விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்

  • சென்னை: தமிழக அரசுத் துறைகளில் நேற்று முன்தினம் ( மே-30) ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல லட்சம் காலிப்பணியிடங்கள் இருந்த நிலையில், இந்த புதிய ஓய்வுகளால் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் நிர்வாக பணிகள் பாதிக்கப்படுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.

    Advertisement

    தமிழக அரசின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வித் துறைகளில் சேர்த்து 12 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் உள்ளன. இவற்றில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் பணியாற்றி வருகின்றனர்.

    Advertisement

    தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது தற்போது 60 ஆக உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    அரசு ஊழியர்கள்

    குறிப்பாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
    அந்த வகையில், கடந்த ஆண்டு மே 31-ஆம் தேதி மட்டும் 8,144 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றிருந்தனர். அதேபோல் இந்த ஆண்டும் மே மாதத்தின் கடைசி பணிநாளான நேற்று முன் தினம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    இந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்களில் கணிசமானோர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    Advertisement

    காலிப்பணியிடங்கள்

    கடந்த இருபது ஆண்டுகளாக அரசு பணிகளில் இணைந்த பலர் தற்போது ஓய்வு வயதை எட்டியிருப்பதால், அடுத்த சில ஆண்டுகளிலும் இதேபோன்ற நிலை தொடரக்கூடும் என்று அதிகாரிகள் கணிக்கின்றனர். இதற்கிடையே தமிழக அரசுத் துறைகளில் ஏற்கனவே அதிகளவிலான காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பல்வேறு துறைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள ஓய்வுகளால், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பணியாளர் பற்றாக்குறை

    மொத்த பணியிடங்களில் சுமார் 41 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுவது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அரசுத் துறைகளின் தினசரி செயல்பாடுகள், மக்கள் சேவைகள், நலத்திட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நேரடியாக மனிதவளத்தை சார்ந்தே இயங்குகின்றன. குறிப்பாக பள்ளிக்கல்வி, சுகாதாரம், வருவாய் நிர்வாகம், காவல் துறை, உள்ளாட்சி நிர்வாகம் போன்ற முக்கிய துறைகளில் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    Advertisement

    அரசுப் பணியிடங்கள்

    பல அலுவலகங்களில் ஒரு ஊழியர் இரண்டு அல்லது மூன்று பேரின் பணிகளை சேர்த்து கவனிக்கும் நிலையும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அரசுப் பணியிடங்கள் காலியாக இருப்பது நிர்வாக சிக்கலை மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களிடையேயும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காக போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர்.

    வேலைவாய்ப்பு

    ஆனால் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாததால், அவர்களின் வேலைவாய்ப்பு கனவு நீண்ட காலமாக தள்ளிப்போய் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசு பணியிடங்கள் ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் காலியாகின்றன. ஆனால் அவற்றில் ஒரு பகுதி மட்டுமே புதிய நியமனங்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. இதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    Advertisement

    முதலமைச்சர் விஜய்

    இந்நிலையில், தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை கட்டாயம் நிரப்புவோம் என்று தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.

    குரூப் தேர்வுகள்

    குறிப்பாக ஆசிரியர் பணியிடங்கள், மருத்துவத் துறை காலிப்பணியிடங்கள், குரூப் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் நிர்வாகப் பணியிடங்கள் உள்ளிட்டவற்றுக்கான அறிவிப்புகளை விரைவாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    English Summary

    More than 5,000 government employees retired in a day, pushing Tamil Nadu government vacancies beyond 5 lakh and raising recruitment demands.