6 தொகுதி காலி.. தமிழகத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்காதது ஏன்? விஜய்க்கு டெல்லி கிரீன் சிக்னல்

  • சென்னை: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு மட்டும் முக்கியமாக 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் உள்ளது.

    Advertisement

    கடந்த ஜூலை 2, 2026 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இடைத்தேர்தல் அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பீகாரின் பாங்கிபூர், குஜராத்தின் மஞ்ஜல்பூர், மத்தியப் பிரதேசத்தின் தாதியா ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதோடு சேர்த்து தமிழ்நாட்டிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    Advertisement

    ஆனால் கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் உற்று நோக்க வைத்த தமிழகத்தின் 6 தொகுதி காலியிடங்கள் இந்த பட்டியலில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

    அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 முக்கிய எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

    தமிழ்நாடு சட்டசபை காலி இடங்கள்

    முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக இந்த அதிரடி முடிவை அவர்கள் எடுத்தனர். இவர்களின் கைப்பட எழுதப்பட்ட ராஜினாமா கடிதங்களை சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மிக வேகமாக ஏற்றுக்கொண்டார்.

    Advertisement

    முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து மொத்தம் 7 இடங்கள் காலியாக உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் ஏன் இங்கு தேர்தலை அறிவிக்கவில்லை என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

    மற்ற மாநிலங்களுக்கு மட்டும் அறிவிப்பு

    இதன் பின்னணியில் இருக்கும் மிக முக்கியமான 3 சட்ட மற்றும் நிர்வாகக் காரணங்கள் இதோ:

    1. ஆறு மாத கால அவகாச விதி

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 149ன் படி, ஒரு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் தேர்தல் ஆணையம் அங்கு இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். பீகார், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களின் தொகுதிகள் பல மாதங்களுக்கு முன்பே காலியானவை. இதனால் அங்கு உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு இருந்தது. ஒரு சில தொகுதிகள் இப்போது காலியானாலும்.. அதை அதே மாநில மற்ற இடைதேர்தலோடு சேர்த்து நடத்துவதே நிர்வாக ரீதியாக சரியானது.

    Advertisement

    ஆனால், தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்களின் முதல் கட்ட ராஜினாமா மே மாத இறுதியில் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கரூர் எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமா ஜூன் 29-ல் தான் நிகழ்ந்தது. சட்டப்படி, இத்தொகுதிகளுக்குத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் 2026 வரை தாராளமான கால அவகாசம் உள்ளது.

    2. சட்ட சிக்கல்கள்

    அதிமுக எம்எல்ஏக்களின் இந்த ஒட்டுமொத்த ராஜினாமாவும் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. கட்சியின் கொறடா உத்தரவுகள் மற்றும் கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தபோதே, சபாநாயகர் இவ்வளவு அவசரமாக ராஜினாமாவை ஏற்றது செல்லாது என அதிமுக தலைமை குற்றம் சாட்டுகிறது.

    Advertisement

    இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும் அதிமுக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறது. இதுபோன்ற கடுமையான சட்டப் போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர வாய்ப்பிருக்கும் சூழலில், தேர்தல் ஆணையம் அவசரப்பட்டுத் தேர்தல் தேதியை அறிவிக்க விரும்பாது. சட்டப்பேரவை செயலகத்திடம் இருந்து முழுமையான, சட்டச் சிக்கல்களற்ற இறுதி அறிக்கை வரும் வரை காத்திருப்பது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறை ஆகும்.

    3. ஒட்டுமொத்தமாகத் தேர்தலை நடத்தும் உத்தி

    தேர்தல் ஆணையம் எப்போதும் ஆங்காங்கே தனித்தனியாகத் தேர்தல் நடத்துவதைத் தவிர்க்கவே விரும்பும். தனித்தனியாகத் தேர்தல் நடத்தினால் அரசு நிர்வாக இயந்திரம் முடங்குவதுடன், பாதுகாப்புப் படையினரை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

    Advertisement

    மேலும், நடத்தை விதிகள் அடிக்கடி அமலுக்கு வருவதால் உள்ளூர் வளர்ச்சிப் பணிகளும் பாதிக்கப்படும். தமிழக அரசியல் களம் இன்னும் நிலையற்றதாகவே உள்ளதால், வரும் நாட்களில் மேலும் சில விக்கெட்டுகள் விழுமா என்பதைத் தேர்தல் ஆணையம் உற்று நோக்குகிறது. எனவே, தமிழ்நாட்டின் அனைத்து காலி இடங்களுக்கும் திருச்சி கிழக்கு உட்பட வரும் 6 மாதத்தில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

    அதே சமயம் தவெகவிற்கு ஆதரவாக இதில் டெல்லி செயல்படுகிறதோ என்ற கேள்வியும் உள்ளது. இன்னும் பல எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைய வாய்ப்பு வழங்கப்படுகிறது.. தவெகவிற்கு சாதகமான மூவ் ஆக இது இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    English Summary

    Why did ECI not announce the Bye Elections for many of the seats in Tamil Nadu yet?