சென்னை: தங்கம் வாங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கும் சாமானிய மக்களுக்கு ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகத் தங்கம் மற்றும் நகைச் சந்தையில் மந்தமான சூழல் நிலவி வந்த நிலையில், வரும் பண்டிகைக் காலம் மற்றும் திருமண சீசன் காரணமாகத் தங்கத்தின் விலை அடுத்த 2 முதல் 3 மாதங்களில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகைத்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி நகை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான யுனிக் செயின்ஸ் அமைப்பின் இயக்குநர் சையாம் மெஹ்ரா தற்போதைய தங்கச் சந்தையின் போக்கு மற்றும் விலை நிலவரம் குறித்து முக்கிய கருத்துக்களை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.
தற்போது சந்தையில் 10 கிராம் தங்கம் ₹1.54 லட்சம் என்ற அளவில் இருப்பது, தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பு என்று சையாம் மெஹ்ரா சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச சந்தை மாற்றங்களால் குறுகிய காலத்தில் தங்கத்தின் விலையில் தற்காலிகமாக 10 முதல் 30 டாலர் வரையோ அல்லது உள்ளூர் சந்தையில் ₹500 முதல் ₹700 வரையோ சரிவு ஏற்படலாம். ஆனால், அடுத்த 15 முதல் 30 நாட்களில் தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக உயரத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.. எனவே, தற்காலிக விலை குறைவை நழுவவிடாமல் சரியான நேரத்தில் தங்கம் வாங்குவது புத்திசாலித்தனம் என்று கூறி உள்ளார் . கடந்த மூன்று மாதங்களாக நகைக் கடைகளில் விற்பனை சற்று மந்தமாகவே இருந்தது. ஆனால், ரக்ஷா பந்தன், செப்டம்பர் மாதப் பண்டிகைகள், வரவிருக்கும் சுபமுகூர்த்த மற்றும் திருமண சீசன் மற்றும் தீபாவளி, ஓணம் காரணமாக நகைகளுக்கான தேவை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நகைகளின் விற்பனை அளவு கடந்த ஆண்டைப் போலவே இருந்தாலும், தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதால் ஒட்டுமொத்த பண மதிப்பிலான விற்பனை பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 15 நாட்களில் நகை உற்பத்தியாளர்களுக்குப் பெருமளவில் ஆர்டர்கள் குவியத் தொடங்கியுள்ளன. உற்பத்தியாளர்களிடமிருந்து புதிய மாடல் நகைகள் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு வேகமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் அடுத்த மூன்று மாதங்கள் நகை வணிகத்திற்கு மிகவும் சாதகமான காலமாக அமையும். தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், பொதுமக்களின் வாங்கும் பழக்கத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எடை அதிகமான நகைகளுக்குப் பதிலாக, குறைவான எடை கொண்ட நகைகளையும், குறைந்த கேரட் ஆபரணங்களையும் மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். 9 கேரட், 14 கேரட் மற்றும் 18 கேரட் தங்க நகைகளுக்குக் கடைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, திருமண தேவைகளுக்கான 18 கேரட் முகூர்த்த நகைகள் அதிகம் விற்பனையாகின்றன. 40 கிராமுக்கு உட்பட்ட சிறிய நகை செட்கள் மற்றும் 60 கிராமுக்கு உட்பட்ட ஆரம் போன்ற நீண்ட நகை செட்களை மக்கள் தேடித் தேடி வாங்குகின்றனர். ஒருவர் மட்டுமே அதிக எடை கொண்ட நகைகளை வாங்குவதற்குப் பதிலாக, குறைந்த எடையில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் நகை வாங்க வருவது அதிகரித்துள்ளது. இதனுடன் சேர்த்து வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளது. விலை உயர்வால் புதிய தங்கத்தை முழுப் பணம் கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையாளர்கள், தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளைக் கொடுத்து புதிய டிசைன் நகைகளாக மாற்றிக் கொள்ளும் எக்ஸ்சேஞ்ச் முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனை ஊக்குவிக்கும் வகையில், பழைய நகைகளைக் கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புத் தள்ளுபடிகளையும் சலுகைகளையும் நகைக் கடைகள் வாரி வழங்கி வருகின்றன. இந்தியக் குடும்பங்களிடம் சுமார் 30,000 டன்களுக்கும் அதிகமான பழைய தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வெறும் 0.5% தங்கம் மறுசுழற்சி செய்யப்பட்டால் கூட, சுமார் 250 முதல் 300 டன் தங்கம் மீண்டும் சந்தைக்குள் புழக்கத்திற்கு வரும். இது நாட்டின் தங்க இறக்குமதியைச் சமன் செய்ய உதவும். இதுதொடர்பான கோல்ட் மானிடைசேஷன் திட்டம் குறித்து அரசுடன் ஆலோசனைகள் நடந்து வருவதால், அடுத்த இரு மாதங்களில் நல்ல அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது. அதேபோல், வளைகுடா நாடுகளில் பதற்றம் தணிந்துள்ளதால் துபாய் வழியாக ஏற்றுமதி சீராகி, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்க சந்தைகளிலும் இந்திய நகைகளுக்கான ஏற்றுமதி மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நகை வாங்கவும் முதலீடு செய்யவும் இதுவே சரியான காலகட்டமாகப் பார்க்கப்படுகிறது.தங்கம் வாங்க இதுவே சரியான தருணம்
மீண்டும் களைகட்டும் நகைக் கடைகள்
மக்களின் புதிய சாய்ஸ்: குறைந்த கேரட் மற்றும் லைட்வெயிட் நகைகள்!
பழைய நகை கொடுத்து புதிய நகை வாங்கும் முறை