நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்!

  • நியூயார்க்: உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்துள்ளது. ஹார்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் குறையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளதோடு, பணவீக்கம் குறித்த கவலைகளும் ஓரளவு தணிந்ததால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கம் வாங்கும் நிலைக்கு திரும்பியுள்ளனர்.

    Advertisement

    சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 1.6 சதவீதம் வரை உயர்ந்து 4,580 டாலர் அளவுக்கு சென்றது. கடந்த வாரத்தில் ஏற்பட்ட சரிவை இந்த உயர்வு முழுமையாக சமநிலைப்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் சமாதான பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவது குறித்து இன்னும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், இரு நாடுகளின் இறுதி ஒப்புதலுக்கு சில நாட்கள் ஆகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தங்கம் விலை

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், "ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து ஈரானை அவசரப்படுத்த மாட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "ஹார்முஸ் பிரச்சினையில் விரைவில் நல்ல தகவல் வரலாம்" என்று கூறியிருப்பதும் சந்தையில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Advertisement

    அமெரிக்கா

    இருப்பினும், தங்கத்தின் இந்த விலை உயர்வு இன்னும் எச்சரிக்கையுடனேயே சந்தை நகர்வதாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல முறை அமெரிக்காவின் அறிவிப்புகள் நடைமுறைக்கு வராமல் போன அனுபவம் இருப்பதால், முதலீட்டாளர்கள் முழுமையான உறுதிப்படுத்தலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    ஈரான் மோதல்

    இதற்கிடையில், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தொடங்கிய ஈரான் மோதலுக்குப் பிறகு தங்கத்தின் விலை மொத்தத்தில் சுமார் 13 சதவீதம் வரை சரிந்துள்ளது. காரணம், மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வு எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதே என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் உலகளவில் பணவீக்க அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டின் இறுதிக்குள் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற கணிப்பு வலுத்துள்ளது.

    Advertisement

    அமெரிக்க மத்திய வங்கி

    பொதுவாக வட்டி விகிதம் உயர்ந்தால் வட்டி வருமானம் தராத தங்க முதலீட்டின் மீது அழுத்தம் ஏற்படும். புதிய அமெரிக்க மத்திய வங்கி தலைவராக பொறுப்பேற்றுள்ள கெவின் வார்ஸ் (Kevin Warsh) பொருளாதாரம் குறித்து எப்படிப்பட்ட அணுகுமுறையை எடுக்கிறார் என்பதையும் முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மேலும், ஈரானின் அணு திட்டம் தொடர்பான முக்கிய விவரங்கள் இன்னும் வெளிவராததால், தங்கத்தின் விலை உயர்வை முழுமையாக நம்பி பெரிய அளவில் முதலீடு செய்ய சந்தையில் தயக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    வெள்ளி விலை

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங் மற்றும் தென் கொரியா சந்தைகள் விடுமுறையால் மூடப்பட்டிருந்ததால், உலக சந்தையில் வர்த்தக பரிவர்த்தனை குறைவாக இருந்தது. இதுவும் தங்க விலை மாற்றத்தில் தாக்கம் ஏற்படுத்தியதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் தங்கத்துடன் சேர்த்து வெள்ளி விலையும் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பிளாட்டினம் மற்றும் பலேடியம் போன்ற உலோகங்களின் விலைகளும் உயர்வு கண்டுள்ளன. அதேசமயம் அமெரிக்க டாலர் மதிப்பு சற்று குறைந்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.

    English Summary

    Gold prices jump sharply as investors closely watch US-Iran talks, inflation fears and Federal Reserve policy signals.