For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலித்துகளைக் காத்து தமிழ்க்குடிதாங்கியாக மாறி.. வன்னியர் தலைவராக உருமாறிய டாக்டர் ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: டாக்டர்.ராமதாஸ். இந்தப் பெயரோடு வன்னியர் சங்கத் தலைவராக தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பிறகு, தமிழார்வம் காரணமாக, மருத்துவர் ச.ராமதாசு என்று மாறி, தனக்கென ஒரு வாக்கு வங்கியுடன் வலம் வருபவர் டாக்டர் ராமதாஸ்.

நான் இதுவரை ஓட்டு போட சென்றதே இல்லை. அரசியல் ஒரு சாக்கடை என்கிறார்கள். அப்படி என்றால் அதை யார் சுத்தப்படுத்துவது? எல்லாரும் ஒதுங்கி விட்டால் அயோக்கியர்கள் கைப்பற்றி விடுவார்கள். அரசியல் சாக்கடை என்றால் அதை படித்தவர்கள் தான் சுத்தப்படுத்த வேண்டும். நாம் எல்லாரும் சேர்ந்து சுத்தப்படுத்துவோம். மாற்றத்தை உருவாக்குவோம். முன்னேற்றத்துக்கு வழி வகுப்போம் என்று காஞ்சிபுரம் மாநாட்டில் பேசினார் டாக்டர் ராமதாஸ்.

Ramadoss Biography in Tamil

மருத்துவர் வாழ்க்கை

ஒரு சாதாரண மருத்துவராகத்தான் தன் பொது வாழ்வை துவக்கினார், மருத்துவர் ராமதாஸ். திண்டிவனத்தில் இன்று இருக்கும் பாலத்தின் அருகேதான் அவரது கிளினிக் இருந்தது. மிகக் குறைந்த செலவில் வைத்தியம் பார்த்ததாகவும், அவரது கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட, மிகுந்த மரியாதையோடு நடத்தியதாகவும் கூறுகிறார்கள்.

வாக்கு வங்கி

வன்னிய சமுதாய மக்கள் ஒரு கணிசமாக வாக்கு வங்கியாக இருந்தாலும், தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவி, அரசுப் பதவி போன்றவற்றில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை என்பது அவர்களின் மிகப் பெரிய மனக்குறையாக இருந்தது. இது போன்ற நிராகரிப்புகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் ஆட்சியாளர்கள்தான் காரணம் என்று வன்னிய மக்கள் பெரும்பாலும் நினைத்தனர். இந்தச் சூழலில்தான், வன்னியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்புக்கு வந்தார் டாக்டர் ராமதாஸ்.

Ramadoss Biography in Tamil

சைபால் டப்பாவும் ராமதாஸும்

ஆரம்ப காலத்தில், மருத்துவர் ராமதாஸ், திண்டிவனத்தில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது, அவரைச் சந்தித்தவர்கள் சொல்கிறார்கள். அவர் மேசையின் மேல் ஒரு "சைபால்" டப்பா வைத்திருப்பாராம். வைத்தியம் பார்க்க வரும் நோயாளிகளிடம், மருத்துவ கட்டணத்தை அந்த டப்பாவில் போடச் சொல்லுவாராம்". யாராவது அவரைப் பார்க்க வந்தால், அந்த டப்பாவிலிருந்து, சில்லரைக் காசுகளை எடுத்து, அருகில் உள்ள தேநீர்க் கடையில் பால் வாங்கி வந்து, கொடுத்து உபசரிப்பார் என்று கூறுகிறார்கள்.

மாற்றத்திற்காக

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட, சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டார்.வன்னியர் சங்கமாக இருந்த போதும் டாக்டர் ராமதாஸ் செய்த பல காரியங்கள் போற்றத் தக்கவைதான். தன்னுடைய அரசியல் வாழ்வின் ஆரம்பக் கட்டங்களில் சமூக நல்லிணக்கத்திற்காக டாக்டர் ராமதாஸ் ஆற்றிய பணிகள், குறிப்பாக தலித் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியவை. குறிப்பாக, 1980களின் இறுதியில் தலித் மக்களுக்காக டாக்டர் ராமதாஸ் களத்தில் இறங்கி பணியாற்றியிருக்கிறார்.

Ramadoss Biography in Tamil

தமிழ்க்குடிதாங்கி

குடிதாங்கி என்று ஒரு ஊர். ஒரு தலித் இறந்து விட்டார். தலித்தின் உடல் வன்னியர்கள் இருக்கும் கிராமத்தின் வழியாகத் தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஒரு தலித் சடலம் வன்னியர்கள் இருக்கும் பகுதியில் செல்வதை வன்னிய மக்கள் அனுமதிக்கவில்லை. பிரச்சனை பெரியதாகி கலவரம் வரும் நிலை. டாக்டர் ராமதாசுக்கு இந்த செய்தி தெரியவந்தது. உடனடியாக இந்த கிராமத்திற்கு வந்தார். வன்னிய மக்களிடம் பேசிப் பார்த்தார். ஒன்றும் நடக்க வில்லை. வன்னிய மக்களின் எதிர்ப்பை மீறி அந்த தலித்தின் சடலத்தை தானே எடுத்துக் கொண்டு வன்னிய கிராமத்தின் வழியாகவே கொண்டு சென்று இறுதிச்சடங்கள் செய்ய வைத்தார் டாக்டர் ராமதாஸ்.

