படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி?

  • சென்னை: தங்கம் வாங்க காத்திருந்த மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ.3,440 வரை விலை சரிந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

    Advertisement

    வர்த்தகத்தின் கடைசி நாளான நேற்று (சனிக்கிழமையன்று) தங்கம் விலையில் மீண்டும் பெரிய அளவிலான சரிவைச் சந்தித்தது. அதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.230 குறைந்து ரூ.14,200 ஆக விற்பனையானது.

    Advertisement

    இதன் காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,840 குறைந்து ரூ.1,13,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, தற்போது சர்வதேச சந்தை காரணங்களால் படிப்படியாக குறைந்து வருகிறது.

    தங்கம் விலை சரிவு

    மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவி வந்த போர் பதற்றம் ஓரளவு தணிந்திருப்பதும், முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் பிற முதலீட்டு துறைகளுக்கு கவனம் திருப்பியிருப்பதும் விலை சரிவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. ஜூன் 1-ஆம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000 ஆக இருந்தது. அதன்பிறகு ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனையானது.

    Advertisement

    சவரன் விலை

    தொடர்ந்து ஜூன் 4-ஆம் தேதி பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,840 ஆகவும், ஜூன் 5-ஆம் தேதி மேலும் ரூ.400 குறைந்து ரூ.1,15,440 ஆகவும் விற்பனையானது. தற்போது ஜூன் 7-ஆம் தேதி மட்டும் பவுனுக்கு ரூ.1,840 குறைந்ததால், மொத்தமாக ஒரே வாரத்தில் ரூ.3,440 வரை தங்கம் விலை சரிந்துள்ளது. இந்த திடீர் சரிவு நகை வியாபாரிகள் மட்டுமின்றி, திருமணத்திற்காக தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள குடும்பங்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    சர்வதேச சந்தை

    தங்கம் விலை நிர்ணயத்தில் சர்வதேச சந்தை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அமெரிக்க பொருளாதார தரவுகள், வட்டி விகித நிலவரம், டாலரின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலைகள் ஆகியவை தங்கத்தின் விலையை நேரடியாக பாதிக்கின்றன. சமீபத்தில் அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் எதிர்பார்த்ததை விட வலுவாக இருந்ததால், அமெரிக்க மத்திய வங்கி உடனடியாக வட்டி விகிதத்தை குறைக்காது என்ற கருத்து சந்தையில் உருவாகியுள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் ஓரளவு குறைந்துள்ளது.

    Advertisement

    வெள்ளி விலை

    அதேபோல், மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வந்த பதற்றம் குறைந்திருப்பதும் தங்கத்தின் பாதுகாப்பு முதலீட்டு தேவையை குறைத்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையிலும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.270 ஆக விற்பனையானது. இதனால் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.10,000 குறைந்து ரூ.2.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை பயன்பாடு மற்றும் முதலீட்டு சந்தை மாற்றங்களும் வெள்ளி விலை குறைவுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன.

    சந்தை நிபுணர்கள்

    இதனால், தங்கம் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழ்நிலை, அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்தகட்ட முடிவுகள் மற்றும் உலக அரசியல் நிலவரம் ஆகியவற்றைப் பொறுத்தே அடுத்த சில வாரங்களில் தங்கத்தின் விலை இருக்கும் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    Gold prices have fallen sharply by ₹3,440 per sovereign in a week, bringing relief to jewellery buyers and families planning weddings.