For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யுங்கள்: கொந்தளிக்கும் வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: வழக்கு பதிவதாக இருந்தால் ஜெயலலிதா மீது தான் கொலை வழக்கு பதிய வேண்டும் என மதுரையில் செய்தியாளர்களிடம் பேசி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுவிலக்குக்காக போராடிய தம்மீது பதிந்தது ஏன் என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி சனிக்கிழமையன்று கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் அங்குள்ள மதுக்கடையை முற்றுகையிட்டனர். ராஜபாளையம்- கோவில்பட்டி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.

வைகோவின் தாயார்

வைகோவின் தாயார்

போராட்டத்தில் வைகோவின் தாயார் மாரியம்மாள், தம்பி ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

இதற்கிடையே ஞாயிறன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் கலிங்கப்பட்டியில் உள்ள மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மதுக்கடை முன்பு குவிக்கப்பட்டு மதுக்கடையில் விற்பனை நடைபெற்றது. இதனால் கலிங்கப்பட்டி பகுதி பொதுமக்கள் கொந்தளித்தனர்.

மதுபாட்டில்கள் உடைப்பு

மதுபாட்டில்கள் உடைப்பு

மதுபாட்டில்களை வாங்கி வந்தவர்களிடம் இருந்து அதனை பறித்து ரோட்டில் போட்டு உடைத்தனர். வைகோ தலைமையில் மீண்டும் மதுக்கடை முன்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சங்கரன் கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் வாகனங்களும், அரசு பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

வைகோ போராட்டம்

வைகோ போராட்டம்

இந்த நிலையில் மாலையில் போராட்டத்தில் கலந்து கொள்ள வைகோ திறந்த ஜீப்பில் வந்தார். அப்போது அவருடன் ம.தி.மு.க.வினர், மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்தனர். போராட்டக்காரர்கள் மதுக்கடை அருகே சென்று விடாமல் இருக்க சாலையில் போலீசார் தடுப்பு ஏற்பாடுகள் செய்தனர்.

செல்போன் கோபுரம்

செல்போன் கோபுரம்

அப்போது ம.தி.மு.க. தொண்டரான ராமலிங்கம் அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி மதுக்கடையை மூட வேண்டும் என கோஷமிட்டார். அவரை போலீசார் கீழே இறங்கும்படி வற்புறுத்தினர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டனர். இதனால் ம.தி.மு.க. வினருக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

மதுக்கடை சூறையாடல்

மதுக்கடை சூறையாடல்

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். நிலைமை மோசமானதால் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இதனால் கிராமமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

கற்கள் வீச்சு தடியடி

கற்கள் வீச்சு தடியடி

கிராம மக்களை சமாதானப்படுத்த வைகோ முயன்றார். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் டாஸ்மாக் கடை முழுவதுமாக சூறையாடப்பட்டது. இந்த சம்பவத்தின் போது கற்கள் வீசப்பட்டன. இதில் போலீசார் காயமடைந்தனர். அவர்கள் நெல்லை மற்றும் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதே போல் போலீசார் நடத்திய தடியடியால் வைகோ, தம்பி ரவிச்சந்திரன் உள்ளிட்ட கிராமமக்கள் சிலர் காயமடைந்தனர்.

சாலைமறியல்

சாலைமறியல்

தடியடி சம்பவத்தை கண்டித்து வைகோ தலைமையில் கிராம மக்களும், ம.தி.மு.க.வினரும் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேசிய வைகோ, ''அமைதியாக போராட்டம் நடந்தது. அப்போது எங்கள் தொண்டர்கள் இங்கே இருந்த மதுபானக் கடையை அடித்து நொறுக்கினார்கள். அப்போது போலீசாருக்கும், எங்களது தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடியடியில் காயம்

தடியடியில் காயம்

அந்த நேரத்தில் எங்கள் கட்சித் தொண்டர் ஒருவர் கல்லை எடுத்து எறிந்தார். நாங்கள் அவரைப் பிடித்து அடித்திருக்கிறோம். ஆனால், அதற்குள் காவல்துறையினர் எங்கள் கட்சியினர் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

செத்தாலும் கவலையில்லை

செத்தாலும் கவலையில்லை

அதேபோல், என் மீதும் 6 கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஏன் என்மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி வேண்டும். என்னை கொல்வதற்காகவா. அப்படியே நான் செத்தாலும் கவலைப்பட மாட்டேன். அதுவும் எனது சொந்த ஊரில், நான் பிறந்த இந்த மன்னில் சாவது எனக்கு பெருமை தானே என்றார்.

