கலிங்கம் காண்போம் - பகுதி 72 - பரவசமான பயணத்தொடர்


  • -கவிஞர் மகுடேசுவரன்

    விடுதியறையை அடைந்து முகம் கழுவிக்கொண்டு அமர்ந்ததும் ஓர் எண்ணம் தோன்றிற்று. ஆந்திரம் என்றால் இந்நேரம் தெலுங்குப் படமொன்றுக்குச் செல்லத் துணிந்திருப்பேன். ஒடியத் திரைப்படங்கள் குறித்து எனக்கு எவ்விதமான ஆர்வமும் இருக்கவில்லை. அதனால் பத்து மணி வரைக்கும் எங்கேனும் சென்று திரும்பலாமா என்று எண்ணம் வந்தது. புவனேசுவரத்தின் அனைத்து மக்களும் வந்து போகின்ற ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டும். எங்கே செல்லலாம் ? இங்குள்ள சந்தைப்பகுதி எதுவோ அங்கே செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

    Advertisement

    புவனேசுவரத்தின் புகழ்பெற்ற சந்தை எங்கே இருக்கிறது என்று விடுதித்தம்பியைக் கேட்டோம். அருகில்தான் இருப்பதாகச் சொன்னான். தானிழுனி ஏறினால் பத்து உரூபாய்தான் என்றான். வெளியே வந்து ஒரு வண்டியிலேறி பத்து மணித்துளிப் பயணத்தில் சந்தைப் பகுதிக்கு வந்து சேர்ந்துவிட்டோம். நகரின் நடுப்புறத்தில்தான் அப்பகுதி இருக்கிறது. நம் சென்னையின் பாண்டிச் சந்தை போலவோ பருமாச் சந்தை போலவோ பன்மாடிக் கடையகங்கள் அங்கில்லை. எல்லாமே ஒற்றைத் தரைக்கூரை வேய்ந்த கடைகள். கூட்டநெரிசலும் குறைவாகவே இருந்தது. பெருங்கடைக்குள் நுழைந்தால் எத்தகைய இளக்கத்தோடு வாங்குவோமோ அத்தகைய மனநிலை வாய்த்துவிடுகிறது.

    Advertisement

    சந்தைக்கு வந்துவிட்டோம். என்ன பொருள் வாங்குவது ? வீட்டினர்க்கு வேண்டிய நினைவுத்தன்மையுடைய பொருள்கள் எவற்றையேனும் வாங்கிச் செல்லலாம் என்று முடிவாயிற்று. புவனேசுவரத்தில் வங்காளத்தின் புகழ்பெற்ற துணிகள் விற்பனைக்குக் கிடைக்கும். அதனால் உடைகளை வாங்கிக்கொள்வது அறிவுடைமை. கடைகடையாகத் தேடினால் எல்லா வகைக்கடைகளும் இருந்தன. மட்கலயங்களும் கைவினைப் பொருள்களும் மிகுதியாக அடுக்கப்பட்டிருந்தன. எல்லாப் பொருட்கடைகளிலும் கொனாரக்குக் கோவிலைப் பதித்த பொருள்களே விலைக்குக் கிடைத்தன. ஐந்தில் ஒரு கடை செருப்புக் கடையாக இருந்தது.

    பெண்கள் அணிவதற்கேற்ற வளையல்கள், தோடுகள், மணிமாலைகள் விற்கும் கடைகள் பலவும் இருந்தன. வீட்டார்க்கு வளையல் வாங்கிச் செல்லலாம் என்று ஒரு கடையில் விலை கேட்கவும் அக்கடைக்காரர் பத்திருபது வளையல் அட்டிகளைப் பரப்பி விலை சொன்னார். எழுநூற்றைம்பது ஆயிரத்தைந்நூறு என்றிருக்கவே இதை வாங்கிச் சென்றால் நமக்குக் கிடைப்பது பாராட்டா நீராட்டா என்று கணிக்க முடியவில்லை. நாம் விலை குறைவாக வாங்கிச் சென்றால் மலிவாக வாங்கி வந்ததாகக் குற்றம் சாட்டுவர். விலையுயர்வாக வாங்கிச் சென்றால் இதற்கா இத்தனை விலை கொடுத்து ஏமாறினீர் என்று குறை காண்பர். எதற்கு வம்பு ? பணத்தைக் கொடுத்துவிட்டு பன்னீர் தெளித்துவிட வேண்டும். அம்முடிவின்படி அக்கடைக்காரரிடம் விலை மிகுதி என்று தெரிவித்துவிட்டு அகன்றோம்.

