For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல் மதுரையில் காலமானார்!!

By Mathi
Google Oneindia Tamil News

மதுரை: முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல் (வயது 88) மதுரையில் நேற்று இரவு காலமானார். அவரது உடல் நல்லடக்கம் மதுரையில் நாளை நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த தமிழண்ணலின் இயற்பெயர் ராம. பெரியகருப்பன். காரைக்குடியில் பள்ளி ஆசியராக பணியைத் தொடங்கினார்.

Veteran Tamil scholar Thamizhannal passes away

பின்னாளில் மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராகவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

சங்க இலக்கியம் உட்பட 80-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். மத்திய அரசின் தமிழறிஞர்களுக்கான 'செம்மொழி விருது', தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க. விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார் தமிழண்ணல்.

1990களின் இறுதியில் தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி தமிழறிஞர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தமிழறிஞர் தமிழண்ணல். சிங்கப்பூர் அரசுக்கு தமிழ்க் கல்வி பாடநூல்களையும் எழுதியுள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர்கள் கா.காளிமுத்து, மு.தமிழ்குடிமகன் ஆகியோருக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் தமிழண்ணல்.

இவருக்கு மனைவி தெய்வானை, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். தமிழண்ணல் இறுதிச் சடங்கு மதுரை வண்டியூர் பிரதான சாலை சதாசிவ நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும்.

தமிழறிஞர் தமிழண்ணல் குறித்து முனைவர் மு. இளங்கோவன் தமது இணையப் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

பிறப்பு

தமிழண்ணல் அவர்கள் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் இட்டபெயர் பெரியகருப்பன் என்பதாகும். இவர்தம் பெற்றோர் இராமசாமி, கல்யாணி ஆச்சியாவர்.

கல்வி

மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்(1948). பிறகு தன்முயற்சியால் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்(1969). முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆசிரியர் பணி

தமிழண்ணல் அவர்கள் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். இங்குத் தம் கல்லூரித் தோழர் கவிஞர் முடியரசனாருடன் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பதின்மூன்று ஆண்டுகள் இங்குப் பணிபுரிந்த பிறகு மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பத்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியர் பணியாற்றினார். இவர் தம் சங்க இலக்கியப் புலமையை அறிந்த ஆலை அரசர் கரு. முத்து. தியாகராசனார் இவருக்கு உள்ளன்போடு பணி வழங்கியதை அண்ணல் அவர்கள் நெகிழ்ந்து கூறுவார்கள்.

1971 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியும் பின்னர் இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல்துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பல நிலைகளில் பணிபுரிந்துள்ளார். இவர்தம் பணிக்காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு நிதியுதவித் துறையாக உயர்வுபெற்றது.

குடும்பம்

தமிழண்ணல் அவர்களுக்கு 1954, ஆகத்து 30 இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்ற ஆண்மக்களும், கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனாள் என்ற பெண்மக்களும் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.

தமிழண்ணல் பெற்ற சிறப்புகள்

1971 இல் குடியரசு நாளில் புதுதில்லி அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு இவர் செல்வம் என்ற தலைப்பில் பாடிய கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பெற்ற சிறப்பிற்கு உரியது. மதுரை மீனாட்சியம்மை பற்றி இவர் பாடிய பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்ற இவர் நூலும் பரிசுபெற்ற ஒன்றாகும். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.

பல்கலைக்கழக நல்கைக்குழு தமிழண்ணல் அவர்களை 1981-82 ஆம் கல்வியாண்டில் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்து சிறப்புச்செய்தது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, இலக்கியக் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றிப் பிற மொழியினருக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தவர்.

இலங்கை, சப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.

இவர் மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். முனைவர் மு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்டவர்கள் இவரின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம்பெற்றவர்கள். தினமணி உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்றவைகளாகும்.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிங்கப்பூர் அரசின் அழைப்பில் தமிழ்க்கல்விக்கு உரிய பாடநூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டவர்.

தமிழகப்புலவர் குழுவின் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிந்து வருகிறார். தமிழ்ச்சான்றோர் பேரவை தமிழ்வழிக் கல்வியை முன்னிலைப்படுத்தித் தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டம் நிகழ்த்திய பொழுது அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் போராட்டத் தலைமையிலிருந்து விலகிக்கொண்டபொழுது தாமே முன்வந்து தமிழ்வழிக் கல்விக்காகச் சாகும்வரை உண்ணா நோன்பில் தலைமைதாங்கி நடத்திய வரலாற்றுப் பெருமைக்கு உரியவர் நம் தமிழண்ணல் அவர்கள்.

அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் தொல்காப்பியப் பதிப்பை அறிஞர் இராமலிங்கனார், பகீரதன் ஏற்பாட்டில் பதிப்பித்துப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிட்டபொழுது தமிழுக்கு இந்நூல் கேடானது எனத் துணிந்து குரல்கொடுத்து கண்டித்தவர் நம் தமிழண்ணல் அவர்கள். (இத்துணிவும் தமிழ்ப்பற்றும் கண்ட பிறகே அந்நாளில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமாணவனாக இருந்த இக் கட்டுரையாளனுக்கு இவரின் மேல் அளவுக்கு அதிகமான ஈடுபாடு வந்தது.இவர்தம் தலைமையில் தம் திருமணம் நிகழவேண்டும் என உறுதி செய்து பல ஆண்டுகளுக்குப் பிறகு செயங்கொண்டத்தில் 31.03.2002 இல் திருமணம் நிகழ்ந்தது)

தமிழண்ணல் நூல்கள்

தமிழண்ணல் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரை, படைப்பு எனப் பல திறத்தில் அமையும் நூல்களை வழங்கியுள்ளார். அவற்றுள் சில :

வாழ்வரசி புதினம்

நச்சுவளையம் புதினம்

தாலாட்டு

காதல் வாழ்வு

பிறைதொழும் பெண்கள்

சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள் (2003)

சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்(2005)

தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்(2004)

புதியநோக்கில் தமிழ்இலக்கிய வரலாறு

தமிழியல் ஆய்வு(இ.முத்தையாவுடன்)

ஆய்வியல் அறிமுகம்(இலக்குமணனுடன்)

ஒப்பிலக்கிய அறிமுகம்

குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம்

தொல்காப்பியம் உரை

நன்னூல் உரை

அகப்பொருள் விளக்கம் உரை

புறப்பொருள் வெண்பாமாலை உரை

யாப்பருங்கலக் காரிகை உரை

தண்டியலங்காரம் உரை

சொல் புதிது சுவை புதிது

தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்

தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?

பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?

பிழை திருத்தும் மனப்பழக்கம்

உரை விளக்கு

தமிழ் உயிருள்ள மொழி

தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்

தமிழ்த்தவம்

உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்

திருக்குறள் உரை

இனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன

முனைவர் தமிழண்ணல் அவர்களின் முகவரி :

முனைவர் தமிழண்ணல் அவர்கள்
ஏரகம்,
4/585 (732) சதாசிவ நகர்,
வண்டியூர்ச்சாலை,
மதுரை - 625 020

English summary
Veteran Tamil scholar Thamizhannal passed away on Tuesday night in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X