எது குணம்? யார் தீர்மானிப்பார்கள்?.. கறுப்பும் காவியும் (18)


- சுப. வீரபாண்டியன்

பகவத் கீதை தொடர்பான ஒரே ஒரு செய்தியை நாம் தெளிவுபடுத்திக் கொண்டு, அடுத்த இடம் நோக்கி நகரலாம். .

வருணம் என்பது குணத்தின் அடிப்படையில்தானே தவிர, பிறப்பின் அடிப்படியில் என்று கீதையில் கூறப்படவில்லை என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் ஒரு பெரிய உண்மையை மறைத்துவிட முடியாது, கூடாது. ஒரு நூலில் உள்ள சொற்களுக்கும், அவை நடைமுறையில் உணர்த்தும் பொருளுக்கும் இடையில் உள்ள இமாலய வேறுபாட்டை எப்படி மறப்பது? குணத்தின் அடிப்படையில்தான் வருணம் என்றால், குணம் மாறும்போது வருணம் மாறுமா? எங்காவது மாறியுள்ளதா? மதம் மாற முடியும், நாடு விட்டு நாடு கூட மாற முடியும், ஆண் கூடப் பெண்ணாக மாற முடியும். ஆனால் சாதி மட்டும் மாறவே முடியாது என்றால் அது எத்தனை இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து அதனை ஒழிக்கப் பாடுபட வேண்டாமா?

எந்தச் சிறுவனுக்காவது குணம் பார்த்துப் பூணூல் அணிவிக்கப் படுகின்றதா? பார்ப்பனர்களில் கூடப் பெண்களுக்குப் பூணூல் உண்டா? சமற்கிருதச் சொற்களுக்கு 'வியாக்கியானம்' சொல்லித் தப்பித்துவிடுவது நேர்மையானதுதானா? இந்த வருண சாதி அமைப்பை எதிர்த்துப் போராடிய பூலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நாம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டாமா? அவர்களைப் பின்பற்றிப் போராட வேண்டாமா?

கீதையைப் புனித நூல் என்று போற்றுவதன் மூலம் குண அடிப்படை என்ற பெயரில், நடைமுறையில் பிறப்பின் அடிப்படையிலான வருண வேறுபாடுதானே தொடரும்? இது தொடர்பாக மேலும் சில வினாக்களையும் நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.

1. குணத்தின் அடிப்படையில் வருணம் என்றால், அது எந்த வயதில் முடிவு செய்யப்படுகிறது?

2. அதனை முடிவு செய்வோர் யார்? அவர்களுக்கான தகுதி என்ன?

3. குணம் மாறும்போது, அதனைக் கண்டறிந்து மாற்றுவதற்கான கட்டமைப்பு என்ன?

"இறுதியாக இன்னொரு வினாவையும் முன்வைக்கிறேன். குணத்தின் அடிப்படையில்தான் வருணம் என்றால், மனிதர்களுக்கு அந்தக் குணத்தைப் படைத்தவர், பக்தி அடிப்படையில், கடவுள்தானே? ஏன் ஒரு பிரிவினருக்கு நல்ல குணத்தையும், இன்னொரு பிரிவினருக்குத் தீய குணத்தையும் அந்தக் 'கடவுள்' கொடுக்க வேண்டும்? சமத்துவமின்மையை, ஏற்றத் தாழ்வை உங்கள் கடவுள் திட்டமிட்டே உருவாக்கினாரா? "

சாதி அடிப்படையில் மட்டுமின்றி,பால் அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வுகளை கீதை கற்பிக்கிறது.

பெண்களை இழிவாகக் காட்டும் கருத்துகள் பொதிந்ததுதான் கீதை. இதோ சில எடுத்துக்காட்டுகள் -

.நூல் : "பகவத் கீதை உண்மையுருவில்"

ஆசிரியா்: "தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்" (அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியாா்)

அத்தியாயம்:1 , பதம்: 40

பொருளுரை:

"வாழ்வில் அமைதி, வளம் , ஆன்மீக முன்னேற்றம் ஆகியவற்றிற்கான ஆதாரம், மனித சமுதாயத்தில் நன்மக்கள் இருப்பதாகும். நன்மக்கள் தழைத்தோங்குவதின் மூலம், நாட்டிலும் சமூகத்திலும் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும். அதற்குத் தகுந்தாற் போல் , வர்ணாஷ்ரம தருமத்தின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகு சமுதாயம், அதன் பெண்குலத்தின் கற்பையும் நம்பகத் தன்மையையும் பொறுத்திருக்கிறது.

குழந்தைகளைத் தவறாக வழிநடத்துதல் எளிது, அதுபோலவே பெண்களும் எளிதில் வீழ்ச்சியடையும் சுபாவம் உடையவர்கள். எனவே, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் பாதுகாப்புத் தேவை.

பல்வேறு அறச்செயல்களில் ஈடுபடுத்தப்படுவதின் மூலம், பெண்கள் கற்புக்குப் புறம்பான தவறான உறவுகளை வளர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

சாணக்கியப் பண்டிதரின் கூற்றுப்படி பெண்கள் அறிவாளிகள் அல்ல, அதனால் நம்பகமானவர்களுமல்ல. எனவே, அவர்களை எப்போதும் பலவிதமான அறம் சார்ந்த குலப்பண்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். அதன்மூலம், அவர்களது கற்பும் பக்தியும் வர்ணாஷ்ரம முறையில் பங்கேற்கத்தக்க நல்ல சமுதாயத்தை தோற்றுவிக்கும்.

இத்தகு வர்ணாஷ்ரம தர்மம் சீர்குலையும் போது, இயற்கையாகவே பெண்கள் ஆண்களுடன் கலந்து செயல்படுவதற்கான சுதந்திரத்தைப் பெறுகின்றனர்.

இதனால் பெண்களின் கற்புநிலை இழக்கப்பட்டு தவறான உறவுகள் தோன்றி, தேவையற்ற சந்ததிகள் என்னும் அபாயத்தை உண்டு பண்ணுகின்றன. "

இந்த கீதையைத்தான் புனித நூல் என்று 'காவி' உயர்த்திப் பிடிக்கிறது. கீதையின் மறுபக்கத்தை 'கறுப்பு' எடுத்துக் காட்டுகிறது.

பகுதி [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 , 17, 18, 19]

Have a great day!
Read more...

English Summary

Professor Subavee's new series Karuppum Kaaviyum in Oneindia Tamil.