ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்.. திராவிடர் கழகம் ஆதரவு யாருக்கு தெரியுமா? வீரமணி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் ஆர்.கே. நகர் தொகுதியில் திரவிடர் கழகத்தினர் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி சென்னை - ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல். நடந்து முடிந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அந்தத் தொகுதியைப் பொருத்தவரையில் இது இரண்டாவது இடைத்தேர்தலாகும்.

தண்ணீர் பிரச்சினை

தொடர்ந்து இந்தத் தொகுதி ஆளுங்கட்சிக்கு ஆதரவானதாக இருந்தாலும், வளர்ச்சித் திட்டம் என்பது வருத்தப்படக் கூடியதாகவே இருக்கிறது. பலவகைகளிலும் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக குடிதண்ணீர் என்பது எல்லாப் பருவக் காலங்களிலுமே இந்தத் தொகுதியைப் பொருத்தவரை பொதுமக்களுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வந்திருக்கிறது. அத்தொகுதிப் பொதுமக்கள் தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படையாகவே தெரிவித்தும் வருகின்றனர்.

திமுகதான் பரவாயில்லை

இந்த நிலையில், இந்தத் தொகுதியின் குறைபாடுகளையும், தேவைகளையும் சட்டப் பேரவையில் வலுவுடன் எழுப்பிட ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டுவரும் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதுதான் உகந்ததாகவும், சிறப்பானதாகவும் இருக்க முடியும். மேலும் திராவிட இயக்க சித்தாந்தம் என்று வருகிறபோது - இன்றைக்கு இருக்கும் அரசியல் கட்சிகளில், தி.மு.க.தான் குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

இந்துத்துவா அரசியல்வாதிகள்

சமூகநீதி, மதச்சார்பின்மை இரண்டுக்கும் இந்துத்துவா அரசியல்வாதிகளால் பெரும் அறைகூவல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டைக் காவி மண்ணாக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். குறி வைத்து காய் நகர்த்தும் இவ்வேளையில் அதற்கு சரியான தடுப்பும், மதச்சார்பின்மை அணியும் உருவாக அச்சாரமாக இத்தேர்தல் முடிவு அமையவேண்டியது அவசர அவசியமாகும்.

பெரியார் மண்

இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி என்பது இவ்விரு கொள்கைகளிலும் தமிழ்நாடு தந்தை பெரியார் மண்ணே என்பதை மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கே பிரகடனப்படுத்தும் அரிய வாய்ப்பாகும். அ.இ.அ.தி.மு.க.வைப் பொருத்தவரை இந்த இடைத்தேர்தலில் ஒரு பாடம் கற்பிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு.

கழகங்களே இல்லாத ஆட்சியா?

கழகங்களே இல்லாத ஆட்சியை உருவாக்குவோம் என்பவர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்தவர்கள், வரிந்து கட்டி வரத் துடிக்கிறார்கள். தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுப்பதுதான் இந்த மதவாத கும்பலுக்குச் சரியான பதிலடியாகவும் இருக்க முடியும். இத்தகு காரணங்களால் திராவிடர் கழகம் ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்கிறது. வாக்காளர்களும் தி.மு.க.வின் உதயசூரியனுக்கே வாக்களித்து வெற்றி என்பதைவிட மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கழகத் தோழர்களுக்கு..

வடசென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் இந்த இடைத்தேர்தலில் தங்களின் பங்களிப்பு முத்திரையைப் பொறிக்கவேண்டும்; தேவைப்பட்டால், பிரச்சார களத்திலும் ஈடுபடுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Dravidian Party chief Veeramani says that they lend their supports to DMK in RK Nagar Constituency Election
Please Wait while comments are loading...