ஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடினால் குண்டர் சட்டமா.. வளர்மதி கைதுக்கு வைகோ, வேல்முருகன் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவி வளர்மதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் பிரச்சனைகளுக்காகப் போராடிய மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும், இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும் என்றும் வைகோ கூறியுள்ளார். கல்லூரி மாணவி வளர்மதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறுகளைத் தோண்ட அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரச பயங்கரவாதம்

அரச பயங்கரவாதம்

மாணவி வளர்மதியின் கைதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்றும் இல்லாதபடி தமிழகமே இன்று போராட்ட களமாகியுள்ளது. அதே நேரம் அமைதியான முறையில் அறவழியிலேயே போராடும் மக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்க்கப்படுகிறது. இந்தப் போராட்டங்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்களால் ஏற்பட்டவையே!

போராடினால் அடக்குமுறை

போராடினால் அடக்குமுறை

கார்ப்பொரேட்டுகளின் அடியாள் மத்தியிலும் அடிப்பொடியாள் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருப்பதால்தான் தமிழ்ச் சமூகம் சந்தைக்காடாகவும் தமிழ் மாநிலம் வேட்டைக்காடாகவும் ஆகியிருக்கிறது. தமிழக வளமும் நலமும் கார்ப்பொரேட்டுகளால் பறிக்கப்படுகிறது. தமிழர் உணர்வும் உரிமையும் கார்ப்பொரேட் அடியாளால் நசுக்கப்படுகிறது. இதனைத் தட்டிக் கேட்கும் போராட்டம் அடக்குமுறைக்குள்ளாகிறது.

துண்டறிக்கை

துண்டறிக்கை

போராடுபவர்கள் மேல் கருப்புச் சட்டங்கள் பாய்ச்சப்படுகிறது. அதையும் தாண்டி அரச பயங்கரவாதமே அவிழ்த்துவிடப்படுகிறது. அரசின் இத்தகைய ஆள்தூக்கிச் சட்டத்தில் அண்மையில் வளர்மதி என்ற ஒரு மாணவியும் சிக்கவைக்கப்பட்டுள்ளார். மாணவி வளர்மதி செய்ததெல்லாம் ஜெயந்தி என்பவரோடு சேலம் அரசு பெண்கள் கலைக் கல்லூரி முன் நின்றுகொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்களை விநியோகித்ததுதான்.

கருவறுக்கும் காரியம்

கருவறுக்கும் காரியம்

இதற்காக கடந்த 13ந் தேதியன்று இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் நேற்று திடீரென வளர்மதி மேல் குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பாய்ச்சி கோவை சிறைக்கு அவரை மாற்றியுள்ளனர். மோடியின் கைக்கூலியாக மாறிவிட்ட எடப்பாடி அரசு மோடியின் விருப்பப்படி தமிழினத்தைக் கருவறுக்கும் காரியத்தில் இறங்கியிருக்கிறது. அதற்காக அரச பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்துவிட அது தயங்கவில்லை.

திருமுருகன் காந்தி கைது

திருமுருகன் காந்தி கைது

ஏற்கனவே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையை நினைவுகூர்ந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட நால்வர் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியது. கதிராமங்கலத்தில் மீத்தேன் எதிர்ப்பு இயக்கத் தலைவர் பேராசிரியர் செயராமன் உட்பட 10 பேரை பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர் சங்கத்தில் இடம்பெற்றிருந்த இளந்தமிழர் அமைப்பைச் சேர்ந்த நான்கு தோழர்களை கைது செய்தும் சிறைப்படுத்தியுள்ளது.

அதிமுகவிற்கு பயம்

அதிமுகவிற்கு பயம்

இப்படி அரசின் அடக்குமுறை அரச பயங்கரவாதமாகவே உருவெடுத்திருக்கிறது. காரணம் அமைதியாகப் போராடும் மக்களைப் பார்த்தேகூட அதிமுக அரசுக்கு பயம்! ஊழலில் புழுத்த புழுவாய் நெளியும் அரசுக்கு சிறு அசைவும்கூட பயத்தை ஏற்படுத்தும் என்பதை மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்ததே வெளிப்படுத்துகிறது. அமைதியாக அறவழியில் போராடுவது மற்றும் எழுத்து, கருத்து, பேச்சு சுதந்திரம் என்பன அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள்.

எடப்பாடிக்கு கண்டனம்

எடப்பாடிக்கு கண்டனம்

ஆனால் அவற்றை மறுத்து அரச பயங்கரவாதத்தையே கட்டவிழ்க்கும் எடப்பாடி அரசை வன்மையாக கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. போராடும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய அரசு, அதை விட்டுவிட்டு இப்படி சர்வாதிகாரத்தனமாய், தலைவிரி கோலமாய் நடந்துகொள்வது ஏன்? சிறையில் அடைத்து வைத்திருக்கும் அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கக் கோருகிறது வாழ்வுரிமைக் கட்சி. மக்களின் கோரிக்கைக் குரல்களுக்கே பயந்து நடுங்குவதா? மக்களுக்கு எதிராகத் திரும்ப வேண்டாம் என அரசை எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Vaiko Story

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Student Valarmathi were arrested under Goontas act, Vaiko, Velmurugan condemned.
Please Wait while comments are loading...