For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்வி சிறந்த தமிழ்நாடு, பாரதி கனவு நனவாகுமா….

அரசியல் செல்வாக்கு காரணமாக் ஆசிரியர்களின் மன உறுதிக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் தேவையில்லாத இடமாற்றங்கள், பணியிட மாற்றங்கள் போதியவற்றை அரசு தவிர்க்க வேண்டும்.

Google Oneindia Tamil News

-பா. கிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கல்வித் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின் ஊடாக கல்விக் கூடங்களின் அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

கர்ம வீரர் காமராஜர் ஆட்சிக் காலத்தைப் பொற்காலம் என போற்றுவதற்கு ஏழைகள் கல்வி கற்பதற்காக அவர் பள்ளிக் கூடங்களை அதிக அளவில் திறந்ததும், மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்ததும் முக்கிய காரணம். அதனால்தான் அவர் கல்விக் கண் திறந்த காமராஜர் எனப் போற்றப்படுகிறார். அத்துடன், நாட்டில் முன்னேறிய மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இடம் பெற்றதற்கும் அதுவே அடித்தளமாகும்.

Will Bharathi dreams become true in Education?

தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது சில குறைகள், அரசியல் ரீதியிலான புகார்கள் இருந்தாலும் கல்வித் துறை மேம்பாட்டுக்கு அரசு கடந்த சில மாதங்களாகவே கல்வித் துறையில் கொண்டுவரும் மாற்றங்கள் வரவேற்கத் தக்கவை.

அதில் குறிப்பிடத் தக்கது தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களைத் தயார் செய்யும் வகையில் பாடத் திட்டத்தில் மாறறம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு மிகவும் நம்பிக்கை ஊட்டுகிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது என்ற கவலை இருந்துவந்தது. இத்திட்டம் முறையாகச் செயல்பட்டால், அந்தக் குறை நீங்கும். மேலும், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தற்போது மருத்துவப் படிப்புக்கான "நீட்" தேர்வு போல பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய நுழைவுத் தேர்வு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. அத்தகைய நிலை உருவானால், தமிழக மாணவர்கள் அதையும் எதிர்கொள்ளும் வகையில் சிறப்புப் பயிற்சி அளிப்பதாக அறிவித்துள்ளது தேவையான ஒன்று. காரணம், வணிக அடிப்படையில் செயல்படும் மையங்களை (Coaching Centres) இத்திட்டம் கட்டுப்படுத்தும்.

Will Bharathi dreams become true in Education?

அத்துடன், 12 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படுவதுபோல 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்வுகளில் மாற்றம் கொண்டுவரப்படும்போது, வினாத்தாள் தயாரிப்பு முறையிலும் மாற்றம் இருக்கும். பாடநூல்களில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்து கட்டுரையாக விடை எழுதும் முறை கைவிடப் படலாம். காரணம், மனப்பாடம் செய்யும் முறையில் தயாரான மாணவர்கள் உயர்கல்விக்கு வரும்போது, அதில் உள்ள சிந்தனை சார்ந்த தேர்வு வினாக்களால் திணறுகிறார்கள். எனவே, வினாத்தாள்களில் மத்திய கல்வி முறையைப் போல மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அதில் ஒரு வரி நேரடி விடை அளிக்க "அப்ஜெக்டிவ்" முறை வினாக்கள் அதிகரிக்கப்படும்.

தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தம் குறையும் வகையில் அனைத்து பாடங்களுக்கும் மொத்த மதிப்பெண் 200 என்பதை 100ஆக குறைத்ததும், 3 மணி நேரத் தேர்வு முறையை 2.30 மணி நேரமாகக் குறைத்ததும் போதிய பலன் தரும் என எதிர்பார்க்கலாம்.

கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. அப்போது, முதல் மூன்று ரேங்க் என்று அறிவிக்கப்படும் முறை கைவிட்டப்பட்டது. இது பல மாணவர்களுக்குத் தெம்பூட்டியது. கல்வி வணிகர்களுக்குக் கலக்கம் அளித்தது.

