For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வண்டலூர் பூங்காவிற்குள் வெள்ளம்: விலங்குகள் வெளியேறும் அபாயம்- மக்கள் பீதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: சென்னை மற்றும் புறநகரங்களில் காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. இந்நிலையில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் 8 இடங்களில் மதில் சுவர்களும் உடைந்து நொறுங்கின. வெள்ள நீர் பூங்காவிற்குள் பாய்ந்ததால் விலங்குகள் பரிதவித்து வருகின்றன.உயிரியல் பூங்காவை விட்டு ஏராளமான விலங்குகள் வெளியேறும் அபாயம் உள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டலுார் பூங்காவில் 1,900 ஏக்கர் பரப்பில் 85 அமைப்பிடங்களில் 2,080 விலங்குகள் உள்ளன. புலி, சிங்கம், சிறுத்தை, கரடி, கழுதைப்புலி, யானை உள்ளிட்ட 34 வகையான பாலுாட்டிகள்; ராஜநாகம், நாகம், முதலை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஊர்வன வகை விலங்குகள்; 20க்கும் மேற்பட்ட பறவை வகைகள் உள்ளன.

மதில் சுவர் உடைந்தது

கடந்த மாத இறுதியில் கேளம்பாக்கம் சாலையில் இந்த பூங்காவின் சுற்றுச்சுவர் திடீரென உடைந்து விழுந்தது. பூங்கா நிர்வாகத்தினர், அவசர கதியில் சுற்றுச்சுவர் உடைப்பை சரி செய்தனர். நேற்று விடாமல் மழையால் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் எட்டு இடங்களில் பலத்த சத்தத்துடன் பூங்காவின் சுற்றுச்சுவர் உடைந்து விழுந்தது. அதே வேகத்தில் பூங்காவுக்குள் வெள்ள நீர் காட்டாற்று வெள்ளம் போல் வேகமாக நுழைந்தது.

மேலும், அந்த வெள்ள நீர் சூழ்ந்து அபாய நிலையில் வண்டலூர் பூங்கா உள்ளது. மேலும், வண்டலூர்-சிங்கப்பெருமாள் கோவில் இடையே ஜி.எஸ்.டி. சாலையில் ஒருபுறம் வெள்ளம் சூழ்ந்ததால் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை மூழ்கியதால் போக்குவரத்து முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காட்சியை பேருந்தில் அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போன் மூலம் படம் பிடித்து சமூக வலைதளங்களிலும் வாட்ஸ் ஆப்பிலும் வெளியிட்டுள்ளனர்.

பூங்காவிற்குள் வெள்ளநீர் புகுந்த காரணத்தால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், வனத்துறை அமைச்சர் ஆனந்தன், வனத்துறை முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மெல்கானிக்கு தகவல் கொடுத்தனர்.

செல்ல முடியாத அமைச்சர்

வண்டலுார் பூங்காவைப் பார்வையிட அமைச்சர் ஆனந்தன், ஓ.எம்.ஆர்., சாலை வழியாக அங்கு விரைந்தார். பூங்காவை நெருங்கிய நிலையில் வெள்ள நீரை கடந்து செல்ல முடியாததால் வேறு வழியின்றி திரும்பிச் சென்றார். ஆனால் வனத்துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மெல்கானி மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கிருஷ்ணகுமார் போன்ற உயர் அதிகாரிகள் பூங்காவுக்கு விரைந்தனர்.

நடந்து சென்ற அதிகாரிகள்

தாம்பரத்தை தாண்டி செல்ல முடியாததால் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக பூங்காவை சென்றடைந்தனர். எப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக, அங்கு இரவு தங்கி விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதுவே நிலைமையின்
தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.

பூங்காவிற்கு விடுமுறை

வண்டலுார் பூங்காவில் உள்ள விலங்குகள் தப்பிச் செல்லாது' என, அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தாலும் அங்கு சுதந்திரமாக சுற்றித் திரியும், நரி, மான் போன்ற விலங்குகள் தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளது என்பதை வனத்துறையினர் ஒப்புக்கொண்டனர். மான்கள் வெளியேறி செல்லும் நிலையில், சிறுத்தை இருக்கும் பட்சத்தில் அதுவும் உடைந்த சுவர் வழியாக அதைத் தேடி செல்லும் வாய்ப்பு உள்ளது. எனவே பல பிரச்னைகளை கருதி வண்டலுார் பூங்காவுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எந்த விலங்குகள் தப்பிவரக்கூடும் என்று கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

English summary
The heavy rain has damaged the compound wall around Arignar Anna Zoological Park in Vandalur. All animals are safe, zoo authorities said.According to the zoo officials, the wall on the 12-km Vandalur-Kelambakkam Road, a State Highway, collapsed at five spots due to heavy rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X