சென்னை: பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் மற்றும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் வணிக வாகனங்களின் பயன்பாட்டு ஆயுட்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மாசு ஏற்படுத்தாத வாகனங்களை ஊக்குவிக்கும் வகையிலும், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் செலவுகளை குறைக்கும் வகையிலும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மிக முக்கியமான புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் எலக்ட்ரிக், சிஎன்ஜி வாகனங்களை வைத்திருப்பவர்களுக்குப் பல புதிய சலுகைகள் கிடைக்க உள்ளன. தற்போதைய நடைமுறைப்படி, சரக்கு வாகனங்களுக்கு நேஷனல் பெர்மிட் பெற குறிப்பிட்ட வயது வரம்புகள் உள்ளன. மல்டி-ஆக்சில் வாகனங்களுக்கு 15 ஆண்டுகளும், பிற சரக்கு வாகனங்களுக்கு 12 ஆண்டுகளும் அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய வரைவு விதிகளின்படி பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் மற்றும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் வணிக வாகனங்களின் பயன்பாட்டு ஆயுட்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதன்மூலம் EV மற்றும் CNG வாகனங்களை வாங்கிய உரிமையாளர்கள் கூடுதல் ஆண்டுகள் வரை தங்கள் வாகனங்களை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த முடியும். லாரி மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் இனி ஆண்டுதோறும் அலைந்து திரிந்து நேஷனல் பெர்மிட்டைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை. விருப்பமுள்ளவர்கள் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு எலக்ட்ரானிக் முறையில் நேஷனல் பெர்மிட் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஓராண்டுக்கு 16,500 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், பெர்மிட்டிற்கான விண்ணப்பப் படிவம் 46 மற்றும் அனுமதி வழங்கும் படிவம் 47 ஆகிய அனைத்து நடைமுறைகளும் முழுமையாக ஆன்லைன் மயமாக்கப்பட உள்ளன. வாகனங்களின் தற்காலிகப் பதிவுக்கான விதிகளிலும் முக்கிய தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாடி கட்டப்படாத சேஸிஸ் வாகனங்களுக்கு வழங்கப்படும் தற்காலிகப் பதிவு 6 மாதங்களுக்குச் செல்லுபடியாகும். பாடி கட்டும் பணி தாமதமானாலோ அல்லது எதிர்பாராத சூழல் ஏற்பட்டாலோ, பதிவு செய்யும் அதிகாரியிடம் விண்ணப்பித்து ஒரு முறைக்கு 30 நாட்கள் வீதம் கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளலாம். வேறு மாநிலத்தில் பதிவு செய்யப்படும் வாகனங்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்றியமைக்கப்படும் முழுமையான வாகனங்களுக்கு 45 நாட்கள் வரை தற்காலிகப் பதிவு செல்லும். அலைச்சலையும் காகிதப் பயன்பாட்டையும் குறைக்க, வாகனப் பதிவுகள் வாகன் போர்ட்டலுடன் முழுமையாக இணைக்கப்படுகின்றன. டீலர்ஷிப் சான்றிதழ் அல்லது வாகன எண்ணை கொடுத்தால் உரிமையாளர் விவரங்கள், ஜிஎஸ்டி, பான், உத்யம் ஆதார் மற்றும் நிறுவன அடையாள எண் (CIN) போன்ற தரவுகள் தானாகவே போர்ட்டலில் பதிவாகிவிடும். வாகனப் பதிவிற்கான படிவம் 20-ல் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது. கடன் அல்லது லீசிங் மூலம் வாங்கப்பட்ட வாகனங்களின் ஒப்பந்த எண்களும் ஆவணங்களில் துல்லியமாகப் பதிவு செய்யப்படும். படிவம் 48-ல் வாகனத்தின் செல்லுபடியாகும் இன்சூரன்ஸ், புகை பரிசோதனை சான்றிதழ் (PUC), ஃபிட்னஸ் சான்றிதழ் மற்றும் நிலுவையில் உள்ள அபராதச் சலான் விவரங்கள் அனைத்தும் ஒரே பக்கத்தில் நேரடியாக சரிபார்க்கப்படும்.வாகனங்களின் ஆயுட்காலம் மேலும் 5 ஆண்டுகள் அதிகரிப்பு
5 ஆண்டுகளுக்கு ஒரே நேரத்தில் நேஷனல் பெர்மிட்
தற்காலிக பதிவில் திருத்தம்
வாகன் போர்டல் மூலம் டிஜிட்டல் ஆவணங்கள்