For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டது....: வைரமுத்து சோகம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவின் கடைக்கோடியில் கடைசி குடிமகனாய் பிறந்து இந்தியாவின் முதல் குடிமகனாய் உயர்ந்தது சந்தர்ப்பத்தால் வந்தது அல்ல. சாதனையால் வந்தது. எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய், உடைந்து நிற்கிறேன் என்று முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள இரங்கல் அறிக்கை:

இதயத்தை இறுக்கிப்பிடித்தப்படி, இந்த இரங்கல் செய்தியை எழுதுகிறேன். எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய், உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப்பெருமகன் நம்மிடையே இனி இல்லை என்பதை நம்ப முடியவில்லை.

Vairamuthu Tributes for Dr. A.PJ. Abdul Kalam

அணு விஞ்ஞானி அப்துல்கலாம் பெருமுயற்சியால் இந்தியா தன் சொந்த ஏவுகணையை செலுத்தியபோது, வெள்ளை மாளிகையே அண்ணாந்து பார்த்தது. அவர் அறிவின் துணையால் பொக்ரான் அணுகுண்டு சோதிக்கப்பட்ட போதி, வல்லரசுகள் எல்லாம் மூக்கில் மேல் விரல் வைத்தன. அரசியலுக்கு வெளியே இருந்து அவர் குடியரசு தலைவராக ஆன போது இந்தியாவே எழுந்து நின்று கைதட்டியது. தாய்மொழி வழிக்கல்வி கற்ற ஒருவர் தாயகத்தையே ஆளமுடியும் என்ற அரிய சாதனையை நிகழ்த்தியவர் அப்துல்கலாம்.

அவர் படிப்பில் ஞானி. பழக்கத்தில் குழந்தை. 40 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்றும் அதை தன் தலையில் சூடிக் கொள்ளாதவர். இந்த நூற்றாண்டில் இளைய சமுதாயத்தின் கனவு நாயகன். இளைஞர்களை கனவு காண சொன்னவர். ‘தூங்கி காண்பதில்லை கனவு, உங்களை தூங்க விடாததே கனவு' என்று லட்சியத்திற்கு இலக்கணம் எழுதியவர்.

தன் கடைசி நிமிடம் வரை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுப்பதிலேயே அவரது காலம் கழிந்திருக்கிறது. சென்ற ஆண்டு என் மணி விழாவிற்கு வந்து வாழ்த்திய பெருமகனுக்கு ஒரு மாலை அணிவித்தேன். அந்த மாலையை கூட தனக்கு சொந்தமாகி விடக்கூடாது என்று அதை எனக்கே அணிவித்து விட்ட புனிதர் அவர்.

அவர் பிரம்மச்சாரி தான். ஆனால் இந்தியாவே அவரது குடும்பம். அவர் எந்த செல்வத்தையும் சேர்த்து வைக்கவில்லை. அவரது ஞானச்செல்வம் தான் அவர் இந்தியாவிற்கு எழுதி வைத்திருக்கும் சொத்து.

தடம் மாறும் சமூகமும், தடுமாறும் அரசியலும் அப்துல்கலாமின் ஒழுக்க நெறிகளை பின்பற்றினால் நாடு நலம் பெறும். அப்துல் கலாம் இந்தியாவிற்கு எழுதி வைத்து போகும் மரணவாசகம் இதுவாகத்தான் இருக்கும்.

அப்துல்கலாம் தன் செயல்களால் வாழ்ந்துகொண்டே இருப்பார். தேசத்தின் நதிகளிலும், மலைகளிலும், மரங்களிலும், மலர்களிலும், மக்கள் மனங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

அய்யா அப்துல்கலாம் அவர்களே... உங்கள் புகழை வாழ்நாள் எல்லாம் உயர்த்திப்பிடிக்கும் திருக்கூட்டத்தில் ஒருவனாய் நானும் இருப்பேன்.

கண்ணீரோடு வணங்குகிறான், அய்யா உங்கள் வைரமுத்து என்று கூறியுள்ளார்.

English summary
Lyricist Varamuthu condolence the death of former President Dr APJ Abdul Kalam, who had earned the sobriquet of the ‘People’s President'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X