For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவலைப்படாதீங்க ஸ்டாலின், நான் தமிழகத்தை குணமாக்குகிறேன்.. அன்புமணி "அலேக்" கடிதம்!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகம் மிகுந்த நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக இருப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். தற்போது அந்தக் கடிதத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்டாலினுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் ‘தமிழகத்தை நாங்கள் குணமாக்கிக் கொள்கிறோம். நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக ஸ்டாலினுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் இன்றைய நிலை தொடர்பாக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை படித்தேன்... ஆனால், ரசிக்கவோ, சுவைக்கவோ முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு 46 மாதங்கள் வனவாசம் அனுபவித்ததாலேயே உங்களின் தவறுகளையும், ஊழல்களையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் ஊழல்கள் குறித்தும், நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீங்கள் பாடம் நடத்தி இருக்கிறீர்கள்.

சாராயத்தை வெள்ளமென ஓடவிட்டவர்...

சாராயத்தை வெள்ளமென ஓடவிட்டவர்...

அ.தி.மு.க. ஆட்சியில் முக்கியத்துவம் தரப்படும் ஒரே துறை டாஸ்மாக் தான் என்று கூறியிருக்கிறீர்கள். உண்மை தான். ஆனால், அரசின் செலவுகளை ஈடுகட்டவும், மலிவுவிலை அரிசித் திட்டத்தை செயல்படுத்தவும் மது விற்பனையைத் தொடங்கலாம் என பேரறிஞர் அண்ணாவிடம் அதிகாரிகள் பரிந்துரைத்த போது, மக்களைக் கெடுக்கும் மதுவை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். அண்ணாவின் வழியில் நடப்பதாக கூறும் நீங்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் அவரைப் பின்பற்றினீர்களா? மது என்றால் என்ன என்பது ஒரு தலைமுறைக்கே தெரியாமல் இருந்த நிலையில், ராஜாஜி, காமராஜர் போன்ற மூத்த தலைவர்களின் அறிவுரையை மதிக்காமல், 1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்து சாராயத்தை வெள்ளமென ஓடவிட்டவர் உங்கள் தந்தை கலைஞர் தானே?

நெருப்பு வளையத்தின் நடுவில் கற்பூரம்...

நெருப்பு வளையத்தின் நடுவில் கற்பூரம்...

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள் என்று கோரிய போதெல்லாம் ‘நெருப்பு வளையத்தின் நடுவில் வைத்த கற்பூரம் போல தமிழ்நாடு இருக்கிறது" என்று கூறித்தானே நீங்களும், உங்கள் தந்தை கலைஞரும் தமிழக மக்களை ஏமாற்றினீர்கள். இராஜாஜியும், ஓமந்தூராரும், காமராஜரும், உங்கள் வழிகாட்டியான அண்ணாவும் இந்த நெருப்பு வளையத்திற்குள் வைத்து தானே தமிழ்நாடு என்ற கற்பூரத்தைக் காப்பாற்றினர். நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் கூறவில்லையா?

செய்தீர்களா... செய்தீர்களா...

செய்தீர்களா... செய்தீர்களா...

23.12.2008 அன்று டாக்டர் ராமதாஸ் தலைமையிலான குழுவின் வேண்டுகோளை ஏற்று மது விற்பனை நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்த கலைஞர், படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தாரே... நடைமுறைப்படுத்தினாரா?

நீங்கள் செய்தது தான் எல்லாம்...

நீங்கள் செய்தது தான் எல்லாம்...

முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும், தொழில் முதலீடுகள் குறித்தும் பேசியிருக்கிறீர்கள். நல்லது தான். முந்தைய ஆட்சியில் தொழில்துறை அமைச்சர் பொறுப்பை கூடுதலாக கவனித்த நீங்கள், திமுக ஆட்சியில் ரூ.46,091 கோடி மதிப்புள்ள 37 தொழில்திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டிருப்பதாகவும், அதனால் 2,52,569 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினீர்கள். அப்படி கிடைத்ததா?

நீங்கள் என்ன செய்தீர்களோ, அதையே தான் அ.தி.மு.க.வும் செய்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 46,602.72 கோடி தொழில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 2.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறினார்கள். இதில் ஒரு விழுக்காடு கூட முதலீடு செய்யப்படவில்லை. இதன்மூலம் இரு கட்சிகளுமே மக்களை ஏமாற்றுவதில் ‘ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பதை நிரூபித்திருக்கின்றன.

திருமங்கலம் திட்டம்...

திருமங்கலம் திட்டம்...

இலவசங்களை வாரி இறைத்து மக்களை சோம்பேறிகளாக்கும் கலாச்சாரத்தை வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, 2 ஏக்கர் நிலம் ஆகியவற்றுடன் 2006 ஆம் ஆண்டில் நீங்கள் தொடங்கினீர்கள். 2011 ஆம் ஆண்டில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு-மாடு என ஜெயலலிதா விரிவுபடுத்தினார். அதேபோல், தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கான ‘திருமங்கலம் திட்டத்தை' நீங்கள் அறிமுகம் செய்தீர்கள்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணத்துடன் மூக்குத்தி, தோடு வழங்கும் அளவுக்கு விரிவுபடுத்தி ‘திருவரங்கம் திட்டத்தை' உருவாக்கினார்கள். ஆக மொத்தம் மக்களைக் கெடுப்பதில் இரு கட்சிகளும் போட்டிப் போடுகிறீர்கள்.

கிரானைட் கொள்ளை...

கிரானைட் கொள்ளை...

கிரானைட் கொள்ளையில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நிறுவனத்தின் சட்டவிரோதச் செயல்களையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த நீங்கள் இப்போது கிரானைட் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது? 1996 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தி.மு.க. கிரானைட் வெட்டி எடுக்க சட்டவிரோதமாக அனுமதி அளித்ததாக கூறி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்தது. அதனடிப்படையில் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்காமல் விசாரணை நிலையிலேயே அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்தது ஏன்?

எங்கும் ஊழல்...

எங்கும் ஊழல்...

தமிழகம் இதுவரை கண்ட ஆட்சிகளில் இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியை விட மிக மிக மோசமான ஆட்சியைப் பார்க்க முடியாது. இன்றைய நிலையில் தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளோ அல்லது மக்கள் நலப்பணிகளோ நடைபெறவில்லை. கோவில்களில் பூஜை செய்தல், தீச்சட்டி ஏந்துதல், காவடி எடுத்தல் போன்ற பணிகள் மட்டுமே நடக்கின்றன. எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நிர்வாக எந்திரம் செயலிழந்து விட்டது. தமிழகத்தின் இன்றைய அவலநிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே காரணம்.

நான் குணமாக்குவேன்...

நான் குணமாக்குவேன்...

இன்றைய நிலையில் தமிழகம் மிகுந்த நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக கிடத்தப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கவலை தெரிவித்திருக்கிறீர்கள். இனி அந்தக் கவலை உங்களுக்குத் தேவையில்லை. அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடும் நோயாளியைக் கூட காப்பாற்றும் சக்தி மருத்துவர்களுக்கு உண்டு. அந்த வகையில் மக்கள் விருப்பப்படி பா.ம.க. ஆட்சிக்கு வந்தபின்னர் கவலைக்கிடமாக உள்ள தமிழகத்தை மருத்துவராகிய நான் குணப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டு வருவேன்.

இவ்வாறு அதில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
PMK youth wing leader Doctor Anbumani Ramadoss has written a letter to DMK treasurer Stalin. In this letter Anbumani has said that, 'PMK will save Tamilnadu'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X