெரியாறு அணைக்கு தீவிர மதவாத அமைப்புகளாலும், விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் ஆபத்து ஏற்படும் என்பதால், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைப் கோருவதாகத் தெரிவித்து இருப்பது அக்கிரமம் ஆகும்.

கேரள அரசும், கேரள அரசியல் கட்சிகளும் பென்னி குயிக் அணையை உடைக்கக் கழுகு போலக் காத்துக் கொண்டு இருக்கின்ற நிலையில், தமிழக அரசே இப்படி உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்து இருப்பதால், கேரள அரசியல் கட்சிகளே அணையை உடைத்து விட்டு, நக்சலைட்டுகள் மீதும் தீவிரவாத அமைப்புகள் மீதும், ஏன் விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மீதும் பழிசுமத்தி விட்டுத் தப்பித்துக் கொள்ளும் வழியைத் தமிழக அரசே ஏற்படுத்திக் கொடுப்பது மன்னிக்க முடியாத செயல் ஆகும்.

அறியாமல் செய்து விட்டோம் என்று கூறித் தப்பிக்க முடியாது. அண்ணா தி.மு.க. அரசின் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கண்சாடை இன்றி, அணுவும் அசையாது என்பது அனைவரும் அறிந்த செய்தி ஆகும். வாயைத் திறந்து கொட்டாவி விடுவதற்கும் அஞ்சி நடுங்குகின்ற நிலையில்தான் அமைச்சர்களும், அதிகாரிகளும் இருக்கின்றார்கள். நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்ற பிரமாண வாக்குமூலங்கள், அமைச்சர்கள் வெளியிடுகின்ற அறிக்கைகளின் ஒவ்வொரு எழுத்தும், முதல் அமைச்சரின் அனுமதியோடுதான் வழங்கப்படுகின்றன.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று, தீர்ப்பு ஆயத்திலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்து நான் போராடி வருகிறேன். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நான் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான வழக்கு, இன்னமும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. நாங்கள் விடுதலைப்புலிகளை என்றைக்கும் ஆதரிக்கின்ற இயக்கம் என்று பொடா நீதிமன்றத்திலேயே அறிவித்தவன் நான்.

முல்லைப்பெரியாறு அணைக்குக் கேடு விளைவிக்கும் விதத்தில், கேரளத்தின் சதிச்செயலுக்குத் துணைபோகும் விதத்தில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்த அண்ணா தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கின்ற வகையில், ஜூலை 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை மதுரை மாநகரில் எனது தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டன ஆர்ப்பாட்ட அறப்போர் நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் உணர்வாளர்களும், கழகக் கண்மணிகளும் இந்த அறப்போரில் பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
Vaiko condemns Tamilnadu government's plea in the Mullai Periyar dam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X