வாஷிங்டன்: இந்தியாவில் தங்கம் வாங்க நினைப்போர் கவனிக்க வேண்டிய மிக முக்கிய அறிவிப்பு இன்று இரவு வெளியாகிறது. அதாவது அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், தனது வட்டி விகிதம் குறித்த முடிவை இந்திய நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு அறிவிக்க உள்ளது. இந்த முடிவு தான் அடுத்த சில மாதங்களுக்கு தங்கத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும்.
சர்வதேச சந்தையில் நேற்றைய தினம் தங்கம் விலை சுமார் 1 சதவீதம் உயர்ந்தது. ஒரு அவுன்ஸ் தங்கம் 4,051.78 டாலராக உயர்ந்தது. அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பணவீக்கம் அதிகரிக்கும் என்ற கவலை சற்று குறைந்தது. இதனால் அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை மேலும் உயர்த்துவதற்கான அழுத்தமும் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக தங்கம் விலை உயர்ந்தது.
நேற்றும் இன்றும் அமெரிக்காவில் நடந்த கூட்டத்தில் பெடரல் ரிசர்வ், வட்டி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தியது. இன்றிரவு 11.30 மணியளவில் வட்டி விகிதம் குறித்த முடிவுகளை அறிவிக்க போகிறது. தற்போதைய சூழலில் வட்டி விகிதத்தை மாற்ற வாய்ப்பு குறைவு என்றே பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதம் 0.25 சதவீத புள்ளி உயர்த்தப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தில் அது அதே நிலையில் தொடரும் என தெரிகிறது. ஆனால், அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்த அளவுக்கு கட்டுக்குள் வரவில்லை. இதனால் இன்றைய கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என்றாலும் கூட வரும் டிசம்பர் மாதம் நடக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டிசம்பரில் வட்டி உயர்த்த 83 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கம் விலை குறையும். ஏனென்றால் இதுபோன்ற சூழலில் வட்டி தரும் அமெரிக்க அரசு கடன் பத்திரங்களில் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்வார்கள். வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீதான ஆர்வம் குறையலாம். இதுபோன்ற சூழல்களில் அமெரிக்க டாலர் மதிப்பு வலுப்பெற்று தங்கம் விலை சரியும். இருப்பினும், இன்றைய தினம் இது நடக்க வாய்ப்பு குறைவு! மாறாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கவே வாய்ப்பு அதிகம். அப்போது பெடரல் ரிசர்வ் என்ன கருத்துகளை சொல்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். எதிர்காலத்தில் வட்டி உயர்வு இருக்கும் என சொன்னால் தங்கம் விலை சரியும். வட்டி விகிதத்தை உயர்த்த மாட்டோம் என சொன்னால் தங்கம் விலை ஏறும். எனவே, இன்றைய கூட்டத்தில் வட்டி விகித முடிவை விட, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பெட் தலைவர் என்ன சொல்கிறார் என்பதும் முக்கியம். இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை பொருத்தும் மாறுபடும். சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும், ரூபாய் மதிப்பு சரிந்தால் இந்தியாவில் விலை பெரியளவில் சரியாமல் போகலாம். இருப்பினும், இன்றிரவு அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருக்கும் என்பதால் தங்கம் விலை லேசாக உயரும். இருப்பினும், டிசம்பர் மாதம் வரை பெரிய ஏற்ற இறக்கம் இருக்காது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் அடுத்த கூட்டம் டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு மிக மிக அதிகம். அப்போது தங்கம் விலை மிக பெரியளவில் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.இன்றிரவு வரும் அறிவிப்பு
என்ன நடக்கும்
என்ன சொல்ல போகிறார்?
ரூபாய் மதிப்பும் முக்கியம்