For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்களுக்கு விருப்பமே...மநகூ தலைவர்களுக்குதான் தயக்கம்: ஸ்டாலினுக்கு திருமா கடிதம்!

மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமது கட்சி ஏன் பங்கேற்க இயலாது என்பதை விளக்கி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கடிதம் அனுப்பியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால் திமுக கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடிதம் அனுப்பியுள்ளார்.

காவிரி பிரச்சனைக்காக எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். ஆனால் இக்கூட்டத்தை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும் என அதன் ஒருங்கிணைப்பாளரான மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்திருந்தார்.

VCK not to participate in DMK's All party meeting, says Thirumavalavan

ஆனால் திமுகவின் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மக்கள் நலக் கூட்டணியின் அங்கமான விடுதலைச் சிறுத்தைகள் விரும்பியது. இதையடுத்து இடதுசாரிகள், மதிமுக ஆகியவற்றின் தலைவர்களுடன் திருமாவளவன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைகளின் முடிவில் ஸ்டாலினுக்கு இன்று திருமாவளவன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் திருமாவளவன் கூறியுள்ளதாவது:

பெறல் :
திருமிகு . தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள்
பொருளாளர், திமுக.
சென்னை

வணக்கம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மைய அரசை வலியுறுத்தும் வகையில் இன்று தங்களின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு அழைப்பு விடுத்தமைக்காக தங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

VCK not to participate in DMK's All party meeting, says Thirumavalavan

காவிரிநீர்ச் சிக்கல் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென திமுக உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், தமிழக அரசு இக்கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில், தங்களின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறோம்.

காவிரிநீர்ச் சிக்கல் என்பது தமிழகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு நெருக்கடியான நிலைக்குத் தள்ள பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதனை மைய அரசு வெளிப்படையாக புறக்கணித்துள்ளது.

தமிழக மக்களுக்கு எதிரான மையஅரசின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து தமிழக மக்கள் யாவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய வரலாற்று தேவை தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று தங்களின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் விருப்பமாகும். கடந்த 13.10.2016 அன்று தங்களின் தலைமையில் நடந்த விவசாய சங்கத் தலைவர்களின் கூட்டத்தில் மக்கள் நல கூட்டணியைச் சார்ந்த சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் விவசாய சங்கத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அதனடிப்படையில், இன்று நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்திலும் மக்கள் நல கூட்டணி கட்சிகள் பங்கேற்கலாம் என்பதை எமது கூட்டணி கட்சித் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்வைத்தோம்.

காவிரிநீர்ச் சிக்கலைத் தேர்தல் அரசியலோடு முடிச்சு போடாமல் அணுகவேண்டுமென்பதே விடுதலைச் சிறுத்தைகளின் உறுதியான நிலைப்பாடாகும். அந்த அடிப்படையில்தான் மக்கள் நல கூட்டணியின் தோழமை கட்சிகளையும் இக்கூட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் .

24.10.2016 அன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் உயர்நிலைக்குழுவில் மக்கள் நல கூட்டணியின் நலன்களையும் கருத்தில் கொண்டு திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில்தான் மக்கள் நல கூட்டணியின் தோழமை கட்சித் தலைவர்களுடன் மீண்டும் கலந்தாய்வு செய்தோம்.

அப்போது, தஞ்சாவூர்,அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் மக்கள் நல கூட்டணி பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள்ள சூழலில் , திமுக ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது கட்சி தொண்டர்களியிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்குமென தங்களின் தயக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் மக்கள் நல கூட்டணியின் ஒரு அங்கமாக இயங்கிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மக்கள் நல கூட்டணியின் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் நிலையில் உள்ளது.

அதாவது , மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் இச்சூழலில் தங்களின் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாதநிலையில் உள்ளோம் என்பதை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றியுடன் ...
இவண் :
தொல்.திருமாவளவன்
தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

English summary
VCK leader Thol. Thirumavalavan on Tuesday wrote to DMK Treasurer and Opposition leader MK Stalin said that his part not to participate in DMK's All Party meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X