ரெண்டு நாள்ல அழுகி போற தக்காளிக்கே மவுசு வரும் போது.. தங்கத்துக்கு வராதா? வாங்கி குவிக்கும் வங்கிகள்

  • சென்னை: தங்கம் விலை ஏன் தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே உள்ளது என்ற கேள்விக்கு தற்போது புதிய பதில் கிடைத்துள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அடுத்த 12 மாதங்களிலும் அதிக அளவில் தங்கத்தை வாங்க திட்டமிட்டிருப்பதாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இதன் காரணமாக எதிர்காலத்திலும் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையிலேயே நீடிக்க வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவில் தங்கம் விலை சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்ததும், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததும் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

    Advertisement

    அதிலும் குறிப்பாக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி கையிருப்பை அதிகரித்து வருவது தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தான் தற்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    உலக தங்க கவுன்சில்

    உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான மத்திய வங்கி தங்க கையிருப்பு ஆய்வு அறிக்கையில், உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தங்கம் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை தொடர்ந்து நிலையற்றதாக இருக்கும் நிலையில், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை மத்திய வங்கிகள் பார்க்கின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    மத்திய வங்கிகள்

    குறிப்பாக அடுத்த 12 மாதங்களில் உலக மத்திய வங்கிகளின் தங்க கையிருப்பு மேலும் அதிகரிக்கும் என்று 89 சதவீத மத்திய வங்கி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதில் முக்கியமாக, 45 சதவீத மத்திய வங்கிகள் தங்களது சொந்த தங்க கையிருப்பையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளன. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இது மிக உயர்ந்த அளவாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக உலக மத்திய வங்கிகள் ஆண்டுக்கு சராசரியாக 1,000 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. இதற்கு முன்பு பத்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 500 டன் மட்டுமே வாங்கப்பட்டு வந்தது.

    Advertisement

    பணவீக்கம்

    அதாவது, தங்கம் வாங்கும் வேகம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. உலக அரசியல் பதற்றங்கள், போர்கள், பொருளாதார மந்தநிலை அச்சம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் மத்திய வங்கிகள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக கருதி அதிக அளவில் வாங்கி வருவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்க கையிருப்பை கணிசமாக அதிகரித்துள்ளது. 2024 நிதியாண்டில் 822 டன் அளவில் இருந்த தங்க கையிருப்பு, 2025 நிதியாண்டின் இறுதியில் 879.58 டன்னாக உயர்ந்துள்ளது. பின்னர் 2026-ம் ஆண்டில் அது 880.52 டன்னாக அதிகரித்துள்ளது.

    ஆர்பிஐ தங்க கையிருப்பு

    இதன் மூலம் இந்தியாவும் தங்கத்தை முக்கிய கையிருப்பு சொத்தாக கருதுகிறது என்பது தெளிவாகிறது.உலக தங்க கவுன்சில் ஆய்வில் பங்கேற்ற மத்திய வங்கி அதிகாரிகள் பல முக்கிய காரணங்களை தெரிவித்துள்ளனர். போர், பொருளாதார நெருக்கடி போன்ற அவசர காலங்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக செயல்படுகிறது என்பதே முதல் காரணமாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் முதலீட்டு பன்முகப்படுத்தல், பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு, அரசியல் அபாயங்களுக்கு எதிரான காப்பீடு போன்ற காரணங்களாலும் தங்கத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அமெரிக்க டாலர்

    இந்த ஆய்வில் மற்றொரு முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது. உலக கையிருப்பு சொத்துகளில் அமெரிக்க டாலரின் பங்கு அடுத்த 5 ஆண்டுகளில் குறையலாம் என்று 74 சதவீத அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் யூரோ மற்றும் சீனாவின் யுவான் நாணயங்களின் பங்கு பெரிய அளவில் மாறாது என்றும், அதே நேரத்தில் தங்கத்தின் பங்கு அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தில் தங்கத்தின் செல்வாக்கு மேலும் உயரக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

    தங்கத்தின் தேவை

    உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்தால் அதன் தாக்கம் நேரடியாக இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும். ஏற்கனவே தங்கத்தின் விலை புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான கொள்முதல் காரணமாக விலை உயர்வு நீடிக்கலாம் என்று சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் நகை வாங்க திட்டமிட்டு இருக்கும் பொதுமக்கள், குறிப்பாக திருமணத்திற்காக தங்கம் சேமித்து வருபவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடலாம்.

    Advertisement

    தங்கம் விலை உயரும்

    உலக அரசியல் சூழல், போர் பதற்றங்கள், பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை ஆகியவை தொடரும் வரை தங்கத்தின் முக்கியத்துவம் குறைய வாய்ப்பில்லை என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு, பணப்புழக்கம் மற்றும் நீண்டகால மதிப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களாலும் தங்கம் மத்திய வங்கிகளின் விருப்பமான சொத்தாக தொடர்ந்து இருக்கும் என்றும், அடுத்த சில ஆண்டுகளிலும் தங்கத்துக்கான தேவை வலுவாக நீடிக்கும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது. இதனால் தங்கம் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பை விட, உயர்ந்த நிலையிலேயே நீடிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றே தற்போதைய உலகளாவிய சூழல் சுட்டிக்காட்டுகிறது.

    English Summary

    Global central banks plan more gold purchases, raising expectations that gold prices may remain elevated in coming years.