For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு …. தீர்வுதான் என்ன?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர் மணி

இன்று தமிழ் நாட்டில் சட்டம், ஒழுங்கு நாசமாகிக் கொண்டிருக்கிறது. பட்டபகலில், நூற்றுக்கணக்கான மக்கள் நடமாடிக் கொண்டிருக்கும் பொது இடங்களில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் வெட்டிக் கொல்லப் படுகிறார்கள். கொல்லப்படுபவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எந்த வேறு பாடுகளும் கிடையாது. வழக்கறிஞர்கள், சாஃப்ட் வேர் இன்ஜீனியர்கள், இல்லத்தரசிகள் என்று அனைத்து தரப்பு மனிதர்களும் இதில் அடக்கம்.

கூலிப் படைகளின் அட்டகாசம் ஒரு பக்கம் என்றால் காதல் உள்ளிட்ட தனிப்பட்ட ஆசா பாசாங்களின் அடிப்படையில் நடக்கும் கொலைகளும் மற்றோர் பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஜூன் 24 வெள்ளிக் கிழமை ஒரு நாள் மட்டுமே சென்னை மாநகரில் ஏழு கொலைகள் நடந்திருக்கின்றன. இதில் ஐந்து பேர் பெண்கள். ஒரே நாளில் ஐந்து பெண்கள் நாட்டின் முக்கியமான நகரம் ஒன்றில் கொல்லப்படுவது என்பது தமிழகத்தின் மானத்தை மட்டுமல்ல, இந்தியாவின் மானத்தையும் சேர்த்தே கப்பலில் ஏற்றிக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Worst Law and Order in Tamil Nadu... What is the solution?

வெள்ளிக்கிழமை காலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் 24 வயது இளம் பெண் அரிவாளால் வெட்டப் பட்டு துடிக்க துடிக்க கொல்லப் படுகிறார். காரணம் என்னவென்று இதுவரையில் உறுதியாகத் தெரியவில்லை. கொலையாளியும் இதுவரையில் பிடிபடவில்லை. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் மூன்று வழக்கறிஞர்கள் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப் பட்டுள்ளனர். இதில் தனி மனித பகையும். உண்டு. ஒரு வழக்கறிஞர் கொலையில் அவரது மனைவியே கூலிப் படையை ஏவியது கண்டுபிடிக்கப் பட்டு அந்தப் பெண்ணும் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் முடிந்த நிலையில் இந்தக் கொலைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஏன் இவ்வளவு கொலைகள் நடக்கின்றன? தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? வழக்கமாகவே ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே போலீசுக்கு மட்டற்ற ஆதரவை ஆட்சியாளர்கள் கொடுப்பது என்பது கடந்த 25 ஆண்டுகால வரலாறுதான். ஜெ வின் 1991 - 1996, 2001 - 2006, 2011 - 2016 ஆட்சிக் காலங்களில் இதுதான் நடைமுறையாக இருந்திருக்கிறது. வேறெந்த மாநிலத்தையும் விட தமிழ் நாட்டில்தான் போலீசுக்கு இந்தளவுக்கான சலுகைகள் கொடுக்கப் படுகின்றன. சமீபத்தில் ஓசூரில் ஒரு காவலர் கொள்ளையாரால் கொல்லப் பட்ட போது அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அரசு நிதியாக ஜெயலலிதா கொடுத்தார். இது அசாதரணமானது. வழக்கமாக அதிகபட்சம் 10 லட்ச ரூபாய், கொல்லப்பட்டவரின் மனைவிக்கு வேலை, குழந்தைகளின் படிப்பு செலவு என்றுதான் அரசு பொறுப்பேற்கும். ஆனால் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டது போலீஸ் இலாகவிலேயே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்ற துறை சார்ந்த அரசு ஊழியர் எவராவது இருந்திருந்தால் ஜெ அரசு இவ்வளவு தாராளம் காட்டியிருக்குமா என்றால் அதற்கு பதில் நிச்சயம் இல்லை என்பதுதான்.

