For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விகடன் பத்திரிகை குழும தலைவர் எஸ் பாலசுப்பிரமணியன் மரணம்

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: விகடன் குழுமங்களின் தலைவர், எஸ்.பாலசுப்ரமணியன் (79) நேற்று (19.12.2014) மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

1935-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி சென்னையில் பிறந்த எஸ் பாலசுப்பிரமணியன், தனது 21-வது வயதில், 1956-ம் ஆண்டு பத்திரிகைத் துறையில் பொறுப்பேற்றார். விகடன் இணை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்றவர், பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தினார்.

Vikatan Group chairman S Balasubramaniyam passed away

தமிழ் இதழியலின் முதல் அரசியல், சமூக, புலனாய்வுப் பத்திரிகையான ஜூனியர் விகடனை எண்பதுகளில் தொடங்கியவர் எஸ் பாலசுப்பிரமணியன்தான்.

தமிழ்ச் சமூகத்திலும், பத்திரிகை உலகிலும் இன்றுவரை தவிர்க்க முடியாத பத்திரியாக ஜூனியர் விகடன் திகழ காரணமே, ஊழியர்களால் 'பாஸ்' என அன்புடன் அழைக்கப்பட்ட பாலசுப்பிரமணியம்தான்.

இன்றைக்கு வெளியாகும் பல புலனாய்வு இதழ்களின் முன்னோடி ஜூனியர் விகடனே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியவர் அமரர் எஸ்எஸ் பாலன்.

1987-ம் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்குக்காக, அன்றைய எம்.ஜி.ஆர். அரசு இவரைக் கைதுசெய்து மத்திய சிறையில் அடைத்தது.

Vikatan Group chairman S Balasubramaniyam passed away

தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்கு தொடுத்து வெற்றிபெற்று, 1001 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார். அதற்கான காசோலையை அப்படியே ப்ரேம் போட்டு வைத்துள்ளார்.

பத்திரிகைகள் சிகரெட் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சட்டம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘விகடனில் சிகரெட் விளம்பரங்களை வெளியிடுவது இல்லை' எனக் கொள்கை முடிவு எடுத்து உறுதியுடன் அமல்படுத்தினார். இன்றளவும் அந்தக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.

விகடன் விமர்சனக் குழு செய்த தவறுகளுக்காக இரு முறை, குறிப்பிட்ட காலத்துக்கு சினிமா விமர்சனமே விகடனில் வெளிவராது என சுய தண்டனை விதித்துக் கொண்ட மகான் எஸ் பாலசுப்பிரமணியன்.

தமிழ் இதழியலில் மிகப் பெரும் புரட்சியை நிகழ்த்திய ‘விகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டம்', விகடன் நிறுவனர் அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்களால் துவங்கப்பட்டது. எனினும், அதற்கு முழுமையான வடிவம் கொடுத்து திட்டத்தை மேலும் மெருகூட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் பாலன்தான்.

Vikatan Group chairman S Balasubramaniyam passed away

தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான முயற்சியாக இப்போதும் பேசப்படும் ‘முத்திரைக் கதைகள்' திட்டத்தைத் துவங்கியவர் இவர்தான். ஜெயகாந்தன், சுஜாதா உள்ளிட்ட மிகப் பிரபலமான எழுத்தாளர்களுக்கு விகடன் மூலம் பெரும் தளத்தை அமைத்துத் தந்தவர் இந்த 'பாஸ்'தான்.

எழுத்தாளர்களை கவுரவிப்பதில் இவருக்கு நிகரில்லை. சுஜாதாவுக்கு அண்ணா சாலையில் பிரமாண்ட கட் அவுட் வைத்து ஒரு நாயகனாகவே காட்டியவர் எஸ் பாலசுப்பிரமணியன்.

திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவித்த பண்பாளர். இவரும் ஓர் எழுத்தாளரே. ‘சேவற்கொடியோன்', எஸ் எஸ் பாலன் போன்ற புனைப்பெயர்களில் பல சிறுகதைகள் எழுதியுள்ளார். உன் கண்ணில் நீர்வழிந்தால், பேசும் பொற்சித்திரமே ஆகியவை இவர் எழுதிய புகழ்பெற்ற நாவல்கள் ஆகும்.

தந்தை எஸ்.எஸ்.வாசன் வழியில் திரைத்துறையிலும் முத்திரை பதித்த எஸ்.பாலசுப்ரமணியன் தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்', சிவாஜி நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை, முத்துராமன் நடித்த ‘எல்லோரும் நல்லவரே' போன்றவை இவர் இயக்கிய சில படங்களாகும்.

விவசாயத்தின் மீதும், பறவைகள் மீதும் தீராத காதல்கொண்ட இவர், தனது படப்பை பண்ணையில் தனி சரணாலயம் அமைத்து ஏராளமான அரியவகை வெளிநாட்டுப் பறவைகளை வளர்த்து வந்தார்.

இளம் தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்ற நோக்கில் படிப்படியாக விகடன் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டு, அமைதியாக ஓய்வெடுக்க ஆரம்பித்தார்.

இவரது மனைவி பெயர் சரோஜா. இவர்களுக்கு ஆறு மகள்கள், ஒரு மகன். இவரது மகன் பா.சீனிவாசன்தான் தற்போது விகடன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.

English summary
Vikatan Group's chairman S Balasubramaniyam was passed away on Friday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X