நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு?

  • நியூயார்க்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் தங்கம் விலை 2 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதும், அமெரிக்க டாலர் மதிப்பு பலவீனமடைந்துள்ளதும் முதலீட்டாளர்களை காத்திருக்க வைத்துள்ளது.

    Advertisement

    கடந்த சில மாதங்களாக அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணி மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் உலக பொருளாதாரத்தை பெரிதும் பாதித்தது. குறிப்பாக மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவியது.

    Advertisement

    இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற அச்சத்தையும் உருவாக்கியது. இதனால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை நீண்ட காலம் உயர்ந்த நிலையிலேயே வைத்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

    தங்கம்

    இந்த சூழலில் தங்கம் உள்ளிட்ட பாதுகாப்பான முதலீடுகளிலும் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஒரு ஆரம்பகட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஒப்பந்தம் வருகிற வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சர்வதேச தங்க சந்தை

    இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே சர்வதேச தங்க சந்தையில் விலை வேகமாக உயர்ந்தது. அவுன்ஸ் ஒன்றுக்கான ஸ்பாட் தங்கம் 2 சதவீதம் உயர்ந்து 4,304 டாலரை கடந்தது. ஜூன் 9-ஆம் தேதிக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாக இது பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆகஸ்ட் மாத அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களும் 2 சதவீதம் உயர்ந்து 4,325 டாலரை தொட்டன.

    போர் பதற்றம்

    பொதுவாக போர் பதற்ற காலங்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. ஆனால் இம்முறை நிலைமை சற்று வித்தியாசமாக உள்ளது. அமைதி ஒப்பந்தம் காரணமாக எண்ணெய் விலை 4 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. இதனால் எதிர்கால பணவீக்கம் குறையலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. மேலும் அமெரிக்க டாலர் மதிப்பும் 10 நாட்களில் இல்லாத அளவுக்கு பலவீனமடைந்தது.

    Advertisement

    அமெரிக்க மத்திய வங்கி

    டாலர் மதிப்பு குறைந்தால், மற்ற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்குவது மலிவாகிவிடும். இதுவே தங்கத்தின் மீதான தேவையை அதிகரித்து விலையை உயர்த்தியுள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த வாரம் வரை அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சந்தைகள் கருதின. ஆனால் அமைதி ஒப்பந்தம் குறித்த தகவலுக்குப் பிறகு அந்த எதிர்பார்ப்பு கணிசமாக குறைந்துள்ளது.

    வட்டி வருமானம்

    சந்தை கணிப்புகளின்படி, டிசம்பரில் வட்டி உயர்த்தப்படும் வாய்ப்பு கடந்த வாரம் 69 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 47 சதவீதமாக குறைந்துள்ளது. வட்டி விகிதம் அதிகரிக்கும் போது தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறையும். காரணம், தங்கம் வட்டி வருமானம் தராத சொத்து. ஆனால் வட்டி உயர்வு வாய்ப்பு குறைந்துள்ளதால் மீண்டும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    அமைதி ஒப்பந்தம்

    சந்தை ஆய்வாளர்களின் கருத்துப்படி, தற்போதைய அமைதி ஒப்பந்த செய்தியால் ஏற்பட்ட உடனடி எதிர்வினை மட்டுமல்ல. உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, பல நாடுகளின் கடன் சுமை, நாணய மதிப்பு குறித்த அச்சங்கள் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்கள் ஆகியவை நீண்ட காலத்தில் தங்கத்திற்கு ஆதரவாகவே இருக்கக்கூடும். எனினும் அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் எவ்வளவு உறுதியானதாக அமைகிறது என்பதே அடுத்த கட்ட விலை நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    வெள்ளி விலை

    தங்கம் மட்டுமல்லாமல் மற்ற விலைமதிப்புள்ள உலோகங்களும் நேற்று வலுவான ஏற்றம் கண்டன. வெள்ளி விலை 3.1 சதவீதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 70 டாலரை கடந்தது. பிளாட்டினம் 3.1 சதவீதமும், பலாடியம் 3.3 சதவீதமும் உயர்ந்தன. இதனால் உலக சந்தைகளில் முதலீட்டாளர்கள் மீண்டும் விலைமதிப்புள்ள உலோகங்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் எதிர்வரும் நாட்களில் பிரதிபலிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    English Summary

    Gold prices surge as US-Iran peace deal hopes weaken dollar and ease inflation concerns.