ஏனுங்க கோவை மக்களே.. சூப்பராக மாறப்போகுது சிறுவாணி அணை.. ரூ.82 கோடியில் திட்டம்


  • கோவை: கோவை மாவட்டம் என்றாலே கொங்கு தமிழும், சிறுவாணி குடிநீரும் தான் நினைவுக்கு வரும். உலகளவில் சுவையான குடிநீரில் சிறுவாணி இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவையின் முக்கிய அடையாளமாக சிறுவாணி உள்ளது. சிறுவாணி அணையின் ஏற்பட்டுள்ள சேதங்களால் நீர் கசிவு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.82 கோடி மதிப்பில் சிறுவாணி அணையை பலப்படுத்துவதற்கு தமிழ்நாடு கேரளா அரசுகள் திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி உள்ளது. சிறுவாணி அணை கேரளா மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. குடிநீர் எடுக்கப்படுவதால் இதற்கான பராமரிப்பு தொகையை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. சிறுவாணி அணை 50 அடி உயரம் கொண்டுள்ளது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக 45 அடிக்கு தான் தண்ணீர் தேக்கப்படுகிறது. தமிழக - கேரளா அரசு ஒப்பந்தப்படி சிறுவாணியில் இருந்து தினசரி 10 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது.

    Advertisement

    சிறுவாணி அணை கூட்டம்

    பருவமழை பொய்த்து போனதால் தற்போது அணையில் 10 அடிக்கு குறைவாகவே தண்ணீர் இருக்கிறது. மழை குறைவு, மதகு பகுதியில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவு உள்ளிட்ட காரணங்களால் மிகவும் குறைவான அளவே தண்ணீர் எடுக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் உள்ள கசிவை சரி செய்வதற்காக புனே தேசிய அணைகள் பாதுகாப்பு குழு கடந்த வருடம் ஆய்வு செய்தது. அதிக அழுத்தத்தில் சிமென்ட் கலவை மூலம் கசிவை அடைக்கும் தொழில்நுட்பம் பரிந்துரை செய்துள்ளது.

    சிறுவாணி அணையின் மேம்பாடு குறித்து தமிழக, கேரள மாநிலங்களின் அதிகாரிகளின் அவ்வபோது ஆலோசனை நடத்துவது வழக்கம். சிறுவாணி அணை தொடர்பான இரண்டு மாநில அதிகாரிகளின் கூட்டுக்குழு கூட்டம் பாலக்காட்டில் நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு சார்பில் குடிநீர் வடிகால் வாரியம், கோவை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கேரளா சார்பில் அந்த மாநிலத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Advertisement

    இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை

    அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக அரசு அதிகாரிகள் கூறுகையில், "சுமார் 3 வருடங்களுக்கு பிறகு கேரளா, தமிழக அரசின் கூட்டு குழு கூட்டம் நடைபெற்றது. சிறுவாணி அணை பராமரிப்புக்காக 2022 - 2026 காலகட்டங்களில் தமிழக அரசு சார்பில் கேரளா அரசுக்கு ரூ.26 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய கூட்டு குழு கூட்டத்தில் அணை பராமரிப்பு தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அணைக்கு செல்ல கூடிய சாலைகள், வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    சிறுவாணி அணையின் மதகுகளில் ஏற்பட்டுள்ள சேதத்தால் தினசரி 10 எம்.எல்.டி நீர் கசிந்து வீணாகிறது. கசிவு இல்லாவிடின் மார்ச் மாதம் வரை குடிநீர் விநியோகம் சீராக இருக்கும். கசிவு அதிகம் இருப்பதால், ஜனவரி முதல் ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய காலத்திலேயே தினசரி 30 எம்.எல்.டி நீர் தான் எடுக்கப்படுகிறது. இதை சரி செய்ய ஆலோசனை நடத்தப்பட்டது. சிறுவாணி அணைக்கு செல்வதற்கு தமிழகத்தின் 4 வாகனங்களுக்கு தொடர்ச்சியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கேரள அரசிடம் கேட்டுள்ளோம்.

    Advertisement

    ரூ.83 கோடியில் மேம்படுத்த திட்டம்

    கடந்த காலங்களில் முடிவு செய்யப்பட்ட காத்திருப்பில் உள்ள பணி, தற்போதைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள பராமரிப்பு பணிக்காக ரூ.93 கோடி கோடி தேவை என்று கேரள அரசு கேட்டது. இரு மாநிலங்களும் பேசி பராமரிப்புக்கு ரூ.64 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டது. மேலும் கசிவை சரி செய்வதற்கு கூடுதலாக ரூ.18 கோடி செலவிட திட்டமிடப்பட்டது. இதற்கான அறிக்கையில் இரு மாநில அதிகாரிகளும் கையெழுத்திட்டு தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்புவோம். அடுத்த வருடம் கோடை காலத்தில் பணிகளை மேற்கொள் திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.

    English Summary

    Siruvani: Good news for Coimbatore people. Siruvani dam to undergoing renovation for the Value of Rs 82 crore. Tamilnadu Kerala officials decided in Join committee meeting.