சியாட்டில்: ஏஐ படுவேகமாக வளர்ந்து வரும் நிலையில், இது குறித்து பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார்கள். இதற்கிடையே ஏஐ காட் பாதர் என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் செர்னோபில் அணு உலை விபத்தை போல ஒரு பேரழிவு ஏஐயால் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றி வரும் நிலையில், அதன் வளர்ச்சியால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த எச்சரிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் AI தொழில்நுட்பத்தின் முன்னோடிகளில் ஒருவரும், ஏஐயின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹிண்டன் புதிய எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
ஏஐ நிறுவனங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமலேயே புதிய ஏஐ டூல்களை உருவாக்கி வருவதாக ஜெஃப்ரி ஹிண்டன் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்கிடையே ஏஐ காரணமாக இந்த ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ செர்னோபில் அணு உலை விபத்தை போன்ற ஒரு சம்பவம் நிகழக்கூடும் என்று எச்சரித்துள்ளார். ஏஐ காரணமாக நிதி அமைப்புகள் அல்லது மின்சார சப்ளை கட்டமைப்புகள் தற்காலிகமாக முடங்கும் ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 'AI: Probably Nothing to Worry About' என்ற ஆவணப்படும் தொடர்பாக பேசும்போது அவர் இந்த கருத்துகளை கூறினார். இதில் விஷயம் என்னவென்றால் ஏஐ டூல் ஒன்றுதான் இந்த ஆவணப்படத்துக்கு தலைப்பை கூட பரிந்துரைத்துள்ளது. இதில் ஜெஃப்ரி ஹிண்டன் மற்றும் கூகுளில் அவருடன் பணியாற்றிய டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச ஊடகமான தி கார்டியனுக்கு அளித்த பேட்டியில் ஹிண்டன், ஏஐ குறித்து பல முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார். AIஐ முழுமையாக எதிர்க்கும் நபர் இல்லை என்றாலும், இந்த தொழில்நுட்பத்தை மனிதர்கள் உருவாக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றே நினைப்பதாக ஹிண்டன் தெரிவித்தார். அவர் மேலும், "இந்த ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ செர்னோபில் போன்ற ஒரு சம்பவத்தை நாம் காணலாம். அதன் பிறகே இது எந்தளவுக்கு ஆபத்தானது என்பதை மக்கள் உணர ஆரம்பிப்பார்கள். அத்தகைய சம்பவத்திலிருந்து நாம் மீண்டு வர முடியும். இது மக்களை விழித்து கொள்ள வைக்கும்" என்றார். இதுபோன்ற சம்பவம் யாரை விழித்து கொள்ள வைக்கும் என்று நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தவிர மற்ற உலக தலைவர்களை விழித்து கொள்ள வைக்கும் என்று பதிலளித்தார். அதாவது டிரம்ப் மட்டும் தான் என்ன நடந்தாலும் பிடிவாதம் பிடிப்பார் மற்ற தலைவர்களை ஆபத்தை உணர்ந்து செயல்படுவார்கள் என்பதை குறிக்கும் வகையில் அவர் இப்படி பேசினார். ஏஐ குறித்து தீவிரமான ஆய்வுகளில் இறங்கியுள்ள மார்க் ஜுக்கர்பெர்க், எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் உள்ளிட்டோரை ஹிண்டன் கடுமையாக விமர்சித்தார். அவர்கள் குறித்து பேசும்போது, "அவர்களுக்கு ஏஐயால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் புரிகின்றன. ஆனாலும், அவர்கள் அதை பற்றி கவலைப்படுவதில்லை. பணம் சம்பாதிப்பதற்கே முன்னுரிமை அளிக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். இன்றைய ஏஐ தொழில்நுட்பத்துக்கு அடித்தளமாக இருக்கும் மெஷின் லேர்னிங் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஹிண்டன். ஏஐயின் எதிர்கால ஆபத்துகள் குறித்து அவர் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இதற்காகவே அவர் கூகுள் நிறுவனத்திலிருந்தும் விலகினார். ஏஐ சாட்பாட்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள தனி மொழியை உருவாக்கிக்கொண்டால், அதன் செயல்பாடுகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்று அவர் ஏற்கெனவே எச்சரித்துள்ளார். மேலும், மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் இயந்திரங்கள் பேசவும் சிந்திக்க தொடங்குவதும் சாத்தியமற்றது அல்ல என்று கூறியுள்ளார்.ஏஐ காட்பாதர்
செர்னோபில் பேரழிவு
பணம் தான் முக்கியம்
கட்டுப்பாட்டை மீறும்!