குடிதாங்கிக் கொண்டான்

வன்னியர்களின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்தார். இந்த நிகழ்ச்சியை பார்த்து நெகிழ்ந்துப் போன திருமாவளவன் டாக்டர் ராமதாசுக்கு "குடிதாங்கிக் கொண்டான்" என்று பெயர் சூட்டினார். இவ்வாறு துவக்கத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் நம்பிக்கை ஒளிக்கீற்றாக சில காலம் தென்பட்ட ராமதாஸ் பின்னர் முழு அளவிலான ஜாதீய அரசியலை கையிலெடுத்தார்.

வன்னியர் சங்கம்

1980களின் தொடக்கத்திலே ஏ.கே.நடராசன் தலைமையில் வன்னியர் சங்கம் பெரும் உத்வேகம் பிடித்தது. அப்போது திண்டிவனம் பொறுப்பாளராக இருந்தவர்தான் மருத்துவர் இராமதாசு, ஏ.கே.நடராசன் அவர்கள் அரசு பணியிலிருந்ததால் அவரால் முழுமூச்சாக சமுதாயப் பணியிலே ஈடுபட முடியவில்லை. அப்போது சமுதாயப் பணியாற்றிய போராளிதான் மருத்துவர் இராமதாஸ், அவரது போராட்டகுணம், அற்பணிப்பை கண்டு மனமுவந்து ஏற்றுக்கொண்டது வன்னிய சமூகம்.

வட மாவட்டங்களை ஸ்தம்பிக்க வைத்தார்

1980களில், வன்னிய சமுதாயத்தின் இந்த குமுறல், பெரியதொரு போராட்டமாக வெடித்தது. தென் மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்து போனது. நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போடப்பட்டன. போக்குவரத்து 10 நாட்களுக்கு முற்றிலும் ஸ்தம்பித்தது.

Ramadoss Biography in Tamil

எம்.ஜி.ஆர். நடத்திய துப்பாக்கிச் சூடு

அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், பேச்சுவார்த்தையின் மூலம், இந்தப் பிரச்சினையை முடிக்காமல், அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த மோகன்தாஸ் என்ற காவல்துறை அதிகாரியின் பேச்சைக் கேட்டு, காவல் துறையை விட்டு போராட்டத்தை அடக்க முற்பட்டார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் இறந்தனர்.

வன்னியர் தலைவராக மாறிய ராமதாஸ்

அந்தப் போராட்டம், மருத்துவர் ராமதாசை வன்னிய மக்கள் மத்தியில் பெரிய சக்தியாக அடையாளம் காட்டியது. அந்த அங்கீகாரத்தை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ், உண்மையிலேயே முயன்றார். அப்போது வன்னியர் சங்கத்தின் முக்கிய முழக்கம், "தேர்தல் பாதை, திருடர் பாதை" "தேர்தலை புறக்கணியுங்கள்" என்பதுதான்.

அரசியல் பயணம்

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பயணம் 1989ல் தொடங்கியது. தமிழ்வழிக் கல்வி, பிற்பட்டோர்-தாழ்த்தப் பட்டோர் ஒற்றுமை, உழைப்பாளி மக்களின் உரிமைகளை நிலைநாட்டுதல், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல் போன்ற முற்போக்கான பல கொள்கைகளை முன்வைத்தது.

1989ல்

1989ல் நடைபெற்ற தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்டு, 15 லட்சத்து 36 ஆயிரத்து 350 வாக்குகளை பெற்றது. எனினும் ஓரிடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை. அவரது ஆரம்ப கால முழக்கங்களான, "ஒரு தலித்தை முதலமைச்சராக்க வேண்டும்", "எனது குடும்ப உறுப்பினர்களை அரசியலுக்குக் கொண்டு வந்தால் என்னைச் சாட்டையால் அடியுங்கள்" என்ற கொள்கை வன்னியர் சமுதாய மக்களை கவர்ந்தது.

வாழ்வுரிமை மாநாடு

பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருந்தாலும், 1992ல் அக்கட்சி நடத்திய "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" பாட்டாளி மக்கள் கட்சியின் பலத்தையும், உணர்வையும் தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. தடா" சட்டத்தை எதிர்த்து, அடக்குமுறை சட்டம் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை மருத்துவர் ராமதாஸ் தன் தோழர்களோடு சேர்ந்து தொடங்கி, தமிழகம் முழுக்க, தடா சட்டத்தை எதிர்த்து இயக்கங்களை நடத்தினார்.