அண்மையில் ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத் தக்க முடிவாகும். இந்த ஸ்மார்ட் கார்டில் மாணவரின் பெயர், பிறந்த நாள், வீட்டு முகவரி, ரத்த குரூப், ஆதார் எண் ஆகிய விவரங்கள் இருக்கும். இந்த அட்டைகள் மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பள்ளியில் வெற்றி பெறும் பல மாணவர்கள் கல்லூரிப் படிப்பில் திணறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மாணவர்கள, என்ன படிப்பில் சேருகிறோம் என்பதில் தெளிவில்லாமல் இருப்பது முதல் காரணம். எல்லோரும் படிக்கிறார்கள் என்பதாலேயே குறிப்பிட்ட சில படிப்புகளில் மாணவர்கள் சேருகிறார்கள். அதற்குத் தங்களிடம் போதிய திறன் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதில்லை. இந்தக் குறையைக் களைவதற்கு பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் வழிகாட்டி கையேடு வழங்கப்படுகிறது. இதுவும் மிகச் சரியான வழிமுறைதான்.

வளர்ந்த நாடுகளில் பள்ளிச் சிறுவர்களின் மனத்தில் தகவல்களைத் திணிக்கும் கல்வி முறைக்குப் பதிலாக அவர்களுக்கு மன அழுத்தம் தராத வகையில் பாடத் திட்டங்களும் கல்வியும் அமைந்திருக்கும். கோடை விடுமுறைக் காலங்களில் மாணவர்கள் படிப்பையே மறந்து உற்சாகமாக காலத்தைக் கழிப்பார்கள். இதனால், மனச்சுமையோ மன அழுத்தமோ அவர்களுக்கு ஏற்படாது. விடுமுறை முடிந்து, கல்விக் கூடங்கள் திறந்தவுடன் உற்சாகத்துடன் பயிலத் தொடங்குவார்கள்.

அதைப் போன்ற நிலையை உருவாக்கும் முயற்சியில் கோடை விடுமுறையில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய போக்குகளுக்குக் காரணமே கல்விக் கூடங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களைப் போலச் செயல்படுவதால்தான்.

இத்தகைய முயற்சிகளுக்கு மகுடமாக 10ஆவது, 12 ஆவது தேர்வுகளை எழுதி முடித்த மாணவர்களின் மேற்படிக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவும் வகையில் வழிகாட்டு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இது, மாணவர்கள் தங்களின் திறமைக்கேற்ப என்ன படிப்பைத் தேர்வுசெய்யலாம் என்ற கலந்துரையாடல் அந்த மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டி கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது மிகவும் பாராட்டத் தக்க செயலாகவே அமைகிறது.

தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. அதில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.26 ஆயிரத்து 913 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட அரசு கவனம் செலுத்த வேண்டியது, போதிய ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்தாக வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்பட மொத்தம் 6,390 காலியிடங்கள் நிரப்ப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே அவை நிரப்பப் படவேண்டும். அது மட்டுமின்றி, ஆசிரியர்களுக்குப் போதிய சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

கல்விக் கூடங்களின் அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். அரசியல் செல்வாக்கு காரணமாக் ஆசிரியர்களின் மன உறுதிக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் தேவையில்லாத இடமாற்றங்கள், பணியிட மாற்றங்கள் போதியவற்றை அரசு தவிர்க்க வேண்டும்.

காமராஜர் ஆட்சியின்போது கல்வி அமைச்சராக இருந்தவர் மறைந்த பாரத ரத்னா சி. சுப்பிரமணியம். அவர் பல ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்கவும், மாணவர்களின் குறைகளைப் போக்கவும் தனி அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று யோசனை கூறியிருந்தார்.

அது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.

English summary
Columnist Paa Krishnan commends the new schemes announced by Tamil Nadu government, in school education system. He also appeals the government to ensure such schemes are properly implemented and adequate qualified well equipped teachers are recruited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X