ஆனால் இந்தளவுக்கு சலுகைகள் போலீசுக்கு காட்டப்பட்டாலும் உண்மையில் இந்த துறையைக் கட்டமைப்பு ரீதியில் அதனது பணிகளை மேம்படுத்துவதற்கு ஜெயலலிதா அரசு செய்தது அனேகமாக பூஜ்யாமாகவே இருக்கிறது. இதுதான் விஷயமே. போலீஸ் துறையின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு, 2006 ம் ஆண்டு உச்ச நீதி மன்றம் ‘பிரகாஷ் சிங் தீர்ப்பில்' ஏழு கட்டளைகளை நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பித்தது. இதில் அனேகமாக ஒரு கட்டளையைக் கூட பின்பற்றாத மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று என்பது முக்கியமானது.

இதன் சுருக்கமான வரலாறு இதுதான். 1979 ல் தேசீய போலீஸ் கமிஷன் என்று ஒன்று ஏற்படுத்தப் பட்டது. அதாவது இந்தியாவில் போலீஸ் துறையின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக இது ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கமிஷன் பல பரிந்துரைகளைச் செய்தது. இவற்றின் மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஓய்வு பெற்ற இரண்டு டிஜிப் பிக்கள் 1996 ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதன் பிறகு இது குறித்து ஆய்வதற்காக இரண்டு கமிட்டிகள் நியமிக்கப் பட்டன. ஒரு கமிட்டி ஓய்வு பெற்ற பஞ்சாப் டிஜிபி ஜூலியோ ஃபிரான்சிஸ் ரிபேரோ தலைமையில் நியமிக்கப் பட்டது.

இந்தக் கமிட்டி 1998 ல் தனது அறிக்கையைக் கொடுத்தது. மற்றோர் கமிட்டி ஓய்வு பெற்ற முன்னாள் உள்துறை செயலர் பத்மநாபையா கமிட்டி, இது தனது அறிக்கையை 2000 ம் ஆண்டில் கொடுத்தது. இதனடிப்படையில் போலீசுக்கான தெளிவான நடத்தை வழி காட்டுமுறைகளை, சட்டங்களை உருவாக்குவதற்கான ‘சோலி சோராப்ஜி கமிட்டி' 2000 ம் ஆண்டில் தனது பரிந்துரைகளை கொடுத்தது.

2006 ம் ஆண்டில் விவகாரம் சூடு பிடிக்கத் துவங்கியது. அந்தாண்டு உச்ச நீதிமன்றம் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தெளிவான உத்திரவுகளை பிறப்பித்தது. இதுதான் ‘பிரகாஷ் சிங் தீர்ப்பு' பரிந்துரைகள் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒவ்வோர் மாநிலமும் பின்பற்றப் பட வேண்டிய ஏழு கட்டளைகள் உள்ளன. 2008 ம் ஆண்டு மூன்று நபர் கமிட்டியை நியமித்த உச்ச நீதிமன்றம் இந்த பரிந்துரைகளை ஒவ்வோர் மாநிலமும் எப்படி செயல்படுத்துகிறது என்று அக் கமிட்டியிடம் அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்த ஏழு பரிந்துரைகளில் முக்கியமானவை...

1. மாநில பாதுகாப்பு கமிஷன் ஒவ்வோர் மாநிலத்திலும் நியமிக்கப்பட வேண்டும். மாநில அரசின் தேவையற்ற தலையீடுகள் இல்லாமல் போலீஸ் செயற்படுவதை உறுதிப் படுத்துவது, போலீசின் செயற்பாட்டை ஆராய்வது.

2. நியமிக்கப்படும் டிஜிபி க்கள் குறைந்தது 2 ஆண்டுகள் பதவியில் இருப்பது

3. எஸ் பி க்கள், மற்றும் இன்ஸ்பெக்டர்களில் ஒரே இடத்தில் இரண்டாண்டுகள் பணியில் இருப்பது

4. சட்டம், ஒழுங்கு பிரிவையும், விசாரணை பிரிவையும் தனியாக பிரிப்பது

5. டிஎஸ்பி க்கு கீழ் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பணியிடை மாற்றம், பதவி உயர்வு போன்றவற்றை தீர்மானிக்கவும், டிஎஸ்பி க்கு மேல் உள்ள அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் பரிந்துரைகளை மேற்கொள்ளவும் போலீஸ் எஸ்டாபிளிஷ்மெண்ட் போர்டு என்ற ஒன்றை ஏற்படுத்துவது

6. போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாநில அளவில் ஒரு தனி அமைப்பு

7. தேசீயளவில் மத்திய காவல் துறை அமைப்புகளின் உயர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய தேசீய அளவிலான ஒரு அமைப்பை ஏற்படுத்துதல்...

