அறிவரசனைக் கொஞ்சம் உரசிப் பார்க்கணும்.. பைவ் ஸ்டார் துரோகம் (27)


-ராஜேஷ்குமார்

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் சொன்னதைக் கேட்டு செந்தமிழ் அதிர்ந்து போன முகத்தோடு அவரைப் பார்த்தான்.

“என்ன ஸார் சொல்றீங்க.......? மணிமார்பனோடு சேர்த்து புதைக்கப்பட்ட அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட பிறகு, அவளுடைய கையில் M.M.S என்ற பச்சை குத்தியிருக்காங்களா ? “

“எஸ்.... அந்த பெண்ணோட உடம்பை போஸ்ட்மார்ட்டம் பண்ணின மூணு டாக்டர்ஸூம் அதை உறுதிபட சொல்லியிருக்காங்க. ஒரு பெண் உயிரோடு இருக்கும்போது பச்சை குத்தி கொள்வதற்கும், அவள் இறந்த பிறகு அவளுடைய உடம்பில் பச்சை குத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்குன்னு சொல்லி ஒரு ரிப்போர்ட் கொடுத்து இருக்காங்க. அந்த ரிப்போர்ட்டை நான் இன்னமும் உங்க ஃபாதர் கிட்டே கூட காட்டலை“

செந்தமிழ் கோபத்தில் கொந்தளித்தான்.

“அப்படீன்னா எங்க மாப்பிள்ளை மணிமார்பனை கொலை செய்த நபர் கொலையை டைவர்ட் பண்றதுக்காக ஒரு பெண்ணையும் மர்டர் பண்ணி M.M.S என்ற எழுத்துக்களை பச்சை குத்தி ஒண்ணா சேர்த்து புதைச்சிருக்காங்க ? “

“அதேதான்....... !“

“கமிஷனர் ஸார்....... இது கண்டிப்பாக எதிர் கட்சித்தலைவர் அறிவரசனோட வேலையாய் இருக்க வாய்ப்பில்லை. ஏன்னா இந்த அளவுக்கு அவனுக்கு புத்திசாலித்தனம் கிடையாது. இது யாரோ ஓரு புது எதிரி“

முகில்வண்ணன் குறுக்கிட்டார். “செந்தமிழ் இன்னிக்கு அரசியல் நிலவரம் புரியாமே நீ பேசாதே ! அந்த அறிவரசன் பழைய மாதிரி இல்லை..... தான் நினைச்சது நடக்கலைன்னா எந்த ஒரு எல்லையையும் அவன் தாண்டுவான். நம்ம மாப்பிள்ளை அறிவரசன் மூஞ்சியில் பீடா எச்சிலை துப்பினது சாதாரண விஷயம் இல்லை. எப்படிப்பட்டவனுக்கும் கோபம் வரும். அறிவரசன் உடனடியாக கோபத்தை காட்டாமே ஒரு வருஷம் கழிச்சு யார்க்கும் சந்தேகம் வராத அளவுக்கு சமயம் பார்த்து பழி தீர்த்து இருக்கான். அவன்கிட்டே முறைப்படி ஒரு விசாரணை மேற்கொண்டால் உண்மையைக் கண்டுபிடிச்சுடலாம்“

செந்தமிழ் ஏதோ சொல்ல முயல கமிஷனர் கையமர்த்தினார். “அப்பா சொல்றதுதான் சரி, அந்த அறிவரசனைக் கொஞ்சம் உரசிப் பார்க்கணும். அந்த வேலையை

நானே பார்க்கிறேன்“

முகில்வண்ணன் நிமிர்ந்தார். “கமிஷனர் ஸார்....... நீங்க விசாரணையை எப்படி பண்ணுவீங்களோ........ ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே என்னோட மாப்பிள்ளையைக் கொலை பண்ணின ஆள் யார்ன்னு எனக்கு தெரிஞ்சாகணும்...... ஆள் யார்ன்னு தெரிஞ்சதுமே எல்லார்க்கும் தெரியற மாதிரி போய் அரஸ்ட் பண்ணிடாதீங்க..... முதல்ல அவனை எனக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துங்க..... அவன் உடம்பில் இருக்கிற பாதி உயிரை எடுத்த பிறகு அரஸ்ட் பண்ணுங்க..... “ வயிறு எக்கி இரைந்து கத்தின முகில்வண்ணன் மேற்கொண்டு பேச முடியாமல் பெரிது பெரிதாய் மூச்சு வாங்கிக்கொண்டு நாற்காலிக்கு சாய்ந்தார்.

