For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள் என்ற புகார் குறித்து என்ன செய்தார்கள்?: விஜயகாந்த்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக மீது சமூக வலைதளங்களில் செய்யப்படும் அவதூறான விமர்சனங்கள் குறித்து கடந்த மாதம் தேமுதிக வழக்கறிஞர்களால், சென்னை சைபர் கிரைம் பிரிவில் கொடுக்கப்பட்ட புகார் இதுவரையிலும் நடவடிக்கை ஏதும் இல்லாமல் நிலுவையில் உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Vijayakanth unhappy with TN police

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக சட்டமன்றத்தில் அவைக்காவலரை தாக்கியதாக தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சி.எச்.சேகர், பி.கே.தினகரன் ஆகியோர் மீது காவல்துறையினர் மூலம் உண்மைக்கு புறம்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த வழக்கிலும் காட்டாத வேகத்தை காட்டி, நீதிமன்றத்தில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதன்மூலம், அதிமுக அரசு தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறது என்பதும், காவல்துறை அதற்கு உடந்தையாக உள்ளது என்பதும் தெளிவாகிறது.

சமீபத்தில் தேமுதிகவின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாளை கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது, நடந்த உண்மை நிலவரத்தை அறிந்த நீதிமன்றம் அவர் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்பதை தெரிந்து கொண்டு உடனடியாக அவரை ஜாமீனில் விடுவித்தது.

தேமுதிக சம்மந்தப்பட்ட வழக்குகளில் இவ்வளவு வேகம் காட்டும் காவல்துறை, எல்லா வழக்குகளிலும் இதேபோல் வேகம் காட்டினால் தமிழக காவல்துறையை பொதுமக்கள் பாராட்டுவார்கள்.

குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியை சார்ந்த இளைஞர் ஒருவர் முதலமைச்சரின் தம்பிதான் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆதாரபூர்வமான இந்தப் பிரச்சனையில், முதலமைச்சரின் தம்பி என்பதற்காக எந்தவித வழக்கும் அவர் மீது பதிவு செய்யாமல் காவல்துறை மவுனம் காத்தது. ஆனால், உயர் நீதிமன்றம் அக்கடிதத்தில் உள்ளது உண்மையென உறுதி செய்து, முதலமைச்சரின் தம்பி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டும், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கோகுல இந்திரா, காமராஜ், செல்லூர் ராஜு, பா.வளர்மதி உள்ளிட்டோர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பலரின் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொலை மிரட்டல், அத்துமீறிப் புகுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் போன்ற பல வழக்குகள் போடப்பட்டு சுமார் 10 வருடங்களாக எப்.ஐ.ஆர். நிலையிலேயே உள்ளது.

தேமுதிக மீது சமூக வலைதளங்களில் செய்யப்படும் அவதூறான விமர்சனங்கள் குறித்து கடந்த மாதம் தேமுதிக வழக்கறிஞர்களால், சென்னை சைபர் கிரைம் பிரிவில் கொடுக்கப்பட்ட புகார் இதுவரையிலும் நடவடிக்கை ஏதும் இல்லாமல் நிலுவையில் உள்ளது.

இதேபோன்ற புகார், தேமுதிகவின் மேட்டுப்பாளையம் நகர செயலாளர், நகர்மன்ற உறுப்பினருமான மல்லி சுப்பிரமணியன் மீது அதிமுகவினரால் சுமத்தப்பட்ட உடன் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் 45 நாட்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுபோன்ற காவல்துறையின் பாரபட்ச நடவடிக்கைகளால் காவல்துறையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் குறைந்தபட்ச நம்பிக்கையையும் இழக்க நேரிடும். ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக செயல்பட்ட தமிழக காவல்துறை, உலகின் மிக மோசமான காவல்துறை என்ற பெயரை பெறுவதற்கு முயற்சிக்காமல் மக்களின் நலனுக்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும், செயல்படும் மக்கள் சேவகனாக மாற வேண்டும் என்பதை மனதில் கொண்டு தமிழக காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMDK chief Vijayakanth is unhappy with the way TN police are functioning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X