உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: விஜயகாந்த் முடிவினால் கலக்கத்தில் நிர்வாகிகள்

சென்னை: சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரிந்த இமேஜை உயர்த்தி மீண்டும் 8 சதவிகித வாக்கு வங்கியை பெற முடியும் என்று இதன்மூலம் விஜயகாந்த் நினைக்கிறாராம். இந்த முடிவினால் தேமுதிக நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தே.மு.தி.க. தோல்வியை தழுவியது. மேலும் தேர்தலில் தே.மு.தி.க.வின் ஓட்டு வங்கியும் கணிசமாக குறைந்தது. தே.மு.தி.க. சரிவை சந்தித்ததால் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்தனர்.

கட்சியின் சரிவை நிலைநாட்ட விஜயகாந்த் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் அவர் வெளிமாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார்.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்த விஜயகாந்த் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

தனித்து போட்டி

கட்சியைக் காப்பாற்ற வாசன் தி.மு.கவை சரணடைந்து விட்டார். நாமும் தி.மு.கவுடன் கூட்டணி வைக்கலாம் என தங்களுக்குள் பேசியிருக்கிறார்கள். இந்தத் தகவல் விஜயகாந்த் காதுக்கும் போன போது அவரது முகம் சிவந்து போனதாம். உடனே விஜயகாந்த், உள்ளாட்சித் தேர்தலில் நாம் தனித்துதான் நிற்கப் போகிறோம்' என அறிவித்துவிட்டு, ஐந்தே நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.

கட்சி மாறிய நிர்வாகிகள்

இதனால் அதிர்ந்துபோன மாவட்டச் செயலாளர்கள், தங்கள் கருத்துக்களைச் சொல்ல முற்பட்டபோது, மேடையில் இருந்த நிர்வாகிகளோ தடுத்துள்ளார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. அருள்செல்வன், விஜயகாந்த் ரூமுக்குச் சென்று அவரைப் பார்க்க முயன்றார். கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லை. அவரால் இப்போது பேச முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இதில் கடுப்பாகித்தான் அன்று இரவே தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ், தஞ்சை தெற்கு பரமசிவம், நாகை மாவட்டச் செயலாளர் அருள்செல்வன் ஆகியோர் திமுகவில் இணைந்து விட்டனர்.

விஜயகாந்த் முடிவுக்குக் காரணம்

கட்சி பதவிகளில் போட்டியிட கட்சியில் ஆள் இல்லை. தேர்தலுக்கு செலவு செய்ய பணமும் இல்லை. எனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டாம். தேர்தலை புறக்கணித்து விடலாம் என்று மாவட்ட தலைவர்கள் கூறினார்கள். ஆனால் அவர்களின் கருத்தை விஜயகாந்த் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியை பொறுத்தவரை இந்த தேர்தல் வாழ்வா, சாவா போராட்டம். எனவே நிச்சயம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜயகாந்த் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.

விருப்பமனு

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து நேற்று முதல் விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 30ம்தேதி வரை நடைபெறும். தேர்தல் தேதி அறிவித்ததும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார் என்று தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த் எடுத்துள்ள முடிவினால் யாருக்கு நன்மை ஏற்படப்போகிறதோ?

English summary
DMDK sources said, VIjayakanth said that his party will contest alone in the local body elections.
Please Wait while comments are loading...

Videos