For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்டாசு மீதான ஜி.எஸ்.டி. வரியை 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வைகோ வலியுறுத்தல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு பட்டாசு மீதான ஜி.எஸ்.டி. வரியை 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க ஆவன செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்த பொருட்கள் மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

withdraw of GSD on fireworks, said vaiko

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து முடிவு செய்ய மாநில நிதி அமைச்சர்கள், மத்திய நிதித்துறை அமைச்சக பிரதிநிதிகள் கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இதுவரை 18 முறை கூடி விவாதித்து உள்ளது. இதில் ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கான பொருட்கள் மற்றும் வரி விகிதங்கள் குறித்து மாநிலங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றை மட்டுமே ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

இதுவரையில் வரி இல்லாத பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதை மாநில அரசுகள் சுட்டிக் காட்டி இருக்கின்றன. தற்போது பருத்தி, பருத்தி நூல் இழை மற்றும் துணி வகைகளுக்கு சில மாநிலங்களில் மட்டும் 2 முதல் 4 சதவீத மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜி.எஸ்.டி.யில் பருத்தி நூல் மற்றும் துணி விற்பனை செய்பவர்களுக்கு 5 சதவீதம், பாவு எடுத்து ஒப்பந்த முறையில் வேலை செய்பவர்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.

இதனால் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளதால், தமிழகத்தில் கரூர், ஈரோடு, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் இந்த வரியை நீக்கக் கோரி வேலை நிறுத்தம் செய்துள்ளன. மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு இதுவரை வரி விதிக்கப்படவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி.யில் 5 முதல் 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் பட்டாசும் சேர்க்கப்பட்டு, அவற்றுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பட்டாசு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 1200 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் 51 ஆலைகள் மட்டுமே கலால் வரி, மாநில வரி செலுத்துகின்றன. மீதமுள்ள 1150 ஆலைகள் 14.5 சதவீதம் மாநில வரி மட்டுமே கட்டுகின்றன என்றும், கலால் வரி கிடையாது என்றும் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் கூறி உள்ளது.

இந்நிலையில் பட்டாசுக்கு மத்திய கலால் வரி 12.5 சதவீதம், மாநில வரி 14.5 சதவீதம், சேவை வரியைச் சேர்த்தே ஜி.எஸ்.டி. 28 சதவீதம் விதிக்கப்படுவதாக ஜி.எஸ்.டி. வரி நிர்ணயிக்கும் குழு கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. பட்டாசு அடக்க விலையில் 30 சதவீதம் மட்டுமே மூலப்பொருள் மற்றும் சேவைகளின் பங்கு என்பதால் உள்ளீட்டு வரி வரவு 4 சதவீதம் மட்டுமே கிடைக்கும் என்றும், மின்சாரம், இயந்திரம் எதுவும் இல்லாமல் மனிதர்களால் மேற்கொள்ளப்படும் தொழில் என்பதால் தீப்பெட்டிக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதைப் போல பட்டாசுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கப்பட வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் வைத்துள்ள கோரிக்கை நியாயமானதாகும்.

பட்டாசு உற்பத்தியில் ஏற்றுமதி மட்டுமின்றி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகள் 5 லட்சம் பேருக்கு பட்டாசு தொழில் வாழ்வாதாரமாகவும் இருக்கின்றது. தற்போது சீனப் பட்டாசுகளின் வருகையால் பட்டாசுத் தொழில் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் விதிக்கப்பட்டால் குறைந்த விலையில் சீனத் தயாரிப்புப் பட்டாசுகள் தடையை மீறியும் வந்து குவியும் நிலை ஏற்பட்டுவிடும்.

இதனால் இங்குள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் அவற்றுக்கான துணைத் தொழிலகங்கள் மூடப்பட்டு, லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு பட்டாசு மீதான ஜி.எஸ்.டி. வரியை 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க ஆவன செய்ய வேண்டும். ஜூன் 30 ஆம் தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலின் இறுதிக் கூட்டத்தில் தமிழக அரசு இக்கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

English summary
Mdmk chief vaiko urges central government to withdraw of GSD on fireworks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X