For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தைக்கீறி வைகுண்டத்தை காட்டுகிறேன் என்றானாம்: விஜயகாந்த்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மாற்றம் கொடுத்த மக்களுக்கு இதுவரை கொடுத்த ஏமாற்றமே போதும், இனியும் தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றாமல், அவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டுமென அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்திய அரசின் புள்ளியியல்துறை 2014ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியிட்ட அறிக்கையின்படி, பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் மாநிலங்களெல்லாம் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு கடைசி இடத்திற்கு சென்றது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.

Vijayakanth wants ADMK govt. to stop cheating TN people

இப்பிரச்சனையிலிருந்து தமிழக மக்களை திசை திருப்பவே அந்த சமயத்தில் "உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை"2014 அக்டோபர் மாதத்தில் நடத்துவதாக அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் அதை நடத்தாமல் மீண்டும், 2015 மே 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறுமென அறிவித்து அதையும் நடத்தவில்லை. அது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபின் சுயநலநோக்கோடு, அரசியல் ஆதாயத்திற்காக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை மனதில்கொண்டு "உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை"வரும் செப்டம்பர் 9, 10ஆம் தேதிகளில் நடத்துகிறது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள்என பலவும் மூடப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக அரசின் பதவிகாலம் ஆறுமாத காலமே இருக்கின்ற போது மக்களை ஏமாற்றவும், பல்வேறு பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவுமே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படபோவதில்லை. தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு, இலஞ்சம், ஊழல், எளிதில் அணுக முடியாத நிர்வாகம், தொழில் தொடங்குவோருக்கு பல்வேறு நிர்பந்தங்கள் மற்றும் சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல காரணங்களால் தான் தொழில் வளர்ச்சி குறைந்து, தொழில்துறை நலிவுற்றுப்போயுள்ளது. அதனால் பொருளாதாரவளர்ச்சி வீழ்ச்சி அடைந்து அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.

மேலும் நோக்கியா, ஃபாக்ஸ்கார்ன், ரெனால்டு நிஸான் போன்ற பெரிய தொழிற்சாலைகள் அதிமுக அரசின் தவறான வரிக்கொள்கையால் தமிழகத்தை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரெனால்டு நிஸான் கார் தொழிற்சாலைக்கு அதிமுக அரசு சுமார் 2800 கோடி ரூபாய் வரித்தொகையை இரண்டு ஆண்டுகளாக வழங்காமல் இழுத்தடித்ததால், அந்நிறுவனம் மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது. இப்பிரச்னையால் மேலும் ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதை இந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. வரித்தொகையை வழங்காமல் காலதாமதம் செய்ததற்கு காரணம் என்ன? தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளதா? இல்லை தங்களுக்கு வர வேண்டிய நிதி வராததால் நிறுத்தி வைக்கப்பட்டதா? தமிழகத்தில் இயங்கிவரும் தொழிற்சாலைகளையே தக்கவைத்துக் கொள்ள முடியாத அதிமுக அரசு, வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து வந்து தொழில் துவங்குகிறோம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.

அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தமிழகத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு, ரூபாய் 31,706 கோடி முதலீடும், அதன் வாயிலாக 1.62 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தொழிற்துறை அமைச்சர் 04.09.2015 அன்று சட்டமன்றத்தில் விவாதத்தின்போது தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 17 நிறுவனங்கள் மூலம் ரூ. 11,068 கோடி மட்டுமே முதலீடு பெறப்பட்டு, 15,617 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த லட்சணத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக ஆட்சியின் கடைசி ஆறுமாத காலத்தில் "உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை" நடத்துவது தொழிற்துறை வரலாற்றில் முதன்முறை என்றும், அதன் மூலம் ஒரு லட்சம் கோடி அளவிற்கு முதலீட்டை கொண்டு வரப்போவதாகவும் சுயதம்பட்டம் அடித்து க்கொள்வது "கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தைக்கீறி வைகுண்டத்தை காட்டுகிறேன்" என சொல்வதைப்போல்
உள்ளது.

ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டு காலத்தில் செய்யவேண்டியதை செய்யாமல், இந்த ஆறு மாதகாலத்தில் செய்து முடிப்பதாக சொல்வதை கேட்ட தமிழக மக்கள் இதுவரை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்ன தூங்கிக் கொண்டிருந்தாரா? என கேட்கிறார்கள். இது எனக்கு சிறைச்சாலையில் இருந்து புரட்சித்தலைவர் பாடுகிற பாடல் வரியான"பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா" என்பது தான் நினைவுக்கு வருகிறது. மாற்றம் கொடுத்த மக்களுக்கு இதுவரை கொடுத்த ஏமாற்றமே போதும், இனியும் தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றாமல், அவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMDK chief Vijayakanth has asked the ADMK government to stop cheating TN people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X