பள்ளிகளுக்கு 155 நாட்கள் லீவு! காலண்டர் வெளியீடு! அதிகபட்சம் விடுமுறை எந்த மாதம்? கல்வித்துறை லிஸ்ட்

  • சென்னை: 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு 155 நாட்கள் விடுமுறையும், 210 வேலை நாட்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அட்டவணைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இயங்க ஆரம்பித்துவிட்டது. மாணவ - மாணவிகளும் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். பள்ளிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து இதர நாட்களில் எத்தனை நாட்கள் லீவு வரும் என்று காலண்டரின் பின் பக்கம் திருப்பி, அரசு விடுமுறை நாட்களை மாணவர்கள் எண்ணிக்கொண்டு இருப்பார்கள்.

    Advertisement

    2026-27 கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டி

    90ஸ் காலத்தில் இருந்து, இன்றைய ஆல்பா கிட்ஸ் வரை மாறாத ஒரு பழக்கமாக இது மாணவர்களிடையே உள்ளது. உங்களுக்கு ஏன் சிரமம் என்பது போல, ஒவ்வொரு ஆண்டு, பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் லிஸ்ட்டை பள்ளி கல்வித்துறை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், 2026-27 கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டி வெளியாகியுள்ளது. இந்த நாட்காட்டியில், பள்ளிகள் திறக்கப்பட்ட ஜூன் மாதம் முதல் 2027 ஏப்ரல் மாதம் வரை எந்தெந்த நாட்களில் வகுப்புகள் நடைபெறும், எத்தனை நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    Advertisement

    காலாண்டு தேர்வு எப்போது?

    நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 210 வேலை நாட்களும், 155 விடுமுறை நாட்களும் உள்ளன. ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 24 வேலை நாட்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது இந்த மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர இதர நாட்களில் விடுமுறை தினம் எதுவும் இல்லை. தேர்வு அட்டவணையைப் பொறுத்தவரை, காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17 முதல் 25 வரை நடைபெறும். அதன்பிறகு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை 9 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.

    அரையாண்டு தேர்வு எப்போது?

    அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறும். அரையாண்டு விடுமுறையை பொறுத்தவரை டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை 11 நாட்கள் வழங்கப்படுகிறது. ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 7 முதல் 23 வரை நடைபெறும். ஏப்ரல் 23-ஆம் தேதி கல்வியாண்டின் கடைசி வேலை நாளாக இருக்கும். அதன்பிறகு மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படும் என்று நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை

    நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 22 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக உள்ளது. இந்த புதிய நாள்காட்டியின்படிதான், ஜூலை 19, செப்டம்பர் 19, டிசம்பர் 19 ஆகிய 3 சனிக்கிழமை வேலை நாட்களாக உள்ளன. அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில், தொடர்ந்து 4 நாட்கள் லீவு வருகிறது. அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய்) ஆயுத பூஜை, விஜய தசமி வருகிறது. இதனால், சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்ந்து, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

    பொங்கல் பண்டிகை ஜனவரி 15 முதல் 17 வரை கொண்டாடப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர்ந்து பொங்கலுக்கு விடுமுறை கிடைக்கும். ஜூன், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் 18 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்குகின்றன. இதர நாட்கள் விடுமுறையில் சென்று விடுகின்றன.

    English Summary

    Tamil Nadu School Education Department has announced the 2026-27 academic calendar with 210 working days and 155 holidays. Quarterly, half-yearly and annual examination schedules have also been released, with the academic year ending on April 23, 2027.