முதலமைச்சர் வஜ்ரவேலு முகில்வண்ணன் தோள் மீது கையை வைத்தார்.

“இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்படாதே முகில். நாம் மெளனமாய் இருந்துதான் காய்களை நகர்த்தணும். இது நம்ம ஆட்சி, அதிகாரம் நம்ம கையில். சட்டத்தை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நம்மால் வளைக்க முடியும். எந்த ஓரு தீர்ப்பையும் என்ன விலை கொடுத்தாவது வாங்க முடியும்...... மணிமார்பனை கொலை செய்த நபர் யாராக இருந்தாலும் சரி, ஒருவேளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச்சாலும், நம்ம கிட்டேயிருந்து தப்பிக்க முடியாது. அவனை தண்டிக்கப்போறது நீதான்“

“எனக்கு இந்த வார்த்தைகள் போதும் வஜ்ரம்“ கண்களில் நீர்மின்ன முகில்வண்ணன் முதலமைச்சர் வஜ்ரவேலுவின் கைகளைப் பற்றிக் கொண்டார்.

இரவு பத்து மணி

வருமானவரித்துறை தலைமை அதிகாரி அருள் தன்னுடைய காரை ரோட்டோரமாய் இருந்த பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு பெசண்ட் பீச் பேவ்மெண்டை நோக்கி நடந்தார். ரோட்டின் இரண்டு புறமும் பாணி பூரி ஸடால்கள், ஃபாஸ்ட்புட் உணவகங்கள், எல்.இ.டி விளக்குகளின் வெளிச்சத்தில் இளைஞர்களின் கூட்டத்தோடு களை கட்டியிருந்தது. தள்ளுவண்டிகளில் வேர்க்கடலை வாணலிக்குள் வறுபட்டுக்கொண்டிருக்க கடற்காற்றில் ரம்யமான மணம்.

சாலையின் பேவ்மெண்ட்டில் ஏறிய அருள் சுற்றும் முற்றும் பார்த்து தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு வேகமாய் நடந்து சற்று தூரத்தில் தெரிந்த இருட்டான சமுத்திரத்தை நோக்கிப்போனார். மணலில் நூறு மீட்டர் தூரம் நடந்ததும் தன்னுடைய செல்போனை எடுத்து டார்ச்லைட்டை உயிர்ப்பித்து உயர்த்திப் பிடித்தார்.

அடுத்த சில விநாடிகளில் அவர்க்கு இடதுபுறம் ஐம்பது அடி தள்ளி ஒரு செல்போனின் டார்ச்லைட் ஓளிப்புள்ளி மேலே உயர்ந்து அசைந்தது. அருள் அந்த ஓளிப்புள்ளியை நோக்கிப்போனார். நிழல் உருவங்களாய் நித்திலன், சாதுர்யா, கஜபதி மூன்று பேரும் கடலைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்க “ஸாரி.... அடையார் பக்கம் ட்ராஃபிக் ஒரு பதினைந்து நிமிஷம் நகர முடியலை.... அதான் லேட்“ என்று சொல்லிக் கொண்டே அவர்களுக்கு முன்பாய் உட்கார்ந்தார்.

நித்திலன் சிரித்தான்.

“ஸார்....... நீங்க ஸாரி சொல்ல வேண்டியது இல்லை.... நாங்களும் இப்பத்தான் வந்தோம்...... “

“அப்படியா ? “ என்று சொன்ன அருள் சுற்றும் முற்றும் பார்த்தார். சாதுர்யா கேட்டாள்.

“என்ன ஸார் பார்க்கறீங்க... ? “

“இங்கேயே உட்கார்ந்து பேசலாமா..... இல்லை..... இன்னும் கொஞ்சம் உள்ளே போயிடலாமா ... ? “

“வேண்டாம் ஸார் இந்த இடமே கம்பர்டபிளாய் இருக்கு..... “

“ஓ.கே. “ என்றவர் கஜபதியைப் பார்த்தார்.