இதுதான் 2006 ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகள். இவற்றில் அனேகமாக ஒரு பரிந்துரையை கூட செயற்படுத்தாத மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று என்பதுதான் உண்மை. 2006 - 2011 ஆண்டுகளில் இருந்து திமுக ஆட்சி மற்றும் அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சி என்று இரண்டிலும் இதில் ஒரே அணுகுமுறைதான். 2010 ல் லத்திகா சரண் டிஜிபி யாக வந்த போது அதனை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் 2010 ல் பிரகாஷ் சிங் தீர்ப்பின் படி இந்த நியமனம் இல்லையென்று கூறி அந்த நிமயனத்தை ரத்து செய்தது. அப்போதயை கருணாநிதி அரசு அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போய் அங்கும் தோற்றது. ஆனாலும் பின்னர் வேறு வழியில் லத்திகா சரணின் நியமனம் உறுதிப்படுத்தப் பட்டு அவர் டிஜிபி யாகத் தொடர்ந்தார்.

2011 ல் வந்த ஜெயலலிதா ஆட்சியில் கே.ராமானுஜம் டிஜிபி யாக நியமிக்கப் பட்டார். பதவி ஓய்வு பெற வேண்டிய கட்டத்தில் அவர் நியமிக்கப் பட்டது பல அதிகாரிகளின் பதவி உயர்வை பாதித்தது. பிரகாஷ் சிங் தீர்ப்பின் சாராம்சம் 2 ஆண்டுகள் டிஜிபிக்கள் பதவிக் காலம் என்பது யாருக்கு 2 ஆண்டுகள் வரையில் பதவியில் இருப்பதற்கான வயது இருக்கிறதோ அவர்களை மனதில் வைத்து சொல்லப்பட்டது. ஆனால் ஓய்வு பெறும் வயதை நெருங்கி விட்ட ஒருவரை டிஜிபி யாக நியமித்து அவரது ஓய்வுக் காலத்திற்கு பின்னர் அவர் பதவியில் தொடர அனுமதித்தது என்பது பிரகாஷ் சிங் தீர்ப்பின் சாராம்சத்துக்கு எதிரானது என்று அப்போதே போலீஸ் உயரதிகாரிகள் சிலரால் கருதப் பட்டது. ‘இது ஒரு வக்கிரமான அணுகுமுறை. தமிழ் நாட்டில் ராமானுஜத்தின் நியமனத்தால் 14 உயரதிகாரிகளின் பிரமோஷன் பாதிக்கப் பட்டுள்ளது, பிரகாஷ் சிங் தீர்ப்பை அரசு தவறாக பயன்படுத்தியிருக்கிறது' என்று என்னிடம் தற்போது ஏடிஜிபி யாக இருக்கும் ஒருவர் கூறினார்.

இவ்வளவு ராமாயணத்தையும் எழுதுவதற்கு காரணம் இன்று தமிழக காவல் துறையில் உள்ள பிரச்சனை நன்றாக புரையோடியிருக்க கூடிய பிரச்சனை. தங்களது பிரமோஷன் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் உள்ளே இருக்கிறார்கள். இது போலீசின் செயற்படும் திறனை எப்படி பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். உள்ளடி வேலைகள் நிரம்ப நடக்கின்றன என்கின்றனர் விவரம் அறிந்த அதிகாரிகள்.

ஆகவே அடிப்படையில் 2006 ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகும் காவல் துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளாமல் இருப்பது ஒரு மிக முக்கியமான காரணம். மற்றொன்று, தமிழ் நாட்டில் போலீசை மட்டும் கவனிக்க கூடிய உள்துறை அமைச்சர் என்ற ஒருவர் இல்லாமல் இருப்பது.

