For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னத்த கருத்து சொல்ல.. ஸ்டிக்கர் அரசை பாராட்டி புகழ்ந்து தள்ளும் ஆளுநர் உரை... விஜயகாந்த் சாடல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவையும் அவரது ஸ்டிக்கர் அரசாங்கத்தையும் பாராட்டி புகழ்ந்து தள்ளும் உரையாக ஆளுநர் உரை அமைந்துள்ளது என்று தேமுதிக தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக இன்று விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:

ஆளுநர் உரை முழுக்க, முழுக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும், ஸ்டிக்கர் அரசாங்கத்தையும் பாராட்டியும், புகழ்ந்தும் பேசும் புகழுரையாகவே இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்றுவரும் மக்கள் விரோத அதிமுக ஆட்சியின் கடைசி கூட்டத்தொடரில், தமிழக ஆளுநர் ஆற்றியுள்ள உரை குறித்து தேமுதிக சார்பில் நான் கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் 2012 முதல் 2015 வரை ஆளுநர் உரைக்கு நான் தெரிவித்துள்ள கருத்துக்களே, இந்த உரைக்கும் பொருந்தும் வகையில் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி, காலம் கடந்து அதிகளவில் நீரை திறந்துவிட்டு, சென்னையில் செயற்கையாக பேரழிவை ஏற்படுத்தியதை மறைத்து, மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை போர்க்கால அடிப்படையில் மீட்டதுபோன்றும், அனைவருக்கும் நிவாரண உதவிகள் முறையாக வழங்கியது போன்றும் தெரிவித்திருப்பது, "பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகமே இருண்டுபோனது" என்று சொல்வது போல் உள்ளது.

ஜெ. உரை மாறிடுச்சோ?

ஜெ. உரை மாறிடுச்சோ?

கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆளுநர் உரையிலும், பட்ஜெட் உரையிலும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டவைகளின் தொகுப்பு உரையாகத்தான் ஆளுநர் உரை இருக்கிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு படிப்பதற்காக எழுதிக்கொடுத்த உரையே, தமிழக ஆளுநரின் உரையாக மாற்றப்பட்டுள்ளதோ என்கின்ற ஐயம் எனக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

புள்ளி விவரெல்லாம் சரி.. ஆனா...

புள்ளி விவரெல்லாம் சரி.. ஆனா...

மேலும் இதில் பல்வேறு புள்ளி விவரங்கள் இருக்கிறது. ஆனால் அந்த புள்ளி விபரங்களின்படி சொல்லப்பட்டவைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறதா? எனக்கேள்வி எழுப்பினால், பூஜ்ஜியமே விடையாக இருக்கிறது. தமிழகத்தின் கடன்தொகை சுமார் நான்கரை லட்சம் கோடிக்குமேல் இருக்கும் நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையிலோ, தமிழகத்தின் வளர்ச்சி இருபதாவது இடத்திற்கு சென்றுள்ளது குறித்தோ எவ்வித விளக்கமும் இல்லை.

எங்கே மின்சாரம்?

எங்கே மின்சாரம்?

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலையைவிட, அதிக விலை கொடுத்து தனியார் மின் நிறுவனங்களிடம் மின்சாரத்தை வாங்கி, தமிழகத்தில் மின்வெட்டே இல்லாதது போன்ற தோற்றத்தை செயற்கையாக உருவாக்கிவிட்டு, ஐந்தாண்டு காலத்தில் எந்தவொரு மின்னுற்பத்தி திட்டத்தையும் புதியதாக துவக்காமல், தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளது என்றும், 7,485 மெகாவாட் மின்னுற்பத்தி திறனை கூடுதலாக சேர்த்துள்ளது என்றும் கூறியிருப்பதும், 2012ல் மூன்றாண்டுகளில் 3,000 மெகாவாட் சூரிய சக்தி மின்சார உற்பத்தி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, தற்போது 5,345 மெகாவாட் உற்பத்திக்கு வாய்ப்பு என மாற்றப்பட்டுள்ளதும் பொய்யுரையின் உச்சமாகும்.

இதுக்கெல்லாம் அறிவிப்பே இல்லை..

இதுக்கெல்லாம் அறிவிப்பே இல்லை..

மாநிலங்களுக்குள் ஓடும் ஆறுகளை இணைத்திடவோ, பூரண மதுவிலக்கை அமல்படுத்தவோ, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 3,500 வழங்கிடவோ, விண்ணைமுட்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவோ, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக அவசர சட்டம் இயற்றுவது குறித்தோ எந்தவித அறிவிப்பும் இல்லை.

ஏமாற்றம் கொடுத்த அரசு

ஏமாற்றம் கொடுத்த அரசு

அதிமுக அரசு பதவி ஏற்றது முதல் இதுவரையிலும், மாற்றம் கொடுத்த மக்களுக்கு, ஏமாற்றத்தை கொடுத்த அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது. அரைத்தமாவையே அரைத்த கதையாக, இந்த ஆளுநர் உரை முழுக்க, முழுக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும், ஸ்டிக்கர் அரசாங்கத்தையும் பாராட்டியும், புகழ்ந்தும் பேசும் புகழுரையாகவே இருக்கிறது.

இனியா செய்வார்கள்?

இனியா செய்வார்கள்?

தமிழக அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்த உரையாக இதைப்பார்க்க முடியவில்லை. ஆளுநர் உரையைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை, இதுவரை மக்களுக்காக நன்மைகள் செய்யாத தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ஆட்சியின் இறுதி கட்டத்திலா மக்களுக்கு நன்மைகள் செய்யப்போகிறார். அதற்கான காலமும் இல்லை, நன்மைகள் செய்வதற்குரிய மனமும் அவருக்கு இல்லை

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

English summary
DMDK leader Vijayakath has criticised Governor Rosaiah's address to Tamil Nadu Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X