சென்னை டூ மதுரவாயல் இனி பறக்கலாம்.. இரட்டை அடுக்கு மேம்பால பணியில் மிகப்பெரிய ட்விஸ்ட்!

  • சென்னை: சென்னையின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரட்டை அடுக்கு உயர்மட்ட மேம்பாலச் சாலைத் திட்டத்தில் தற்போது மிக முக்கியமான கட்டம் எட்டப்பட்டுள்ளது.

    Advertisement

    கூவம் ஆற்றின் வழித்தடத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில், மேம்பாலத்தின் இரண்டாவது தளத்திற்கான கான்கிரீட் கார்டர்கள் பொருத்தும் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

    Advertisement

    சுமார் ரூ.5,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் 20.6 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் இந்த எக்ஸ்பிரஸ்வே திட்டம், சென்னையின் போக்குவரத்து நெரிசலை ஒட்டுமொத்தமாகக் குறைப்பதுடன், துறைமுக சரக்கு போக்குவரத்தை முழுமையாகப் புரட்டிப்போடும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இரட்டை அடுக்கு திட்டத்தின் தனித்துவம்

    தொடக்கத்தில் ஒற்றை அடுக்கு மேம்பாலமாகத் திட்டமிடப்பட்டுப் பின்னர் ரத்து செய்யப்பட்ட இத்திட்டம், தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் பரிந்துரையின் பேரில் அதிநவீன இரட்டை அடுக்கு மேம்பாலமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.

    சென்னை துறைமுகப் பகுதி முதல் கோயம்பேடு வரை 4 வழிப்பாதையாக இந்த தளம் அமைகிறது. இந்த பாதையில் உள்ளூர் வாகனங்கள் மற்றும் கார்கள் போன்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதில் சிவானந்தா சாலை, கல்லூரி சாலை, ஸ்பர்டேங்க் சாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் ஏறி, இறங்குவதற்கு 13 தனித்தனி பாதைகள் அமைக்கப்படுகின்றன.

    Advertisement

    கீழ் தளத்திற்கு மேலாக அமையும் இரண்டாவது தளம் 6 வழிப்பாதையாக உருவாக்கப்பட்டு, மதுரவாயல் முதல் சென்னை துறைமுகத்தின் 10-வது நுழைவு வாயில், அதாவது நேப்பியர் பாலம் வரை நேரடியாக இணைகிறது. கனரக லாரிகள் மற்றும் கன்டெய்னர் வாகனங்கள் மட்டுமே இதில் அனுமதிக்கப்படும். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய தரைவழிச் சாலைகளில் சரக்கு லாரிகளின் போக்குவரத்து முழுமையாகத் தவிர்க்கப்படும்.

    இரண்டாம் அடுக்கு கார்டர் அமைக்கும் பணிகள்

    கூவம் ஆற்றுப் படுகையில் அமைக்கப்பட்ட ஆழமான தூண்கள் மற்றும் துணை தூண்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில், மேல் தளத்திற்கான கார்டர்களைப் பொருத்தும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    Advertisement

    கூவம் ஆற்றில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பணிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பம் முழுவீச்சில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக செம்பரம்பாக்கம் மற்றும் ஈவிபி ஃபிலிம் சிட்டி வளாகங்களில் உள்ள பிரம்மாண்ட வார்ப்பு யார்டுகளில் மாதத்திற்கு 500-க்கும் மேற்பட்ட வலுவூட்டப்பட்ட கான்கிரீட் செக்மென்ட்கள் தயார் செய்யப்பட்டு களத்திற்கு எடுத்துவரப்படுகின்றன.

    தூண்களின் மேற்பகுதியில் அதிநவீன லாஞ்சிங் இயந்திரங்கள் மூலம், கீழே உள்ள போக்குவரத்துக்கோ அல்லது ஆற்று நீரோட்டத்திற்கோ எவ்வித இடையூறும் இன்றி வான்வழியாகவே செக்மென்ட்கள் இணைக்கப்பட்டு கார்டர்களாக நிலைநிறுத்தப்படுகின்றன. பணிகளை விரைந்து முடிக்க தினசரி 16 மணி நேரம் வரை ஷிப்ட் முறையில் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    தற்போது ஆண்டிற்கு 53 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளும் சென்னை துறைமுகம், 2047-க்குள் 200 மில்லியன் மெட்ரிக் டன் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது

    2027 நவம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு வைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் செயல்பாட்டுக்கு வரும்போது, தினசரி 20,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் வாகனங்களும் 5,500 கன்டெய்னர் லாரிகளும் நகருக்குள் செல்லாமல் எளிதாகப் பயணிக்க முடியும். இதன்மூலம் மதுரவாயல் புறவழிச்சாலையிலிருந்து சென்னை துறைமுகத்தை அடைய நெரிசல் நேரங்களில் ஆகும் 2 மணி நேரப் பயண நேரம், வெறும் 20 முதல் 25 நிமிடங்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

    English Summary

    Chennai Port-Maduravoyal Double-Decker Expressway: Second-Tier Girder Work Begins