சென்னை: தமிழகத்தில் அரசு மாதிரி பள்ளிகளின் பெயர் "வெற்றிப் பள்ளிகள்" என மாற்றம் செய்யப்படவில்லை என தமிழ்நாடு தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர், வெற்றிப் பள்ளிகள் என மாற்றம் செய்யப்பட்டதாக பரவும் தவறான தகவல்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர், "வெற்றிப் பள்ளிகள்" என மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த 2025ஆம் ஆண்டிலிருந்தே வெற்றிப் பள்ளிகள் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. வெற்றிப் பள்ளிகள் என்பது ஓர் வட்டாரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து, மாதிரிப் பள்ளிகளைப் போன்ற அனைத்து பயிற்சிகளையும் வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டதாகும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதல் திமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு நல்ல திட்டங்களின் ப பெயர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வந்தன. அந்த திட்டங்களின் பெயர்களில் எல்லாம் வெற்றி என்பதை சேர்த்துக் கொண்டனர். "நான் முதல்வன் திட்டம்", "விடியல் பயணம்", "முதல்வர் படைப்பகம்", "முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்", "கலைஞர் கனவு இல்லம் திட்டம்", "தாயுமானவர் திட்டம்" உள்ளிட்ட திமுகவின் திட்டங்களுக்கு பெயர்களை மாற்றியது தவெக அரசு. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஸ்டிக்கர் ஓட்டும் அரசு, ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட்டா, என்றெல்லாம் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் அமைச்சர்கள், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் விமர்சித்து வந்தனர். அதாவது விடியல் பயணம் வெற்றி பயணமானது, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டமானது. கலைஞர் கனவு இல்லம், வெற்றி வீடு திட்டமானது, நான் முதல்வன் திட்டம்- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு திட்டமாக மாற்றப்பட்டது. அது போல் முதல்வர் படைப்பகம்- தமிழ்நாடு கலை மற்றும் படைப்பாக்க மையமானது. தாயுமானவர் திட்டம்- தமிழ்நாடு எளியோர் வறுமை ஒழிப்பு திட்டம் என பெயர் மாற்றப்பட்டது. அந்த வகையில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மாதிரி பள்ளிகள் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாதிரி பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி, உணவு, தங்குமிடம் என அனைத்தும் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் தலா ஒரு மாதிரி பள்ளி தொடங்கப்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை, டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி, கணினி மற்றும் இணையதள வசதி, அனைத்து உபகரணங்களுடன் கூடிய ஆய்வகம், நுண்கலைத் திறன் பயிற்சி, விளையாட்டு மைதானம், உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் மாதிரி பள்ளிகளில் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த மாதிரி பள்ளிகளில்தான் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த மாதிரி பள்ளிகளை வெற்றி பள்ளிகள் என மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன. அதை அரசு மறுத்துள்ளது.உண்மை என்ன ?
நடந்தது என்ன?
நான் முதல்வன் திட்டம்
விடியல் பயணம்
டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி
ஐஐடி, என்ஐடி