சென்னை: சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் பெரும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலுக்கு பிறகு பல நிர்வாகிகள் கட்சி மாறி கொண்டிருக்கிறார்கள். அதிமுகவின் பல மூத்த நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாகி வருகிறார்கள். தவெக மீது அதிமுக பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
பனையூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தவெக குதிரை பேரம் நடத்துகிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் ஏன் எல்லோரும் தவெகவை நோக்கி வருகிறார்கள். சூழ்ச்சி செய்து எடப்பாடியில் ஒருவர் வெற்றி பெற்றார். அண்ணன் செங்கோட்டையன் மேற்கு மண்டல பொறுப்பாளராக இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்தார். அதில் நம்பிக்கையான ஒருவரை தலைவராக தேர்வு செய்து அனுப்பினார்.
234 தொகுதிகளிலும் வேட்புமனு நல்லபடியாக முடிந்தது. கொளத்தூரில் ஸ்டாலின் பெற்றது உண்மையான தோல்வி. அரசியலில் வெற்றி, தோல்வி மிகவும் இயல்பானது. தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள். மு.க. ஸ்டாலினின் தோல்வியை எங்கள் தலைவரோ, நிர்வாகிகளோ யாரும் தவறாக பேசவில்லை. அதுதான் தவெகவின் பண்பு. சீனியர் தோல்வியடைந்துவிட்டார் என்று நாங்கள் எள்ளி நகையாடவில்லை. வெற்றி பெற்ற எங்களையும், எங்கள் தலைவரையும் ஸ்டாலினும், அவர் கட்சியும் எந்தளவுக்கு ஒருமையில் விமர்சித்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலினின் தோல்வியை பேசும் சமூகம் எடப்பாடியின் சூழ்ச்சியை பற்றி பேசவில்லை. தவெக சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்தவர், மாற்று வேட்பாளர் ஆகியோரை தேர்தல் அரசியலை நம்பி நியமித்தோம். கடைசியில் அங்கு என்ன நடந்தது. இவர் எங்களை குதிரை பேரம் என்று பேசலாமா. ஜெயலலிதா இருந்தவரை யாராவது அதிமுகவில் இருந்து வெளியேறினார்களா. 41 சதவீதம் வாக்குகளுடன் தனித்து வெற்றி பெற்றபோது யாராவது வெளியேறினார்களா. உங்கள் மீது என்ன தவறு என யோசியுங்கள். உங்கள் சூழ்ச்சி அரசியலை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. புரட்சி தலைவர் எப்போதும் சூழ்ச்சி செய்து எந்த பதவியிலும் அமர்ந்ததில்லை. மக்களுடன் தைரியமாக வாக்கு கேட்டு வென்றுவிடுவார். டெல்லி அரசியலுக்கு எதிராக தைரியமான நின்றவர் ஜெயலலிதா. தன்னுடைய சொந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கு தவெக வேட்பாளரை விலை கொடுத்து வாங்கியவர் இவர். எடப்பாடியில் நின்ற சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து தலைவர் 30 நொடிகள் தான் பேசினார். அவருக்கு தொலைக்காட்சி சின்னத்தில் வாக்கு கேட்டதற்கே ஆதரவு அமோகமாக இருந்தது. எங்கள் மக்கள் இயக்கத்தில் இருந்து ஒருவர் விசில் சின்னத்தில் நிறுத்தியிருந்தால் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் தவெக" என்றார்.ஸ்டாலின் தோல்வி
எடப்பாடி மீது விமர்சனம்