சென்னை: சோஷியல் மீடியாவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள முன்னணி இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி, தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக காலடி எடுத்து வைத்துள்ளார். எந்த படத்தில் தெரியுமா? யாருடன் ஜோடி தெரியுமா? விக்ரம் பிரவுடன்தான்.. இதை பற்றிதான் கோடம்பாக்கம் முழுக்க பேச்சாக உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அமலா ஷாஜி.. டிக்-டாக் மூலம் தனது சமூக வலைதளப் பயணத்தை தொடங்கி, பிறகு இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான விக்ரம் பிரபுவின் படத்தின் மூலம் அவர் அறிமுகமாகியுள்ளார். வெள்ளித்திரையில் இந்த அறிமுகம், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 26-வது படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் மிகப்பிரம்மாண்டமான முறையில் இயக்கி வருகிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்திற்கு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 'சத்ரியன்' படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபுவும் யுவன் சங்கர் ராஜாவும் மீண்டும் இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் இப்போதே உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு அதிரடியாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்க மார்க்கெட் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில், விக்ரம் பிரபுவுடன் சிவத்மிகா உள்ளிட்ட பல முக்கிய ஸ்டார்கள் இணைந்துள்ளனர். மேலும் படத்தின் கேமராவை கார்த்திக் ஷராஜ் மேற்கொள்ள, எடிட்டிங்கை அருள் மோசஸ் கவனிக்கிறார். இந்த படத்தில் அமலா ஷாஜியின் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில், போஸ்டர்களும் பளிச்சிடுகின்றன.. அந்த போஸ்டரில் அவர் மஞ்சள் கலர் டிரஸ்ஸில் இடம்பெற்றிருந்தது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.. அதிலும் தங்கத்தை மையமாகக் கொண்ட படத்தின் பின்னணிக்கு ஏற்ப இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை அதைவிட ஈர்த்துள்ளது. இந்த கூட்டணியில்தான் இன்ஸ்டாகிராம் ஸ்டார் அமலா ஷாஜி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து திரையுலகில் நுழைந்துள்ளார். தனது சினிமா பிரவேசம் குறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், தன் வாழ்நாளில் கண்ட மிகப் பெரிய கனவு தற்போது நனவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். "ஒரு காலத்தில் நான் கனவாக மட்டுமே கண்ட ஒன்று, இப்போது நனவாகி வருகிறது. இது என் முதல் திரைப்படம்; இந்தத் தருணத்தை நான் என்றென்றும் போற்றுவேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை அமலா ஷாஜி உரித்தாக்கியுள்ளார். இந்தத் சினிமா பயணம் தனக்கு ஒரு சின்ன தொடக்கமாக இருந்தாலும், மிகச் சிறப்பானதொரு மைல்கல்லாக அமையும் என்று அவர் மிகுந்த உற்சாகத்துடன் கூறியுள்ளார். சோஷியல் மீடியாவில் ஏற்கனவே கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள அமலா ஷாஜி, தனது முதல் படத்திலேயே விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிப்பதால், இவரின் வெள்ளித்திரை என்ட்ரி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது... வெல்கம் அமலா ஷாஜி...!!டிக்டாக் அமலா ஷாஜி
தங்க மார்க்கெட் பின்னணி
நெகிழ்ந்த ஹீரோயின்