For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவினர் சஸ்பெண்ட்: அத்தனை பேரும் ஒரு கணக்குப் போட.. "அம்மா" போட்ட தனிக் கணக்கு...!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அனைவரும் ஒரு கணக்கு போட, முதல்வர் ஜெயலலிதா மட்டும் தனக்கே உரிய பாணியில் புது கணக்கு ஒன்றை போட்டு அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியும் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சட்டசபையில் பலம் வாய்ந்த எதிர்கட்சியாக இருக்கும் திமுக கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. வெளிநடப்பு செய்ய மாட்டோம் என்று கூறிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் தொடர்ந்து வெளிநடப்பு செய்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பித்த நாள் முதலே அதிமுக - திமுக இடையே காரசார விவாதங்கள் நிலவி வருகிறது. சட்ட சபையில் கடந்த 1ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த 17ம் தேதியன்று தொடர் அமளியில் ஈடுபட்டதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 79 பேர், ஒரு வார காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Will Jaya's calculation benefit to her party?

காவல்துறை மானியக் கோரிக்கைகளில் பங்கேற்பதை தடுக்கவே, முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டு இது போன்று எங்களை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வைத்ததாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அத்துறைக்கு பொறுப்பு வக்கிப்பவர் முதல்வர். எனவே எங்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில், தர்ணா போராட்டம் மற்றும் போட்டி சட்டசபைக் கூட்டம் ஆகியவற்றை நடத்தி, திமுக எம்.எல்.ஏக்கள் பரபரப்பை ஏற்படுத்தினர். அவர்கள் எவ்வளவோ போராடியும், சபாநாயகர் செவி சாய்க்கவில்லை. மேலும், தனது தீர்ப்பை மாற்றும் எண்ணம் இல்லை என்றே அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அனைவரது பார்வையும் அதை நோக்கி இருக்க, தனக்கே உரிய பாணியில் புது கணக்கு ஒன்றை போட்டு அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியும் உள்ளார் ஜெயலலிதா. காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கேள்வி நேரம் இல்லாமலேயே தொடங்கியது. அன்றைய தினம் 81 புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

தொடர்ந்து நேற்றைய தினத்தில் தனது புதிய கணக்கான, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் தேர்வு முறையில் மாற்றம் செய்யும் புதிய சட்டத்திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்யவும் வைத்தார்.

இந்த புதிய மசோதா மூலம், தமிழகத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தும் முறையை கைவிட்டு, இனிமேல் கவுன்சிலர்கள் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முன்னதாக, மாமன்ற உறுப்பினர்கள் மறைமுகமாக மேயர்களை தேர்ந்தெடுக்கும் சட்டமுன்வடிவு அதிமுக அரசால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்த போதும், குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கட்சியினர் யாரும் சட்டசபையில் இல்லாமலேயே நேற்று நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் தேர்வு முறைக்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டில் பேரூராட்சித் தலைவர் முதல் மாநகராட்சி மேயர் வரை அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளும் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்பட்டது. அப்போது ஆளும் கட்சியாக திமுக அமர்ந்திருந்தது. இந்த மசோதாவுக்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, 2011ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பேரூராட்சித் தலைவர் முதல் மேயர் வரையிலான நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்தும் முறை கொண்டு வரப்பட்டது.

அதற்கு முற்றிலும் எதிரான வகையில் இப்போது அனைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் பதவிகளும் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான காரணம் உள்ளாட்சியை முழுவதுமாக கைப்பற்ற வேண்டும் என்ற கணக்குதான்.

சட்டசபைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெல்லவில்லை. சென்னையை பொறுத்தவரை திமுகதான் அதிக இடங்களில் வென்றிருக்கிறது. எனவே நேரடியான மேயர் தேர்தல் என்றால், கட்டாயம் திமுக மேயர் பதவியைப் பிடித்துவிடும் என்ற அச்சம் அதிமுகவிற்கு எழாமல் இல்லை. எனவேதான் 2006ல் திமுக கையாண்ட வித்தையை கையில் எடுத்துள்ளது அதிமுக.

இதேநிலைதான், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பதவிகளிலும் நிலவுகிறது. அனைத்து தொகுதிகளிலும் சொற்ப வாக்குளில்தான் அதிமுக வென்றது. எனவே உள்ளாட்சி தேர்தலில் மறைமுகமாக ஜெயிக்க திட்டமிட்ட ஜெயலலிதா, திட்டமிட்டு அதனை கச்சிதமாக கையாண்டு காய் நகர்த்தியுள்ளார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

English summary
CM Jayalalitha had a different calculation on the issue of DMK MLAs suspension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X