வோக்ஸ்வேகன் நிலைமை படுமோசம்.. 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம், 4 தொழிற்சாலை க்ளோஸ்?

  • ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய மறுசீரமைப்பு திட்டத்தை முன்னெடுக்கத் தயாராகியுள்ளது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது மட்டும் அல்லாமல் ஜெர்மனியில் பல தொழிற்சாலைகளை மூடுவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    இந்த நடவடிக்கை மூலம் செலவுகளைக் குறைத்து உலகளாவிய வர்த்தக போட்டியில் மீண்டும் முன்னிலை பெறும் நோக்கில் இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த தகவல் உலக ஆட்டோமொபைல் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஒரு லட்சம் பேரின் வேலைக்கு ஆபத்து?

    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஒலிவர் ப்ளூம் தலைமையில் நடைபெற்ற நிர்வாக குழுக் கூட்டத்தில் புதிய மறுசீரமைப்பு திட்டம் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பணியாளர் குறைப்பை இரட்டிப்பாக்கி, மொத்தம் 1 லட்சம் பணியிடங்கள் வரை குறைக்க நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

    தற்போது வோக்ஸ்வேகன் குழுமத்தில் சுமார் 6.57 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில், ஒரு லட்சம் பணியிடக் குறைப்பு என்பது நிறுவனத்தின் செயல்பாட்டை தலைகீழாக மாற்றக்கூடும் அளவிலான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஜெர்மனியில் தொழிற்சாலைகள் க்ளோஸ்

    பணியாளர் குறைப்புடன் மட்டுமல்லாமல், ஜெர்மனியில் செயல்பட்டு வரும் நான்கு தொழிற்சாலைகளையும் சில காலத்தில் மூடுவதற்கான திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஆடி நிறுவனத்தின் நெக்கார்சுல்ம் தொழிற்சாலை, வோக்ஸ்வேகனின் ஹானோவர், ஸ்விக்காவ் மற்றும் எம்டன் தொழிற்சாலைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதேநேரத்தில், உதிரிபாக உற்பத்தி பிரிவுகளை தனியாக பிரிப்பது மற்றும் வோக்ஸ்வேகன் பிரதான பிராண்டின் நிர்வாக அமைப்பையும் மேலும் எளிமைப்படுத்துவது போன்ற மாற்றங்களும் ஆலோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    11 பில்லியன் யூரோ செலவுக் குறைப்பு

    இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் முக்கிய நோக்கமாக, இந்த தசாப்தம் முடிவதற்குள் அதாவது 2030க்குள் நிறுவனத்தின் நிர்வாக மற்றும் பொதுச் செலவுகளை சுமார் 11 பில்லியன் யூரோ வரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வோக்ஸ்வேகனின் பிரதான கார் பிராண்டு குறைந்த லாப விகிதத்துடன் செயல்பட்டு வருகிறது. இதனால் நிறுவனத்தின் செலவுக் கட்டமைப்பை முழுமையாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    ஏன் இந்த கடுமையான நடவடிக்கை?

    உலகளாவிய ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள பல்வேறு சவால்கள் வோக்ஸ்வேகன் நிறுவனத்தை இந்த முடிவை நோக்கி தள்ளியுள்ளன. அமெரிக்காவின் இறக்குமதி வரிகள், சீன சந்தையில் நீடிக்கும் பலவீனமான டிமாண்ட், ஐரோப்பாவில் சீன மின்சார வாகன நிறுவனமான பி.ஒய்.டி. மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் போன்ற நிறுவனங்களின் தீவிர போட்டி ஆகியவை நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

    இதனால், உலக சந்தை சூழலுக்கு ஏற்ப நிறுவனம் தனது செயல்பாட்டு அமைப்பை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த தகவல்கள் குறித்து வோக்ஸ்வேகன் நிறுவனம் முழுமையான தகவல் வெளியிடவில்லை. அடுத்த மாதம் நடைபெறவுள்ள மேற்பார்வை குழுக் கூட்டத்தில் இந்த மறுசீரமைப்பு திட்டம் விவாதிக்கப்பட உள்ளது.

    Advertisement

    உலக ஆட்டோ துறைக்கு முக்கிய சிக்னல்

    வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு மட்டும் இந்த பிரச்சனை இல்லை, ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறைக்கும் பிரச்சனை உள்ளது. எலக்ட்ரிக் வாகன மாற்றம், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள், உலகளாவிய போட்டி மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவை உலகின் முன்னணி கார் நிறுவனங்களையே கடுமையான செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டி வருகின்றன.

    அந்த வரிசையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகனின் இந்த மறுசீரமைப்பு திட்டம், உலக ஆட்டோமொபைல் துறையில் அடுத்த கட்ட மாற்றங்களுக்கு முக்கிய சிக்னலாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Volkswagen is considering its biggest-ever restructuring, which could result in up to 100,000 job cuts and the closure of four factories in Germany. The move aims to reduce €11 billion in costs by 2030 amid rising competition and weak demand in key markets.