For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை சிறையில் 221 மீனவர்கள்- விடுதலை செய்ய நடவடிக்கை தேவை: வேல்முருகன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை சிறையில் இருக்கும் 221 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததற்காக மொத்தம் 66 மீனவர் உறவுகளை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதரமான 81 படகுகளையும் சிங்களக் கடற்படை பறிமுதல் செய்து வைத்திருக்கிறது.

Velmurugan demand centre to relase 221 TN fishermen in prisons

தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்து துன்புறுத்துவதும் சிறையில் அடைப்பதும் நாளாந்த நடவடிக்கையாக தொடர்ந்து வரும் நிலையில் தற்போது வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து கடற்படையும் தமிழ்நாட்டு மீனவர்களை சிறைபிடிக்கத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த செபா என்பவருக்குச் சொந்தமான ஆவேமரியா என்ற விசைப்படகு, ராஜன் என்பவரின் ஸீமேரி என்ற விசைப்படகு, சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவருக்குச் சொந்தமான அன்னை விசைப்படகு ஆகிய 3 விசைப்படகுகளில் அதே பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் கடந்த நவம்பர் 17-ந் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகேயுள்ள பெட்டுவகாட் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் சர்வதேச கடற்பரப்பில் கடந்த டிசம்பர் 9-ந் தேதியன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வங்கதேச கடலோர காவல்படையினர் 26 மீனவர்களையும் 3 படகுகளையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் சின்னதுரை பகுதியை சேர்ந்த டைடஸ் என்பவருக்கு சொந்தமான கரிஷ்மா என்ற மீன்பிடி படகில் தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த நவம்பர் 20-ந் தேதியன்று ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்காக கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றனர். கொச்சியில் இருந்து கிளம்பி இந்திய பெருங்கடலில் உள்ள இங்கிலாந்துக்கு சொந்தமான டியாகோ கார்சியோ தீவு அருகே சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் படகுகள் திசை மாறி சென்ற நிலையில் கடந்த 5-ந் தேதியன்று இங்கிலாந்து கடற்படையினர் மீன்பிடி படகுடன் 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச்சென்றனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி ஜான் சேவியர், ராமேஸ்வரத்தை சேர்ந்த துரை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரோஸ்லின் , பேபி, ஏ.ததேயூஸ்,கி.ததேயூஸ், விஜின், அல்போன்ஸ், டெனிஸ்டன், ஷிபு, வில்வராஜ் உள்ளிட்ட 14 பேர் இங்கிலாந்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் கடந்த 15-ந் தேதியன்றும் 13 தமிழ்நாட்டு மீனவர்களை இங்கிலாந்து கடற்படை அதே கடற்பரப்பில் கைது செய்தது.

இந்த நிலையில் மீண்டும் 102 மீனவர்களை இங்கிலாந்து கடற்படை, இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியோ தீவு அருகே கைது செய்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 27ந் தேதி கன்னியாகுமரி தூத்தூரை சேர்ந்த பீட்டர், டிக்டோசன், ஆன்டணி, ஸ்டீபன், சின்னத்துறையை சேர்ந்த சிலுவை ஆகியோருக்கு சொந்தமான 7 விசைப்படகுகளில் 102 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒருவர் கடலூரை சேர்ந்தவர். மற்ற அனைவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இந்திய பெருங்கடலில் ஆழ்கடலில் சர்வதேச கடற்பரப்பில் கடந்த 11-ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி 102 மீனவர்களையும் இங்கிலாந்து கடற்படை கைது செய்து, டியாகோ கார்சியோ தீவில் சிறை வைத்துள்ளனர்.

மொத்தமாக இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து கடற்படையால் கைது செய்யப்பட்டு 221 தமிழக மீனவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிறிஸ்துமஸ் பெருவிழா நெருங்கி வரும் நிலையில் 200க்கும் மேற்பட்ட மீனவர் உறவுகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியிலும் மீன்பிடித்தால் சிங்களக் கடற்படை சிறைபிடிக்கிறது! சர்வதேச கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டால் பன்னாட்டுக் கடற்படைகள் கைது செய்கின்ற நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலமே கேள்விகுறியாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததாலேயே இத்தகைய வாழ்வா சாவா போராட்ட நிலைக்குத் தமிழ்நாட்டு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்களின் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை.

இது தமிழ்நாட்டு பிரச்சனைதானே என்று வழக்கம் போல அலட்சியம் காட்டாமல் 221 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யவும் கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலத்தையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தி. வேல்முருகன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
TVK leader Velmurugan has demanded the centre should take steps to relase 221 TN fishermen from Sri lanka, Bangaladesh and British territory in Indian ocean.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X