சென்னை: தமிழகத் தொழில்துறையில் தற்போது ஒரு முக்கியமான செய்தி பரவி வருகிறது. சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு, பல ஆண்டுகளாகத் தமிழகத்திலேயே பைக்குகளைத் தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம், முதன்முறையாக மாநிலத்திற்கு வெளியே தனது புதிய ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.
திருவொற்றியூர் மற்றும் ஒரகடம் ஆகிய இடங்களில் பைக்குகளைத் தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம், முதன்முறையாகத் தமிழகத்திற்கு வெளியே தனது புதிய ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அருகில் உள்ள சத்தியவேடு (தடா) பகுதியில், சுமார் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த புதிய தொழிற்சாலை அமையவிருக்கிறது. 1955-ஆம் ஆண்டிற்குப் பிறகு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தமிழகத்தைத் தாண்டி வேறொரு மாநிலத்திற்குச் செல்வது இதுவே முதல்முறை என்பதால், இது பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தற்போதைய சூழல், புதிய முதலீட்டாளர்கள் மத்தியில் சில கேள்விகளை எழுப்பியுள்ளதாகப் பேச்சுக்கள் எழுகின்றன. தற்போதைய தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா இருக்கிறார். முன்பெல்லாம் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் முதலில் தேர்ந்தெடுக்கும் மாநிலமாகத் தமிழகம் இருந்தது. ஆனால், தற்போதைய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, புதிய நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர சற்றுத் தயங்குவதாகச் சொல்லப்படுகிறது. புதிய கொள்கைகள் மற்றும் அரசியல் சூழல் எப்படி இருக்கும் என்ற பயத்தால், பெரிய நிறுவனங்கள் தமிழக அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தக்கூடத் தயங்குவதாகத் தொழில்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால், வரவிருக்கும் காலங்களில் பல புதிய முதலீடுகளைத் தமிழகம் இழக்க நேரிடும் என்ற கவலையும் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் தமிழகத்திற்குப் பெரிய பெரிய வெளிநாட்டு நிறுவனங்களைக் கொண்டு வந்ததில் முன்னாள் அமைச்சர்களான டி.ஆர்.பி. ராஜா, தங்கம் தென்னரசு மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு முக்கியப் பங்கு இருந்தது. உலக அளவில் அவர்களுக்கு இருந்த தொடர்புகளும், நவீன அணுகுமுறைகளும் முதலீட்டாளர்களை எளிதாகக் கவர்ந்தன. ஆனால், தற்போதைய நிர்வாகச் சூழலில் இத்தகைய தகுதிவாய்ந்த நபர்களின் வழிகாட்டுதல்களும், முதலீட்டாளர்களுடனான நேரடித் தொடர்புகளும் விடுபட்டுப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. உலகளாவிய சந்தையில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் திறன் படைத்த இவர்களின் பங்களிப்பு இல்லாதது, தமிழகத்திற்கு ஒரு பெரிய இழப்பு என்று பொருளாதார வல்லுநர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆந்திர அரசு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்குத் தேவையான நிலத்தை ஒதுக்கி இந்த முதலீட்டைத் தன் பக்கம் இழுத்துள்ளது. இந்த புதிய ஆலையின் மூலம் ஆந்திராவில் ஆயிரக்கணக்கான பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. இருப்பினும், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தின் செய்யார் பகுதியில் உள்ள தனது ஆலையை விரிவுபடுத்த ₹958 கோடி முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அதன் அடுத்தகட்ட பெரிய முதலீடு ஆந்திராவிற்குச் சென்றிருப்பது, தமிழக அரசு தனது தொழில்துறை கொள்கைகளையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.தமிழகத்திற்கு முதலீடுகள் வர தயக்கம் ஏன்?
டி.ஆர்.பி. ராஜா, பி.டி.ஆர் போன்றோரின் பங்களிப்பு விடுபடுகிறதா?
ஆந்திராவின் புதிய வாய்ப்பு