    Advertisement

    எப்படியும் துணிகள் சேலைகள் என்று வாங்கினால்தான் நற்பெயர் பெற முடியும் என்று தோன்றியது. ஒரு கடைக்காரரைப் பிடித்துவிட்டேன். எட்டுக்கு ஆறு என்ற அளவிலான கடையில் கைப்பேசியை நோண்டிக்கொண்டு அமர்ந்திருந்த அவரை நாடியதும் வரவேற்றார். நாம் கண்டடைந்த கடைக்காரர்களில் அவர்தான் ஓரளவு ஆங்கிலம் பேசினார். பேச்சுக்கு வழி பிறந்ததால் அவர் கடையிலேயே வாங்கத் தொடங்கினோம். அவர் பெயர் சின்மயா சாகூ. வடிவமான வழுக்கைத் தலையும் குண்டுக் கண்களுமாக அமர்ந்திருந்தவர் கடையையே கலைத்துப் போட்டதுபோல் துணிகளை நம்முன் குவித்தார். அவரோடு பேசிய பிறகுதான் எனக்கு நன்றாகத்தான் ஆங்கிலம் பேச வருகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

    Advertisement

    ஏறத்தாழ ஒரு மணிநேரம் உரையாடி ஏழெட்டுப் புடைவைகள் எடுத்துக்கொண்டேன். எல்லாம் வங்காளப் பருத்திப் புடைவைகள். பேசிக்கொண்டே இருக்கையில் சின்மயா சாகூக்கு நாம் யார் என்ன என்பது விளங்கிவிட்டது. மேலும் ஊக்கம் பெற்றவராகி நல்ல விலைக்குத் தம் துணிகளைத் தந்தார். நம் முகநூல் கணக்கின் பெயரைக் கேட்டுப் பெற்று நண்பரானார். இன்றுவரை முகநூல் நட்பில் தொடர்கிறார். நாம் எழுதுபவை ஆங்கிலத்தில் கிடைக்குமா என்று கருத்துப் பெட்டியில் எழுதிப் பார்த்தார். நாம் எழுதுபவை தமிழ்க்கட்டுரைகளாயிற்றே. அவர் நம் எழுத்தைப் படிக்க வழியில்லை. அவர் கடையை விட்டுச் செல்கையில் அன்புப் பரிசாக மணத்தெளிகை ஒன்றினைத் தந்தார். மகள்கட்கு வேண்டிய துணிகளை எடுப்பதற்கு இன்னொரு கடைக்கு அழைத்துச் சென்று ஆற்றுப்படுத்தினார்.

    Advertisement

    அக்கடையிலும் வேண்டிய துணிகள் எடுத்துக்கொண்டேன். அவ்விடத்தில் தமிழ்க்குடும்பம் ஒன்றினைக் கண்டேன். ஊர் பெயர் கேட்டு உரையாடினோம். புவனேசுவரத்தில் மேலும் காண வேண்டியவை குறித்து அவர் சொன்னவற்றை மனத்தில் குறித்துக்கொண்டேன். அச்சந்தையில் வாங்க வேண்டிய பொருள்களைக் குறித்தும் சில அறிவுரைகள் கூறி விடைபெற்றார். ஒருவழியாக நம் சந்தைப்படலத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது மணி பத்தாகியிருந்தது. மீண்டும் ஒரு தானிழுனியைப் பிடித்து விடுதியறை வந்து படுத்துறங்கிவிட்டோம்.

    [பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64 , 65 , 66, 67, 68, 69, 70, 71, 72, 73]

    Advertisement