1967 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கக்கன் தான் தமிழ் நாட்டில் கடைசி உள்துறை அமைச்சர். அதற்கு பிந்தைய திராவிட கட்சிகளின் ஆட்சியில் முதலமைச்சர் தான் உள்துறை அமைச்சர். போலீசைக் கையில் வைத்திருந்தால் தங்களது எதிரிகளை எப்படி வேண்டுமானாலும் வதைக்கலாம், அடக்கி ஆளலாம் என்பதால்தான் இதில் இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான கருத்து. பல துறைகளையும் தன்னுடைய கையில் வைத்திருக்கும் ஒரு முதலமைச்சர் உள்துறை அமைச்சராகவும் இருந்தால் அது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கில் கட்டாயாமாக பாதிப்பை ஏற்படுத்ததான் செய்யும். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறைக்கு என்றே தனி அமைச்சர் இருப்பது, - அவருக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டால் - நிரம்ப முன்னேற்றத்தை ஏற்படுத்த செய்யும். ஆனால் இதற்கு வாய்ப்பு அறவே இல்லை என்பது தமிழ் நாட்டில் ஒரு குழந்தைக்கும் கூட தெரியும். ஜெயலலிதாவும், கருணாநிதியும் எந்த கட்டத்திலும் போலீஸ் இலாகாவை மற்றவர்க்கு தாரை வார்க்க மாட்டார்கள்.

ஆகவே கட்டமைப்பு ரீதியில் கடுமையான சிக்கல்கள் இருக்கின்றன. இதனையும் மீறி அரசால் ஓரளவு சாதிக்க முடியும்தான், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்தான். காதல் விவகாரங்களில் நடக்கும் கொலைகளைத் தடுக்க முடியாதுதான். ஆனால் கூலிப் படைகளின் கொட்டத்தை போலீஸ் நினைத்தால் அடக்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கூலிப் படைகளுடன் போலீஸ் கொஞ்சி குலாவிக் கொண்டிருந்தால் நிலவரம் தொடர்ந்து கலவரமாகத் தான் போய் கொண்டிருக்கும்.

ஒரு சாமானியன், அதிலும் குறிப்பாக பெண்கள் இன்று சென்னை போன்ற நகரத்திலேயே அச்சமின்றி நடப்பது என்பது கேள்விக் குறியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் இந்த நிலைமை என்பது கேலிக் கூத்தின் உச்ச கட்டம்.

இன்ஃபோசிஸ் பெண் ஊழியரின் கொலை வழக்கை தேசிய பெண்கள் ஆணையம் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிரகாஷ் சிங் தீர்ப்பின் உச்ச நீதிமன்ற பரிந்துரைகள் அமல்படுத்துவது போன்றவை நீண்ட கால செயற் திட்டங்கள்தான். உடனடியாக செய்யக் கூடியவற்றில் இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் முக்கியமான கேள்வி. புதிய அரசுக்கு 6 மாத காலம் தேன் நிலவுக் காலம், ஆகவே குறை சொல்லக் கூடாது என்பார்கள். ஆனால் இந்த அரசு புதிய அரசு இல்லை. இது இரண்டாவது முறை தொடர்ச்சியாக வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட அரசு. ஆகவே தேன் நிலவுக் காலம் என்ற பரிவை தற்போதய ஜெயலலிதா அரசுக்குக் காட்ட முடியாது என்பதுதான் உண்மை.

வெற்றுப் புள்ளி விவரங்களை சட்டமன்றத்தில் படித்து, கருணாநிதி ஆட்சியை விட தன்னுடைய ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று ஜெயலலிதா பெருமை பேசிக் கொள்வதில் எந்த பிரயோசனமும் இல்லை. இன்று தமிழகத்தில் நிலைமை அபாயகரமான கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. தகுதியான அதிகாரிகள் உடனே முக்கியமான பதவிகளில் அமர்த்தப் பட வேண்டும். மும்பையில் உள்ளது போன்று கூலிப் படைகளின் கொட்டத்தை ஒடுக்க தனி காவல் பிரிவுகள் உருவாக்கப் பட வேண்டும். இதற்கென்றே பிரத்தியேக உளவுப்பிரிவு ஏற்படுத்தப் பட வேண்டும். உடனடி நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு, இரும்புக் கரம் கொண்டு கூலிப் படைகள் ஒடுக்கப் பட்டாக வேண்டும். சாமானிய மனிதனின் பாதுகாப்பு உத்திரவாதப் படுத்தப் பட வேண்டும்.

தமிழகம் எப்போதுமே இந்தியாவிலேயே அமைதிப் பூங்காதான் என்பது ஆட்சியாளர்களின் தம்பட்டமான பேச்சுக்களில்தான் தற்போது இருக்கிறது. இது நிகழ்கால உண்மையாக வேண்டுமானால் ஜெயலலிதா அரசு செய்வதற்கு எவ்வளவோ பாக்கியிருக்கிறது!

English summary
What is the solution to improve the law and order issue in Tamil Nadu? Here is Mani's detailed article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X