For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு நடத்த பாஜகவால் ஏன் அவசர சட்டம் கொண்டு வர முடியவில்லை? திருநாவுக்கரசர்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த பாஜக ஏன் அவசர சட்டம் கொண்டு வரவில்லை என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்து இதுவரை 23 அவசரச் சட்டங்களை கொண்டு வந்ததைப் போல தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த ஒரு அவசரச் சட்டம் ஏன் கொண்டு வரவில்லை? என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த மூன்று வருடங்களாக ஜல்லிகட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் உணர்வுப்பெருக்கோடு தன்னெழுச்சியாக பல்வேறு முனைகளில் கடந்த ஏழு நாட்களாக தமிழகம் முழுவதும் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Why bjp government do not Issue Ordinance on Jallikattu ? Thirunavukarasar

இப்போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு பிரதமர் நரேந்திரமோடியின் ஆலோசனையின் பேரில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவசர கோலத்தில் அவசர சட்டம் கொண்டு வந்திருக்கிறார். இச்சட்டத்தின்; மூலம் தற்காலிகமாக தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்திவிடலாம் என்பது இவர்களது நோக்கமாகும். ஆனால், போராட்டக்காரர்கள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற நிரந்தர தீர்வு கிடைக்க மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டுமென கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பத்திரிகையாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் காளைகளை நானே அவிழ்த்து விடுவேன், வாடிவாசலில் இருந்து காளைகள் துள்ளி வருவதை நீங்கள் பார்க்க போகிறீர்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடு கூறியிருந்தார்.
ஆனால், மதுரையில் தங்கியிருந்த ஓ. பன்னீர்செல்வம் அலங்காநல்லூருக்கு செல்ல முடியாத அளவிற்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அலங்காநல்லூர் வாடிவாசலுக்கு எதிரே பத்தாயிரம் மக்கள் தமிழக அரசின் அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாதென முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், இந்த ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 2009-ல் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை செல்லாது என மே 2014-ல் உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், அதே போல ஒரு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவருவது எந்த வகையில் தீர்வாக அமையும் என்பதை போராட்டக்காரர்கள் கேள்வியாக எழுப்பி வருகிறார்கள்.

தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு மத்திய சட்டமான மிருகவதை தடை சட்ட பிரிவுகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் பொதுப் பட்டியலின் கீழ் வருகிற மிருகவதை தடை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிற அதிகாரம் மத்திய அரசிற்குதான் இருக்கிறது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத் திருத்தம் செய்வதன் மூலமாகவே தமிழகத்தில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்தமுடியும். அத்தகைய வழிமுறையை மத்திய மோடி அரசு பின்பற்றாமல் தமிழக அரசின் மீது பொறுப்பை தந்திரமாக தள்ளிவிட்டது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

உச்ச நீதிமன்றம் தடைவிதித்து 32 மாதங்கள் வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய பாஜக அரசு எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி நேரத்தில் அவசரக் கதியில் செயல்படுகிற நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்கொள்ள மத்திய அரசுதான் அவசர சட்டம் கொண்டு வர வேண்டுமே தவிர மாநில அரசு அல்ல.

பாஜக ஆட்சிக்கு வந்து இதுவரை 23 அவசரச் சட்டங்களை கொண்டு வந்ததைப் போல தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த ஒரு அவசரச் சட்டம் ஏன் கொண்டு வரவில்லை? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது தமிழகத்திற்கு விதிவிலக்கு அளித்து நீட் நுழைவு தேர்வு நடத்தாமல் இருக்க மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வரவில்லையா?

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தாததற்கு காங்கிரஸ், திமுக தான் காரணம் என்று தமிழக பாஜகவினர் திரும்பத் திரும்ப கூறி வருகிறார்கள். மத்தியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2004 முதல் 2014 வரை தமிழகத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதை எவரும் மறுக்க முடியாது. 2011 அறிவிக்கை இதற்கு தடையாக இருந்தது இல்லை.

ஆனால், சங்ககாலம் தொட்டு ஈராயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வந்த தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்தியில் பாஜக ஆட்சி செய்யும் 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்படவில்லை என்பதற்கு தமிழக பாஜகவினர் பதில் சொல்ல வேண்டும். இதற்குரிய பதில் சொல்லாமல், காங்கிரஸ் கட்சிமீது பழி போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஐம்பது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை தலைமையில் பிரதமர் மோடியை சந்திக்க செய்த முயற்சிகள் மறுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்காமல் நரேந்திரமோடி அவமதித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த பிரதமர் மோடியும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து நடத்திய கபடநாடகம் ஒட்டுமொத்த தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகமே வெகுண்டு எழுந்துள்ளது. எனவே மிருக வதை தடை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உடனடியாக அவசரச் சட்டத்தை நரேந்திர மோடி அரசு கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வருவதே தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த நிரந்தர தீர்வாக அமையும். இதை வலியுறுத்தி தமிழக இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து நடத்துகிற அறப்போராட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதரித்து துணை நிற்கும். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

English summary
Why bjp government do not Issue Ordinance on Jallikattu in tamilnadu ? Question arise by tamilnadu congress committee chief Thirunavukarasar .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X