சென்னை: கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியது. இந்தத் துயரமான வழக்கு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது சிரித்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளைத் தமிழக முதல்வர் விஜய் சஸ்பெண்ட் செய்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் செய்தி காட்டு தீ போல பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஒன்இந்தியா தமிழ் ஃபேக்ட் செக் குழு ஆய்வு செய்தது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கடந்த வாரம் 10 வயது சிறுமி ஒருவர் திடீரெனக் கடத்தப்பட்டார். பெற்றோர்கள் தேடி வந்த நிலையில், அச்சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் தமிழகம் முழுவதும் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற போராட்டங்களும் வெடித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இத்தகைய கொடூரமான கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்களை வெளியிட கடந்த வாரம் மேற்கு மண்டல ஐஜி ஆர்.வி.ரம்யா பாரதி உள்ளிட்ட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். பிரஸ் மீட் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் பிரஸ் மீட் தொடங்குவதற்கு முன்பு சிரித்துப் பேசியிருந்தனர். ஒரு தரப்பினர் இவ்வளவு சென்சிட்டிவான விஷயம் குறித்துப் பேசும்போது இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக்கூடாது என விமர்சித்தனர். அதேநேரம் இன்னொரு தரப்பினர் பிரஸ் மீட் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் முன்பு தான் இது நடந்துள்ளது. பொதுவாக இதுபோல பிரஸ் மீட் தொடங்குவதற்கு முன்பு நடக்கும் விஷயங்கள் வெளியே வராது.. ஆனால், இந்த விஷயம் வெளியே வந்திருப்பதாகச் சந்தேகம் கிளப்பியுள்ளனர். இருப்பினும், அதிகாரிகள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த வீடியோ பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே சிரித்துப் பேசிய வீடியோவை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அந்த 3 அதிகாரிகளையும் அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாகச் சில பேஸ்புக் பக்கங்களில் தகவல் வெளியானது. Well Done CM Vijay, "This Is How CM Should Act" என்ற வாசகங்களுடன் இது தொடர்பான கார்டுகள் பகிரப்பட்டது. வெறும் மூன்றே மணி நேரத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான கமெண்ட்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஷேர்கள் என இது வைரலாகி வருகிறது. இருப்பினும், இது தொடர்பாக நாம் விசாரித்தபோது, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இந்தத் தகவல் முற்றிலும் தவறானது போலிச் செய்தி என தெரிய வந்தது. கோவை சிறுமி கொலை வழக்கு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரிகள் சிரித்த வீடியோ காட்சி வெளியாகிப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்களிடையே கடுமையான கண்டனங்களை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான் என்றாலும், அவர்கள் யாரும் முதலமைச்சர் விஜய்யால் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.செய்தியாளர் சந்திப்பு
முதல்வர் உத்தரவு?
உண்மை என்ன