TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள்


  • சென்னை: திருவள்ளூரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி துறைத் தேர்வில் வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த குளறுபடியால் பதவி உயர்வு வாய்ப்புகள் பாதிக்கப்படும் என தேர்வர்கள் கவலை தெரிவித்தனர்.

    Advertisement

    தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான துறை மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. அதன் இரண்டாம் கட்டத் தேர்வுகள் கடந்த மே 30-ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றன. திருவள்ளூர் லட்சுமி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 157 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்.

    Advertisement

    டிஎன்பிஎஸ்சி தேர்வு

    நேற்று நடைபெற்ற தேர்வில் 'தி அக்கவுண்ட் டெஸ்ட் பார் சப் ஆர்டினேட்' (வினாத்தாள் எண் 137) மற்றும் 'தி அக்கவுண்ட் டெஸ்ட் பார் எக்ஸிக்யூட்டிவ் ஆபீசர்' (வினாத்தாள் எண் 152) ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், 152-ஆம் எண் வினாத்தாள் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு 137-ஆம் எண் வினாத்தாளும், 137-ஆம் எண் வினாத்தாள் பெற வேண்டியவர்களுக்கு 152-ஆம் எண் வினாத்தாளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    தேர்வு முடிந்த பிறகே இந்த குளறுபடி தெரியவந்ததால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் தேர்வு மையத்தில் இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதால் தங்களின் பதவி உயர்வு வாய்ப்பும், பணிவாழ்க்கை முன்னேற்றமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

    Advertisement

    அதிகாரியை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள்

    மேலும், இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்வில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை டிஎன்பிஎஸ்சி ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது அங்கிருந்து செல்ல முயன்ற அதிகாரி ஒருவரை சிலர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை முற்றுகையிட்டு கேள்விகளை தொடுத்ததால் சிறிது பதற்றமான சூழல் ஏற்பட்டது.

    தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது புகார்களை மனுவாக எழுதி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் வழங்கினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    TNPSC: Government employees and teachers protested at a TNPSC exam centre in Tiruvallur after question papers were allegedly distributed incorrectly. Candidates said the error could affect promotion opportunities and demanded action. Police intervened, and a formal complaint was submitted.