டன் கணக்கில் தேறுமே.. கோவில் தங்கத்தில் கை வைக்கும் மத்திய அரசு? பதறிப் போன பக்தர்கள்! உண்மை என்ன?

  • டெல்லி: இந்தியாவில் உள்ள கோவில்களில் உள்ள தங்கத்தை பணமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அந்த தகவல்களை மத்திய நிதியமைச்சகம் முற்றிலும் மறுத்துள்ளது. குறிப்பாக, கோவில்களின் கோபுரங்கள், கதவுகள் மற்றும் பிற கட்டிட அமைப்புகளில் பொருத்தப்பட்டுள்ள தங்கத் தகடுகள் இந்தியாவின் "தங்க கையிருப்பு" என கருதப்படும் என்ற தகவலும் முழுக்க முழுக்க பொய்யானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    Advertisement

    நாடு முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் மத நிறுவனங்களிடம் இருக்கும் தங்கத்தை மத்திய அரசு பத்திரங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது என்றும், கோவில் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய தங்கப் பத்திர திட்டம் அறிவிக்கப்பட உள்ளது என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வந்தன.

    Advertisement

    இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பமும் உருவானது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல்களை மத்திய நிதியமைச்சகம் முற்றிலும் மறுத்துள்ளது.

    கோவில் தங்கம்

    இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "கோவில் அறக்கட்டளைகள் அல்லது மத நிறுவனங்களிடம் உள்ள தங்கத்தை பணமாக்கும் வகையில் எந்த திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. இதுகுறித்து பரவி வரும் தகவல்கள் அனைத்தும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை" என்று தெளிவுபடுத்தியுள்ளது.

    மத்திய நிதியமைச்சகம்

    மேலும், கோவில் கோபுரங்கள், சன்னதி கதவுகள் அல்லது பிற கட்டிட அமைப்புகளில் பொருத்தப்பட்ட தங்கத் தகடுகள் இந்தியாவின் முக்கிய தங்க கையிருப்பாக கருதப்படும் என்ற தகவல்களும் உண்மையல்ல என்று நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. "கோவில்களின் தங்க அலங்காரங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அல்லது அவை நாட்டின் தங்கச் சேமிப்பாக அறிவிக்கப்படும் என்ற வதந்திகள் முழுமையாக பொய்யானவை" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    தங்க பணமாக்கல்

    இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்றும், அரசு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலமே மக்கள் நம்ப வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எந்த புதிய திட்டமாக இருந்தாலும் அது அரசு இணையதளங்கள், செய்திக்குறிப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் தளங்கள் வழியாக மட்டுமே அறிவிக்கப்படும் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சமூக வலைதள வதந்தி

    இதற்கிடையில், அண்மையில் இந்திய துணிநூல் மறுசுழற்சி துறையைப் பற்றி வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கும் மத்திய அரசு பதிலளித்திருந்தது. குறிப்பாக, பானிபட் போன்ற பகுதிகளில் உள்ள மறுசுழற்சி மையங்களைப் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக செய்தி வெளியிட்டதாகவும், இந்தியாவின் பெரிய அளவிலான மறுபயன்பாட்டு மற்றும் மறுசுழற்சி அமைப்புகளின் வளர்ச்சியை அவை கவனிக்காமல் விட்டுவிட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    Advertisement

    மத்திய அரசு

    தற்போது கோவில் தங்கம் தொடர்பாக பரவிய தகவல்களுக்கும் அதேபோல் விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மக்கள் சரிபார்க்காமல் நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளது. இந்தியாவில் உள்ள கோவில்களில் உள்ள தங்கத்தில் மத்திய அரசு கை வைக்காது என தற்போது மத்திய நிதியமைச்சகமே சொல்லியிருக்கும் நிலையில், பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    English Summary

    Union Finance Ministry dismissed rumours about monetising temple gold and clarified no such proposal exists.