“என்ன கஜபதி ...... முகில்வண்ணன் வீட்ல நிலவரம் எது மாதிரி போயிட்டிருக்கு .. ? “

“ குழப்பம் இன்னும் அப்படியேதான் ஸார் இருக்கு. மணிமார்பனை கொலை பண்ணின நபர் எதிர் கட்சித்தலைவர் அறிவரசன் அனுப்பிய ஆளாய் இருக்குமோ என்கிற எண்ணத்துல போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் ஒரு இன்வெஸ்டிகேஷன் டீமை ஃபார்ம் பண்ணி விசாரணை நடத்தியும் எந்த ஒரு உண்மையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. போதாத குறைக்கு இன்னொரு பிரச்சினை வேற இப்போ வெளியே தலை நீட்டிருக்கு“

“என்ன பிரச்சினை ... ? “

“போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணி சர்ச் வாரண்ட் இல்லாமல் எதிர் கட்சித்தலைவர் அறிவரசன் வீட்டுக்குள்ளே நுழைஞ்சு எல்லா அறைகளிலும் சோதனை போட்டு இருக்கார். வீட்டுப்பெண்கள் கிட்டே அநாகரீகமான முறையில் விசாரணை என்கிற பேரில் ஏதேதோ கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணியிருக்கார். இதனால கொந்தளிச்சுப் போன அறிவரசன் போலீஸ் கமிஷனர் மேலேயும், முகில்வண்ணன், செந்தமிழ் மேலேயும் அவமதிப்பு வழக்கு போட்டு, மனித உரிமை கமிஷனுக்கும் புகார் கொடுத்துட்டார்“

“சரி..... அந்த பலான தொழில்காரி லலிதாவும் சி.பி.சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் வேல்முருகனும் நீலகண்டனை ஸ்லிப்பர்ல அடிச்ச பொண்ணைக் கண்டுபிடிச்சுட்டாங்களா... ? “

“இல்ல ஸார்....... தொடர்ந்து வாரம் பத்து நாள் ஸ்கூல்ல போய் ஹெட்மிஸ்ட்ரஸ் ரூம்ல உட்கார்ந்து மானிட்டரிங் செய்து பார்த்தும் அந்த பொண்ணு யார்ன்னு கண்டுபிடிக்க முடியலை“

“அந்த பொண்ணு யார்ன்னு தெரியவந்தால்தான் மணிமார்பனோட கொலைக்கான காரணம் வெளியே வரும் இல்லையா கஜபதி ... ? “

“ஆமா.. ஸார்“

“அந்த குடும்பத்தோடு உங்களுக்குத்தான் நெருக்கமான பழக்கம்.... நீலகண்டன், மணிமார்பன், அந்த பொண்ணு இவங்களுக்குள்ளே எது மாதிரியான தொடர்பு இருந்திருக்கும்ன்னு நினைக்கிறீங்க ... ? “

“அதான் ஸார் புரியலை...... ஆனா ஓரு உண்மை எனக்குத் தெரியும் ...! முகில்வண்ணனோட பொண்ணை மணிமார்பன் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி ஒரு நடிகையோடு அவனுக்குத் தொடர்பு இருந்தது. அந்த நடிகையோட பேரு ஜெயதாரா. அவளும் இப்போ உயிரோடு இல்லை. ஒரு இந்திக்காரனை கல்யாணம் பண்ணிகிட்டு மும்பை போனவள் அங்கே ஏதோ ஒரு பிரச்சனையால விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டா. இது நடந்து நாலைஞ்சு வருஷம் இருக்கும்..... மணிமார்பன் இப்ப கொலை செய்யப்பட்டதுக்கும், அந்த ஜெயதாரா தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை ஸார்....... ! “

“வாய்ப்பு இருக்கு....... “

தங்களுக்கு பின்பக்கம் எழுந்த ஒரு கனமான குரல் கேட்டு அருள், நித்திலன், சாதுர்யா, கஜபதி நான்கு பேரும் திரும்பிப் பார்த்தார்கள்.

கடற்கரை இருட்டில் பத்தடி தொலைவில் அந்த இரண்டு உருவங்கள் நின்றிருந்தன.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29]

Have a great day!
Read more...

English Summary

Rajesh Kumar's Five Star Droham serial episode 27