முதல் எம்.எல்.ஏ. பண்ருட்டியார்

1989ல் முதன் முதலில் தேர்தலை சந்தித்தது பாட்டாளி மக்கள் கட்சி. 1991ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அப்பொழுது பாமகவின் சின்னம் யானை. அந்தத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன். யானை சின்னத்தில் வெற்றி பெற்றதால், முதல் நாள் சட்டமன்றத்துக்கு, பண்ருட்டி ராமச்சந்திரன் யானையில் அழைத்து வரப்பட்டார். அதே ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

வாழப்பாடியாரோடு

1996ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி, அப்போது, "திவாரி காங்கிரஸ்" என்ற கட்சியை நடத்திக் கொண்டருந்த வாழப்பாடி ராமமூர்த்தியோடு சேர்ந்து போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது. பாமக ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கவில்லை என்றாலும், அந்த ஆண்டு தேர்தலில் அடித்த "ஜெயலலிதா எதிர்ப்பு அலையையும்" மீறி, பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது, அரசியல் நோக்கர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

எம்.பிக்கள்

1998ல் அ.தி.மு.கவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 1998ம் ஆண்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், எப்படியாவது தன் பலத்தை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டு சேர்ந்தார். இக்கூட்டணியில் நான்கு எம்பிக்களை பெற்றது பாமக.

தொடங்கியது சறுக்கல்

இந்தத் தேர்தலில் இருந்துதான், மருத்துவர் ராமதாஸின் சறுக்கல் தொடங்கியது. தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் அமைச்சர் பதவியும் கிடைத்தது. அதுவும், மிக மிக வளமை வாய்ந்த பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பதவி கிடைத்தது. இந்த 1998ற்குள், ராமதோசோடு, ஆரம்பகாலத்தில் இருந்த அறிவு ஜீவிகள் அனைவரும் சிறிது சிறிதாக ராமதாஸ் கட்சி நடத்தும் போக்கைப் பார்த்த விலகத் தொடங்கினர்.

திமுக அணிக்குத் தாவினார்

அடுத்த ஆண்டே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவை அப்படியே தொங்கலில் விட்டு விட்டு, 2009ம் ஆண்டு திமுக அணிக்குத் தாவினார், மருத்துவர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 5 எம்.பி சீட்டுக்களைப் பெற்று, 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. மத்திய அமைச்சரவையில் அமைச்சராக வாய்ப்பு ஏற்பட்டபோது தனது கட்சியில் இருந்த இரு தலித் தலைவர்களை அடுத்தடுத்து அமைச்சர்களாக்கினார்.

மீண்டும் அதிமுகவுடன்

2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக. ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் ராமதாஸ். அடுத்த சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட அவரை சிறையில் போய் சந்தித்து பேசினார்.

தமிழகத்தைப் பிரியுங்கள்

2002ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய ராமதாஸ் தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர்,நாமக்கல், சேலம், தர்மபுரி, நாகப்பட்டினம் ஆகிய 13 மாவட்டங்களும் சேர்ந்த தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரிவினை பேசினார்.

மத்திய அமைச்சர் அன்புமணி

2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை திமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கழன்று வந்து காங்கிரஸ் அணியில் இணைந்தது. இந்தத் தேர்தலில் பாமகவுக்கு 6 எம்.பிக்கள் கிடைத்தனர். ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரானார்.

திமுக கூட்டணி

2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் இந்தத் தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலை விட இது 2 இடங்கள் குறைவாகும். 2008ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி முறிந்தது. திருமங்கலம் இடைத் தேர்தலில் பாமக எந்த நிலையையும் வகிக்காமல் அமைதியாக இருந்து விட்டது.

மீண்டும் அதிமுக

2009 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.கவுடன் கூட்டணி. 2011ல் மறுபடியும் தி.மு.கவுடன் கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது.2014 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இல்லாத பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியுடன் கூட்டணி. இப்படி இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் கூட்டணியாகவே களத்தில் நின்ற பாட்டாளி மக்கள் கட்சி இந்த முறை தி.மு.கவுடன் இல்லை. அ.தி.மு.கவுடனும் இல்லை. நாங்கள் எங்கள் தலைமையில் தனி அணி என்று கச்சை கட்டுகிறது. இதுவரை கூட்டணி வைத்த காலங்களில் 2004 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியால் கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க.வுக்கோ, தி.மு.க.வுக்கு வெற்றிக்கு உதவ முடியவில்லை என்பதுதான் தேர்தல் வரலாறு.

அன்புமணிக்கு மட்டும் வெற்றி

2014ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் எட்டு தொகுதிகளைப் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி டாக்டர் அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும்தான் வெற்றி பெற்றது. அதுவும் அங்கு 'இளவரசன்- திவ்யா' காதல் பிரச்சினையால் நிலவிய பதற்றமே டாக்டர் அன்புமணியின் வெற்றிக்கு வித்திட்டது. இந்த எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள மொத்தம் 48 சட்டமன்றத் தொகுதிகளில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை விட அதிக வாக்குகளைப் பெற முடிந்தது.

English summary
Dr.Ramadoss is a famous politician and is the founder president of pattali makkal katchi. He is also known for the association with Vanniyan Sangam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X