சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆட்சி தொடர இந்த இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது. தங்கள் எம்எல்ஏக்கள் கட்சி மாறியதால், தவெகவுக்கு பதிலடி அதிமுக வேகம் காட்டுகிறது. திமுகவும் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. கரூர் விஷயத்தில் உங்களுக்கு நல்லது நினைச்சதுக்கு, எங்கள் எம்எல்ஏக்களை திருடுவீர்களா என தவெகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இடைத்தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "நான் அரசியல் தலைவரின் வாரிசோ அல்லது சினிமா நடிகரோ இல்லை. நான் உங்களில் ஒருவன். உங்கள் ஊரில் தெருவில் வீட்டில் பார்க்கும் அண்ணன், சித்தப்பா, பெரியப்பா மாதிரி எளிய மனிதன் எடப்பாடி பழனிசாமி. எனக்கு அடுக்கு மொழியில் ஏற்ற இறக்கங்களுடன் ரசிகர்களை மயக்கும் வகையில் போலி வசனம் பேச தெரியாது. நான் கீழே இருந்து வந்தவன்.
அதனால் தான் என்னவோ மற்ற எல்லா கட்சி தலைவர்களைவிட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிராக அத்தனை சூழ்ச்சிகள் பின்னப்படுகின்றன. எனக்கு பின்னால் 100 வருடங்களுக்கு மேலாக இந்த இயக்கம் இருக்கும் என்று புரட்சி தலைவி அம்மா சொன்னார். அவர் சொன்ன சின்னம் இரட்டை. இதை காப்பாற்ற முயன்றது நம் தவறா. புரட்சி தலைவரும், தலைவியும் கட்டி காத்த இந்த இயக்கத்தை சுயநலவாதிகளுக்கு பலியாக கூடாது என நினைத்தேன். இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும் போராடி கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கு எதிராக எத்தனை சோதனைகள், சூழ்ச்சிகள், துரோகங்கள், இந்த இயக்கத்தை கைப்பற்ற சூறையாட நாடகங்கள் நடத்துகிறார்கள். இன்றைக்கு இந்த இரட்டை இலையை தவெக விமர்சனம் செய்கிறது. கரூர் விவகாரத்தில் நாம் அவர்களுக்கு நல்லது தானே நினைத்தோம். அது தான் நாம் செய்த குற்றமோ. அதற்காக நம் எம்எல்ஏக்களை திருடிட்டு போக பார்க்கிறார்களா. உயிரை கொடுத்து உழைத்த கட்சி நிர்வாகிகளை பற்றியோ, வாக்களித்த லட்சக்கணக்கான மக்களை பற்றியோ ஒரு நிமிடம் யோசித்திருந்தால் இப்படி செய்ய மனது வந்திருக்குமா. அன்பு மக்களே நியாயம் கேட்கிறோம். அன்பு பெரியவர்களே, தாய்மார்களே, சகோதர சகோதரிகளை உங்களிடம் கேட்கிறோம். புரடசி தலைவர், புரட்சி தலைவி சார்பில் நியாயம் கேட்கிறோம். அவர்களுக்கான தீர்ப்பை நீங்களே கொடுங்கள். உங்கள் தீர்ப்பு எம்எல்ஏக்களை குதிரை பேரம் பேச நினைக்கும் தவெகவுக்கும், விலைபோன துரோகிகளுக்கும் வாழ்நாள் பாடமாக இருக்க வேண்டும்" என்றார்.எத்தனை சூழ்ச்சிகள் நாடகங்கள்
துரோகிகளுக்கு பாடம்