ஆம்பளையா இருந்தா சுடு

ஆம்பளையா இருந்தா சுடு

தொடர்ந்து பேசிய அவர், காக்கி சட்டை போட்ட சரியான ஆம்பளையாக இருந்தால் என்னை சுடு. நான் தனியாக வரட்டுமா? அப்போது சுடுகிறாரா? இப்போது வருகிறேன்'' என்று கூறியவாரே வேனில் இருந்து இறங்கினார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதனையடுத்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முருகன், போலீஸ் சூப்பிரண்டு விக்கிரமன் ஆகியோர் விரைந்து வந்து வைகோவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் வைகோ கிராம மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், போராட்டத்தை கைவிட்டு மற்றவர்களை கலைந்து போகும்படி கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

52 பேர் மீது வழக்கு

52 பேர் மீது வழக்கு

மதுக்கடை சூறையாடப்பட்டது, போலீசார் மீது கற்கள் வீசியது தொடர்பாக சங்கரன்கோவில் தாசில்தார் சிவக்குமார், கரிவலம் வந்த நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அழகு கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, அவரது தம்பி ரவிச்சந்திரன் உள்பட 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

என்னென்ன பிரிவுகள்

என்னென்ன பிரிவுகள்

அவர்கள் மீது 147 (கலகத்தில் ஈடுபடுதல்), 148 (ஆயுதங்களால் தாக்கி கலகத்தில் ஈடுபடுதல்), 153 (மறியல் செய்து பொது சொத்துக்களை சேதப்படுத்துதல்), 294பி(அவதூறாக பேசுதல்), 188(அரசு உத்தரவை மீறுதல்), 332(அரசு ஊழியர்களை தடுத்து தாக்கி காயப்படுத்துதல்), 341 (கூட்டத்தை தவறாக வழிநடத்துதல்), 353(தாக்குதல் நடத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்), 447(எல்லை மீறி குற்றச் செயலில் ஈடுபடுதல்), 307 (கொலை முயற்சி), 435 (ஏ,பி,சி.),3(1), 149 (சட்ட விரோதமாக கூடி பொது சொத்துக்களை சேதப்படுத்துதல்) ஆகிய12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ்படை குவிப்பு

போலீஸ்படை குவிப்பு

இதனால் வைகோ உள்ளிட்டோர் எந்த நேரமும் கைதாகலாம் என்ற தகவல் பரவியது. இதனால் கலிங்கப்பட்டியில் தொடர்ந்து பதட்டம் நிலவியது. சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமணன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

கொலை வழக்கு

கொலை வழக்கு

பதற்றமும் பரபரப்பும் அதிகரித்த நிலையில் வைகோ கைது செய்யப்படவில்லை அவர் மதுரைக்கு காரில் கிளம்பி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதுவிலக்குக்காக போராடிய தம்மீது பதிந்தது ஏன் என வைகோ கேள்வி எழுப்பினார். வழக்கு பதிவதாக இருந்தால் ஜெயலலிதா மீது தான் கொலை வழக்கு பதிய வேண்டும் என்றும் கூறினார்.

அடித்து நொறுக்குங்கள்

அடித்து நொறுக்குங்கள்

நேற்று போராட்டம் நடத்தியும் கலிங்கப்பட்டியில் மீண்டும் கடையை திறக்கும் பணி நடக்கிறது என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த போராட்டத்திற்கு ஜெயலலிதா பதில் சொல்லியே ஆக வேண்டும். தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை அடித்து நொறுக்கவேண்டும்.

காவல்துறையினர் கருவிதான்

காவல்துறையினர் கருவிதான்

காவல்துறையினர் வெறும் கருவிதான். அவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. என்மீது காவல்துறையினர் அடித்தனர். அப்புறம்தான் மக்கள் கோபம் அடைந்தனர். கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை வீசினர். 6 குண்டுகளும் என்மீது வீசப்பட்டது. என்னை நோக்கியே வீசினர். என் தம்பி மீது காயம் ஏற்பட்டது. வானத்தை நோக்கி சுட்டனர். என்மீது சுடச்சொன்னேன். இவ்வளவும் செய்யச் சொன்னது ஜெயலலிதாதான். எனவேதான் ஜெயலலிதா மீது கொலைவழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்கிறேன்.

திறக்கட்டும் பார்க்கலாம்

திறக்கட்டும் பார்க்கலாம்

இனிமேல் என்னுடைய ஊரில் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்தால், ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் வருந்தும்படியாக மாறிவிடும் என்றும் கூறினார். கைதாவதற்கு நான் வருத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார் வைகோ.

English summary
MDMK general secretary Vaiko has said that police should book Jayalalitha instead of him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X