டோல் கட்டணத்தைத் தவிர்க்க.. இதை மட்டும் பண்ணாதீங்க.. மத்திய அரசின் வார்னிங்.. கவனம்!


  • டெல்லி: நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் செலுத்தாமல் தப்பிக்க நம்பர் பிளேட்டை மாற்றி மோசடி செய்பவர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. ஆள்மாறாட்டம் மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் FIR பதிவு செய்து கைது நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    டெல்லியின் முன்ட்கா பகுதியில் உள்ள UER-II சுங்கச்சாவடியில் இந்த அதிர்ச்சி மோசடி அம்பலமாகியுள்ளது. பல வாகன உரிமையாளர்களின் FASTag கணக்கில் இருந்து தொடர்ந்து பணம் கழிக்கப்பட்டது. ஆனால், பணம் கழிக்கப்பட்ட அதே நேரத்தில் அந்த வாகனங்கள் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த சம்பவம் பாதிக்கப்பட்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    Advertisement

    பாதிக்கப்பட்டவர்கள் NHAI-ன் தொழில்நுட்பப் பிரிவான Indian Highways Management Company Limited (IHMCL)-ஐ அணுகி புகார் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தினர். வாகன் (Vahan) தரவுத்தளத்தை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

    மோசடி எப்படி நடந்தது?

    சுங்கச்சாவடியைக் கடந்த சில வாகனங்களில் FASTag ஒட்டப்படவில்லை என்பது தெரியவந்தது. டோல் கட்டணத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வாகன உரிமையாளர்கள் தங்கள் நம்பர் பிளேட்டில் உள்ள எண்களை திட்டமிட்டு மாற்றியுள்ளனர். இந்த மாற்றப்பட்ட எண்கள், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பிற அப்பாவி வாகனங்களின் பதிவு எண்களுடன் பொருந்தியுள்ளன.

    Advertisement

    இதனால், தானியங்கி கேமராக்கள் போலி எண்களைப் படம் பிடித்து, அந்த எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்த அசல் வாகன உரிமையாளர்களின் FASTag கணக்கில் இருந்து பணத்தை தானாக கழித்தன. இது திட்டமிட்ட ஆள்மாறாட்ட மோசடியாகும்.

    அதிகாரிகள் கேமரா பதிவுகளை வாகனத்தின் மாடல், நிறம், உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது கேமராவில் பதிவான வாகனமும், பதிவு எண்ணுக்கு சொந்தமான வாகனமும் வேறு என்பது உறுதியானது. சுங்கச்சாவடி சோதனையில் இருந்து தப்பி, போலீஸ் பின்தொடர்வதைத் தவிர்க்கவே இந்த நம்பர் பிளேட் மாற்றம் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

    தடையற்ற சுங்க முறை எப்படி செயல்படுகிறது?

    முன்ட்கா சுங்கச்சாவடியில் NHAI அறிமுகப்படுத்தியுள்ள Multi-Lane Free Flow (MLFF) முறையில் வாகனங்கள் வரிசையில் நிற்காமல் வேகமாகக் கடக்கலாம். மேலே பொருத்தப்பட்டுள்ள RFID ரீடர்கள் மற்றும் AI தொழில்நுட்பம் கொண்ட ANPR கேமராக்கள் வாகன எண்களைத் துல்லியமாகப் படித்து FASTag வாலட்டில் இருந்து தானாக பணம் கழிக்கின்றன.

    Advertisement

    இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை மோசடியாளர்கள் தங்கள் சாதகத்திற்கு பயன்படுத்த முயன்றுள்ளனர். எனினும், AI கேமராக்களின் துல்லியத்தால் மோசடி எளிதில் கண்டுபிடிக்கப்பட்டது.

    NHAI ஏற்கெனவே நம்பர் பிளேட்டை மறைப்பது, எண்களை அழிப்பது போன்ற முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி போக்குவரத்துத் துறையிடம் தொடர் சோதனைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது இந்த விவகாரம் ஆள்மாறாட்டக் குற்றமாக மாறியதால், டெல்லி போலீஸ் மூலம் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    அதிகாரிகள் எச்சரிக்கை: இனி இத்தகைய மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத் தண்டனை உள்ளிட்ட கடும் தண்டனை கிடைக்கும். பொதுமக்கள் FASTag-ஐ சரியாகப் பராமரிக்கவும், நம்பர் பிளேட்டை மாற்ற முயற்சிக்காதீர்கள் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

    Advertisement

    இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

    English Summary

    Don't Change Number Plates to Avoid Toll! NHAI Issues Strict Warning