மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா?

  • சென்னை: நம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்ட எரிபொருள் விலை, தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது சாமானிய மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    சிங்கிளாகப் பார்க்கும்போது 87 பைசா அல்லது 91 பைசா உயர்வு என்பது பெரிய விஷயமாகத் தெரியாமல் போகலாம். ஆனால், கடந்த மே 15-ம் தேதியில் இருந்து கணக்கிட்டுப் பார்த்தால், ஒட்டுமொத்தமாக ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட 5-7 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இந்தத் தொடர் உயர்வு நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டை மெல்ல மெல்ல பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    விலை உயர்வு கணக்கு: உங்கள் பையிலிருந்து எவ்வளவு எக்ஸ்ட்ரா போகிறது?

    தினமும் வேலைக்குச் செல்பவர்களுக்கும், வாகனங்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த விலை உயர்வு மிக வேகமாகக் பாக்கெட்டை காலி செய்யும்.

    ஒரு சாதாரண நகரக் குடும்பம் மாதத்திற்கு சராசரியாக 40 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது ஏறியிருக்கும் 5 ரூபாய் கணக்குப்படி பார்த்தால், அந்த குடும்பத்திற்கு மாதத்திற்கு 200 ரூபாய் கூடுதலாகச் செலவாகும். இதுவே ஒரு வருடத்திற்கு என்று கணக்கிட்டால், சுமார் 2,400 ரூபாய் நீங்கள் பெட்ரோலுக்காக மட்டுமே கூடுதலாகச் செலவழிக்க வேண்டியிருக்கும்.

    Advertisement

    இந்த 2,400 ரூபாய் என்பது சும்மா அல்ல. ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இந்தத் தொகையைக் கொண்டு பல விஷயங்களைச் செய்ய முடியும்:

    இளம் முதலீட்டாளர்கள் தங்களின் மியூச்சுவல் ஃபண்ட் (SIP) திட்டத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கான தொகையைச் செலுத்தலாம்.

    ஒரு மாதத்திற்கான இன்டர்நெட் (Broadband) மற்றும் ஓடிடி (OTT) சந்தாக்களுக்கான கட்டணத்தை முழுமையாகச் செலுத்த முடியும்.

    இது வெறும் பெட்ரோல் விலை உயர்வு மட்டுமல்ல!

    எரிபொருள் விலை உயர்வு என்பது வெறும் வாகன ஓட்டிகளை மட்டும் பாதிப்பதில்லை. பெட்ரோல், டீசல் விலை ஏறும்போதெல்லாம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் பாதிக்கப்படும். சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரி மற்றும் வாகனங்களின் வாடகை (Logistics Costs) அதிகரிக்கும். இதன் நேரடி விளைவாக, நாம் அன்றாடம் வாங்கும் காய்கறிகள், மளிகைப் பொருட்கள், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகள் மற்றும் கால் டாக்ஸி, ஆட்டோ கட்டணங்கள் என எல்லாமே விலையேறும் அபாயம் உள்ளது.

    Advertisement

    ஏற்கனவே வீட்டுக்கடன் அல்லது வாகனக்கடன் இஎம்ஐ (EMI), பிள்ளைகளின் பள்ளிப் படிப்பு கட்டணம், கரண்ட் பில் எனப் பல செலவுகளைச் சமாளித்துக் கொண்டிருக்கும் மாதச்சம்பளக்காரர்களுக்கு, இந்தத் திடீர் எரிபொருள் கட்டண உயர்வு கையில் இருக்கும் சேமிப்பைக் குறைத்து, பெரும் சுமையாக மாறும்.

    விலை உயர்வுக்கு என்ன காரணம்?

    கடந்த சில மாதங்களாகத் தேர்தல் மற்றும் பல்வேறு காரணங்களால் எவ்வித மாற்றமும் இன்றி நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலைகள், தேர்தலுக்கு பின்பாக.. மே 15 முதல் திடீரென அதிரடியாக உயர்த்தப்படத் தொடங்கின. கடந்த இரு வாரங்களில் மட்டும் நான்கு கட்டங்களாக இந்த விலையேற்றம் நுகர்வோர் மீது திணிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மே 15, 2026 - முதல் கட்ட விலையேற்றம்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தத் தொடங்கின. முதல் தவனையாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு அதிரடியாக ரூ.3.00 உயர்த்தப்பட்டு நுகர்வோருக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டது.

    மே 19, 2026 - இரண்டாம் கட்ட உயர்வு: முதல் உயர்வு தந்த அதிர்ச்சி விலகுவதற்குள், அடுத்த நான்கே நாட்களில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 90 காசுகள் உயர்த்தப்பட்டது.

    மே 23, 2026 - மூன்றாம் கட்ட உயர்வு: சர்வதேச சந்தையின் அழுத்தத்தைக் காரணம் காட்டி, மே 23 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரிக்கப்பட்டன. இதே நாளில் டெல்லியில் சி.என்.ஜி (CNG) எரிவாயு விலையும் கிலோவுக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டது.

    Advertisement

    மே 25, 2026 (இன்று) - நான்காம் கட்ட அதிரடி உயர்வு: கடந்த இரு வாரங்களில் இல்லாத அளவுக்கு இன்று மிகக் கடுமையான விலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 என மிகக் கொடூரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    கடந்த 10 முதல் 12 நாட்களுக்குள் மட்டும், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலை ஒட்டுமொத்தமாக தோராயமாக ரூ.7.50 காசுகள் வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77 ஆகவும், டீசல் ரூ.99.55 ஆகவும் விற்பனையாகிறது.

    மேற்கு ஆசியப் பகுதியில் (West Asia) நிலவி வரும் போர் மற்றும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த கூடுதல் சுமையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீது ஏற்றி வருகின்றன.

    மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை என்னவென்றால், ஒருமுறை விலை உயர்வது அல்ல; மாறாக, இப்படி அடிக்கடி விலை உயர்ந்து கொண்டே போனால், மாதக்கடைசியில் குடும்பத்தை நடத்துவது எப்படி என்பதுதான். சர்வதேச சந்தை நிலவரங்கள் சீராகும் வரை இந்த விலை உயர்வுப் போக்கு தொடரலாம் என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

    English Summary

    Petrol, Diesel Prices Increase by ₹7/Litre Since May 15: How It Affects Your Budget